பாடல் #1091

பாடல் #1091: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

தாமக் குழலி தயைக்கண்ணி யுண்ணின்ற
வேமத் திருளற வீசு மிளங்கொடி
யோமப் பெருஞ்சுட ருள்ளெழு நுண்புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே.

விளக்கம்:

பாடல் #1090 இல் உள்ளபடி குருவாகிய இறைவன் அருளிய வழிமுறையில் சாதகம் செய்தால் நறுமணம் வீசுகின்ற மலர்களை சூடியிருக்கும் கூந்தலுடன் கருணை பொழியும் கண்களை உடைய வயிரவியானவள் சாதகர்களின் உள்ளுக்குள்ளே வீற்றிருந்து அவர்களின் ஆணவம் மலத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி அருளுவாள். வெளியில் செய்யும் யாகத்தீயில் வரும் நுண்மையான புகையைப் போலவே உள்ளுக்குள் இருக்கும் மூலாதார அக்னியிலிருந்து குண்டலினி சக்தியை ஒவ்வொரு சக்கரங்களாக மேலே ஏற்றிச் சென்று தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே அமிழ்தத்தை சுரக்க வைத்து அதைப் பருகிய ஆன்மா ஆணவத்திலிருந்து முழுவதும் மீண்டு தூய்மையானதாக திரும்பி வருவதைக் காணுங்கள்.

பாடல் #1090

பாடல் #1090: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உரைத்த நவசத்தி யொன்று முடிய
நிரைத்த விராசி நெறிமுறை எண்ணிப்
பிரைச்சத மெட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமஞ்செய் தானே.

விளக்கம்:

பாடல் #1089 இல் உள்ளபடி இறைவன் அருளிய ஒன்பது சக்திகளை வழிபடும் முறையை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். வயிரவியின் ஒன்பது சக்திகளில் முதன்மையாக இருக்கும் மனோன்மணியைச் சுற்றி வயிரவி செய்யும் 12 கலைகளை (பாடல் #1075 இல் உள்ளபடி) எண்ணத்தில் வைத்து தியானித்து வயிரவி இருக்கும் திருக்கோலத்தை தமக்குள் தரிசிக்கும் முன்பே அதை எவ்வாறு செய்ய வேண்டும் அதற்கான வழி முறைகள் என்னென்ன என்பதை குருவாக இருந்து இறைவனே கொடுத்து அருளினார்.

கருத்து: வயிரவி செய்யும் பன்னிரண்டு செயல்களை எண்ணி தியானித்தால் வயிரவியின் திருக்கோலத்தை தரிசிக்கும் வழியை இறைவனே குருவாக வந்து அருளுவார்.

பாடல் #1089

பாடல் #1089: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அந்த நடுவிர லாதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி யுரைசெயுஞ்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி யிதனை நவமுரைத் தானே.

விளக்கம்:

சுண்டு விரலில் உள்ள மூன்று கோடுகளில் ஆரம்பித்து நடு விரலில் உள்ள மூன்று கோடுகளில் முடிக்கும்படி மொத்தம் ஆறு எழுத்துக்கள் கொண்ட தூய தமிழ் மந்திரத்தை குருவின் அருளால் பெற்று அதை முதலில் நேர் மறையாகவும் பின்பு எதிர்மறையாக மாற்றியும் ஓதி வழிபடுங்கள் என்று குருவாக இருக்கும் இறைவன் ஒன்பது சக்திகளை வழிபடும் முறையாக அருளினான்.

பாடல் #1088

பாடல் #1088: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

காரணி மந்திர மோதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரண நந்தி நடுவங் குரைசெய்த
ஆரண வேதநா லந்தமும் ஆமே.

விளக்கம்:

பாடல் #1087 இல் உள்ளபடி முத்தொழில்களுக்கு நன்மை செய்யும் காரணியாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தாமரை மலரின் மேல் அமர்ந்து கொண்டு வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கின்ற பிரம்மாவின் படைத்தல் தொழில், உயிர்கள் அனைத்திற்கும் மூச்சுக்காற்றாக இயங்கிக் கொண்டு அவற்றை காப்பாற்றுகின்ற விஷ்ணுவின் காத்தல் தொழில், உலகத்தில் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நடுநிலையான சாட்சியாக நின்று அவரவர்களின் செயல்களுக்கேற்ப கர்மங்களை அழித்தருளுகின்ற சிவனின் அழித்தல் தொழில் ஆகிய மூன்று தொழில்களாகவும் அந்த தொழில்களால் வகுக்கப்படுகின்ற வேதத்தின் எல்லையாகவும் இருக்கின்றாள்.

குறிப்பு: வேதம் என்பது உலகத்திலுள்ள அனைத்து செயல்களுக்கும் காரணமாகவும் காரியமாகவும் இருக்கின்றது. அவற்றின் எல்லையாக (முடிவில் சென்று சேருகின்ற இடம்) திரிபுரை சக்தி இருப்பதை இந்த பாடலில் அறியலாம்.

பாடல் #1087

பாடல் #1087: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங்
காணுந் தலைவிநற் காரணி காணே.

விளக்கம்:

பாடல் #1086 இல் உள்ளபடி யோகியர்கள் தரிசித்த திரிபுரை சக்தியானவள் உலகத்தில் காணப்படுகின்ற அனைத்து விதமான தெய்வங்களின் உருவமாகவே இருக்கின்றாள். ஒரே விதமான தங்கத்திலிருந்து பலவிதமான நகைகள் செய்யப்படுவது போல ஒரே சக்தியானவள் அனைத்து தெய்வங்களாக இருக்கின்றாள். சாதகர்கள் போற்றுகின்ற மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் செய்கின்ற அழித்தல், படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களுக்கு நன்மை செய்யும் காரணியாக திரிபுரை சக்தியே இருப்பதைக் கண்டுகொள்ளுங்கள்.

கருத்து: உலகத்து உயிர்கள் வணங்குகின்ற பலவிதமான தெய்வங்கள் அனைத்துமே ஒரே சக்தியான திரிபுரையின் அம்சங்களாகவே இருக்கின்றன என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1086

பாடல் #1086: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பூசனை கெந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகந்
தேசந் திகழுந் திரிபுரை காணே.

விளக்கம்:

பாடல் #1085 இல் உள்ளபடி யோகியர்களின் உள்ளத்திற்குள் வந்து வீற்றிருக்கும் பராசக்தியை மானசீகமாக பூஜிக்கும் முறையை இந்தப் பாடலில் அறியலாம். சந்தனம் குங்குமம் பன்னீர் முதலிய நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்தும், வாசனை மிக்க மலர்களை மாலையாக செய்து அணிவித்தும், தங்களின் மூச்சுக்காற்றையே நாதஸ்வரமாகவும் இதயத் துடிப்பை மிருதங்க வாத்தியமாகவும் பல நாடிகளின் துடிப்புகள் உபவாத்தியங்களாகவும் கொண்டு இசைத்தும், மணியடித்தால் எதிரொலிக்கும் ஒலி போல வாயால் உச்சரிக்காமல் மனதிற்குள்ளேயே உள்ளுக்குள் எதிரொலிக்கும்படி மந்திரங்களை செபித்தும் யோகம் செய்து உலகங்கள் அனைத்திலும் நிறைந்து இருக்கும் திரிபுரையை தரிசிக்கலாம்.

கருத்து: மானசீக பூஜையின் மகத்துவத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1085

பாடல் #1085: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோ டெண்டிசை தாங்கு மருட்செல்வி
புண்டரி கத்தினுள்ளும் பூசனை யாளே.

விளக்கம்:

பாடல் #1084 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த வயிரவி தனது நான்கு கைகளிலும் சிலம்பு வளையல் சங்கு சக்கரம் ஆகியவற்றை ஏந்திக்கொண்டு இருக்கின்றாள். அவள் இருக்கும் எட்டுத் திசைகளிலும் யோகம் செய்த யோகியர்களுக்கு இறைவியான பராசக்தியின் உருவமாக அண்டசராசரங்களையும் அதிலிருக்கும் எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டு இருக்கும் அருள் வடிவாக அவர்களின் நெஞ்சத்தாமரைக்குள் வீற்றிருந்து அவர்களின் பூஜையை ஏற்றுக் கொள்பவளாக இருக்கின்றாள்.

கருத்து: வயிரவி மந்திரத்தை சாதகம் செய்து 64 கலைகளுக்கான தேவியர்களை சாதகர்கள் தரிசித்தனர். அதன் பிறகு எட்டு திசைகளிலும் இருக்கும் 64 தேவியர்களுக்கும் இறைவியான பராசக்தியை யோகம் செய்தால் அவள் அருள் வடிவாக யோகியர்களின் உள்ளத்திற்குள் வந்து வீற்றிருப்பாள். இவளே யோகியர்கள் செய்கின்ற பூஜையை ஏற்றுக்கொள்பவளாக இருக்கின்றாள். யோகியர்கள் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்பதை அடுத்த பாடலில் அருளுகின்றார்.

பாடல் #1084

பாடல் #1084: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பூரித்த பூவித ழெட்டினுக் குள்ளேயோர்
ஆரியத் தாளுண்டங் கோரெண்மர் கன்னியர்
பாரித்த பெண்க ளறுபத்து நால்வருஞ்
சாரித்துச் சத்தியைத் தாங்கள்கண் டாரே.

விளக்கம்:

பாடல் #1083 இல் உள்ளபடி பேரானந்தத்தில் பூரித்து இருக்கின்ற வயிரவியின் பூப்போன்ற இதழ்களிலிருந்து (வாயிலிருந்து) எட்டுவிதமான கன்னியர்கள் தோன்றி எட்டு திசைகளுக்கும் ஒவ்வொருவராக இருக்கின்றார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் எட்டுவிதமான கலைகள் தோன்றி அந்தந்த கலைகளுக்கான தேவியர்களாக மொத்தம் 64 கலைகளுக்கு 64 தேவியர்களாக இருக்கின்றார்கள். வயிரவி மந்திரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்கள் வயிரவியின் அம்சமான 64 தேவியர்களின் தரிசனத்தை கண்பார்கள்.

பாடல் #1083

பாடல் #1083: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக் காதி யுழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தாள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே.

விளக்கம்:

பாடல் #1082 இல் உள்ளபடி பலவிதமான நவரத்தினங்களை சூடிக்கொண்டு இருக்கின்ற வயிரவியின் திருமுடியானது கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கின்றது. அவளின் காதுகளில் மணியோசையை எழுப்பும் அழகிய குண்டலங்களை அணிந்திருக்கின்றாள். அவளின் கண்கள் அழகிய மானின் கண்களைப் போல இருக்கின்றது. சிறந்த மணிகளைப் போல பிரகாசிக்கும் சூரியனையும் சந்திரனையும் அவளின் இரு கண்களாக வைத்திருக்கின்றாள். அவளின் திருமுகம் அக்னியில் உருக்கும் தங்கம் போல் ஜொலித்துக் கொண்டு பேரானந்தத்தில் இருக்கின்றாள்.

கருத்து:

கோடி சந்திரனைப் போல பிரகாசிக்கும் திருமுடி என்பது அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பதைக் குறிக்கின்றது. மணியோசை எழுப்பும் குண்டலங்கள் என்பது உயிர்களுக்குள் இருக்கும் ஓங்கார நாதத்தை எழுப்புவதைக் குறிக்கின்றது. மானைப் போன்ற கண்கள் என்பது எப்போது தன்னை வந்து சரணடைவார்கள் என்று சாதகர்களைத் தேடுவதைக் குறிக்கின்றது. சூரிய சந்திர நயனத்தாள் என்பது தன்னை வந்து சரணடைய முயற்சி செய்யும் சாதகர்களுக்கு வழிகாட்டும் சோதியாக இருப்பதைக் குறிக்கின்றது. பொன்மணி வன்னி என்பது ஒளிவிடும் நெருப்புச் சுடர்போல எங்கும் நிறைந்து தன்னை நினைப்பவர்களின் மனதை மகிழ்ச்சியில் நிரப்புவதைக் குறிக்கின்றது.

பாடல் #1082

பாடல் #1082: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லிய லொப்பது காணுந் திருமேனி
பல்லிய லாடையும் பன்மணி தானே.

விளக்கம்:

பாடல் #1081 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானவளாக மெல்லிய உருவம் கொண்டு நிற்கின்ற வயிரவி மென்மையான கொடி போன்ற இடையைக் கொண்டும், விஷம் போன்ற கடினத் தன்மையின் உருவமாகவும், கிளிமூக்கு போன்ற சிவந்த நிறமுள்ள இதழ்களைக் கொண்டும், அழகிய ஆபரணங்களை அணிந்து கொண்டும், நீலக்கல்லைப் போன்ற நீல நிறம் கொண்ட திருமேனியையும், பலவிதமான ஆடைகளை அணிந்து கொண்டும், பலவிதமான நவரத்தினங்களை சூடிக்கொண்டும் இருக்கின்றாள்.

கருத்து:

வயிரவியின் திருமேனியை இப்பாடலில் உருவகிக்கலாம். மெல்லியல் என்பது மென்மையான தன்மையைக் குறிக்கும். வஞ்சி என்பது சாதகர்களை சோதித்து அவர்களை மேன்மைப் படுத்தும் தன்மையைக் குறிக்கும். விடமி கலைஞானி என்பது உயிர்களின் வினைகளுக்கேற்ப வஞ்சித்தலும் தண்டித்தலும் செய்யும் தன்மையைக் குறிக்கும். கிஞ்சுக நிறம் என்பது சாதகர்கள் மேல் அன்பைப் பொழியும் தன்மையைக் குறிக்கும். சேயிழை, பல்லியல் ஆடை, பன்மணி ஆகிய அனைத்தும் தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு இருப்பதைக் குறிக்கும். நீல நிறத்தைக் கொண்ட திருமேனி என்பது மழை போல வரங்களை அள்ளித் தருகின்ற தன்மையைக் குறிக்கும்.