பாடல் #555

பாடல் #555: மூன்றாம் தந்திரம் – 3. நியமம்

ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதியை உணர்ந்து நியமத்த னாமே.

விளக்கம்:

ஆதியாய் முதற் பொருளானவனை, வேதத்தின் பொருளாக உள்ளவனை, அக்கினி சொரூபமானவனை, அக்கினியின் வெப்பமானவனை, திருமேனியில் சரிபாதியாக பராசத்தியோடு இருக்கும் இறைவனை உணர்ந்து சத்தியத்தை கடைபிடிப்பவனே நியமத்தைக் கடைபிடிப்பவன் ஆவான்.

பாடல் #556

பாடல் #556: மூன்றாம் தந்திரம் – 3. நியமம் (நன்மைகளை செய்தல்)

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

விளக்கம்:

  1. தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல், 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் கொண்டவரே நியமத்தின் வழியின்படி இருப்பவர்.

பாடல் #557

பாடல் #557: மூன்றாம் தந்திரம் – 3. நியமம் (நன்மைகளைப் பெறுதல்)

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

விளக்கம்:

  1. தவம் செய்தல், 2. ஜெபித்தல், 3. பேரின்பம் அடைதல், 4. தெய்வ நம்பிக்கையோடிருத்தல், 5. தானம் செய்தல், 6. சிவ விரதம் கடைபிடித்தல், 7. ஞானத்தைப் பற்றிய உண்மையைக் கேட்டறிதல், 8. யாகம் செய்தல், 9. சிவ பூஜை செய்தல், 10. எண்ணத்தையும் இறைவனையும் இரண்டறக் கலத்தல் ஆகிய பத்தையும் உணர்ந்து பிறருக்குக் அறியக் கூறவும் செய்பவனே நியமத்தின் வழி நடப்பவனாவான்.