பாடல் #1367: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
பண்ணிய பொன்னைப் பகைப்பற நீபிடி
யெண்ணிய நாள்களி லின்பமே யெய்திடு
நண்ணிய நாமமு நான்முக னொத்திடுஞ்
சொல்லிய லேறிற் சொக்கனு மாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பணணிய பொனனைப பகைபபற நீபிடி
யெணணிய நாளகளி லின்பமெ யெயதிடு
நணணிய நாமமு நானமுக னொததிடுஞ
சொலலிய லெறிற சொககனு மாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பண்ணிய பொன்னை பகைப்பு அற நீ பிடி
எண்ணிய நாள்களில் இன்பமே எய்திடும்
நண்ணிய நாமமும் நான் முகன் ஒத்திடும்
சொல் இயல் ஏறில் சொக்கனும் ஆகுமே.
பதப்பொருள்:
பண்ணிய (சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய) பொன்னை (தங்கத் தகடை) பகைப்பு (எந்தவித குற்றங்களோ தீய எண்ணங்களோ) அற (இல்லாமல்) நீ (சாதகர்) பிடி (கைவரப் பெற்றால்)
எண்ணிய (சாதகர் சாதகத்தில் தியானித்து இருக்கும்) நாள்களில் (அனைத்து நாட்களிலுமே) இன்பமே (பேரின்பமே) எய்திடும் (கிடைத்துக் கொண்டிருக்கும்)
நண்ணிய (சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும்) நாமமும் (நவாக்கிரி சக்கரத்திலுள்ள பீஜ மந்திரங்களும்) நான் (நான்கு) முகன் (முகங்களைக் கொண்ட பிரம்மனின்) ஒத்திடும் (படைத்தல் தொழிலுக்கு சமமான சக்தி மந்திரத்திற்கும் வரப் பெறும்)
சொல் (சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் மந்திர பீஜங்களின்) இயல் (சக்தியின் இயல்பை) ஏறில் (முழுவதுமாகப் பெற்று விட்டால்) சொக்கனும் (சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும்) ஆகுமே (ஆகிவிடுவார்).
விளக்கம்:
பாடல் #1366 இல் உள்ள முறைப்படி சாதகர் சாதகத்தால் சக்தியேற்றிய தங்கத் தகடை எந்தவித குற்றங்களோ தீய எண்ணங்களோ இல்லாமல் சாதகர் கைவரப் பெற்றால் அவர் தியானித்து இருக்கும் அனைத்து நாட்களிலுமே பேரின்பமே கிடைத்துக் கொண்டிருக்கும். சாதகர் சாதகத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலுள்ள பீஜ மந்திரங்களும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மனின் படைத்தல் தொழிலுக்கு சமமான சக்தி மந்திரத்திற்கும் வரப் பெறும். அதன் பிறகு அந்த மந்திர பீஜங்களின் சக்தியின் இயல்பை சாதகர் முழுவதுமாகப் பெற்று விட்டால் சாதகரும் சிவனைப் போலவே அன்பாளனாகவும் அருளாளனாகவும் ஆகிவிடுவார்.