பாடல் #1477

பாடல் #1477: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சாற்றுஞ் சன்மார்கமாந் தற்சிவ தத்துவந்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்ற மொழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாறறுஞ சனமாரகமாந தறசிவ தததுவந
தொறறங களான சுருதிச சுடரகணடு
சீறற மொழிநது சிவயொக சிததராயக
கூறறததை வெனறார குறிபபறிந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாற்றும் சன் மார்க்கம் ஆம் தற் சிவ தத்துவம்
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவ யோக சித்தர் ஆய்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே.

பதப்பொருள்:

சாற்றும் (எடுத்து சொல்லப் படுகின்ற) சன் (உண்மையான) மார்க்கம் (வழியாக) ஆம் (இருப்பது) தற் (தாமே) சிவ (சிவமாக இருக்கின்ற) தத்துவம் (தத்துவம் ஆகும்)
தோற்றங்கள் (பல விதமாக காணுகின்ற அனைத்து தோற்றங்களாக) ஆன (இருக்கின்ற) சுருதி (சத்தமும்) சுடர் (வெளிச்சமுமாக இருக்கின்ற) கண்டு (இறை தத்துவத்தை தமக்குள்ளே கண்டு உணர்ந்து)
சீற்றம் (அதன் பயனால் காமம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் ஆகிய அனைத்தும்) ஒழிந்து (அழிந்து போய்) சிவ (சிவ) யோக (யோகத்தையே) சித்தர் (சித்தமாக கொண்டு இருப்பவர்களாக) ஆய் (ஆகி)
கூற்றத்தை (இறப்பு என்கின்ற ஒன்றை) வென்றார் (வென்று விட்டவர்களே) குறிப்பு (இந்த சன் மார்க்கம் என்று சொல்லப் படுகின்ற இறை தத்துவத்தின் பொருளை) அறிந்தார்களே (அறிந்தவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

எடுத்து சொல்லப் படுகின்ற உண்மையான வழியாக இருப்பது தாமே சிவமாக இருக்கின்ற தத்துவம் ஆகும். பல விதமாக காணுகின்ற அனைத்து தோற்றங்களாக இருக்கின்ற சத்தமும் வெளிச்சமுமாக இருக்கின்ற இறை தத்துவத்தை தமக்குள்ளே கண்டு உணர்ந்து அதன் பயனால் காமம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் ஆகிய அனைத்தும் அழிந்து போய் சிவ யோகத்தையே சித்தமாக கொண்டு இருப்பவர்களாகி இறப்பு என்கின்ற ஒன்றை வென்று விட்டவர்களே இந்த சன் மார்க்கம் என்று சொல்லப் படுகின்ற இறை தத்துவத்தின் பொருளை அறிந்தவர்கள் ஆவார்கள்.

பாடல் #1478

பாடல் #1478: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
யுய்ய வகுத்த குருநெறி யொன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவப பெருமைத தனிநா யகனநநதி
யுயய வகுதத குருநெறி யொனறுணடு
தெயவச சிவநெறி சனமாரகஞ செரநதுயய
வையததுள ளாரககு வகுததுவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ பெருமை தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குரு நெறி ஒன்று உண்டு
தெய்வ சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே.

பதப்பொருள்:

சைவ (சைவம் எனும் வழிமுறைக்கு) பெருமை (பெருமையளிக்கும்) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குருநாதராகவும் நிற்கின்ற இறைவன்)
உய்ய (ஆன்மாக்கள் மேல் நிலையை அடைவதற்கு) வகுத்த (அவரவரது பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து அருளிய) குரு (குரு) நெறி (வழி முறை) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது)
தெய்வ (அதுவே தெய்வ அம்சமாகிய) சிவ (சிவத்தை) நெறி (அடைகின்ற வழி முறை ஆகும்) சன்மார்க்கம் (அதனுடன் உண்மை வழியாகிய தாமும் பார்க்கின்ற பொருளும் அந்த இறைவனாகவே இருக்கின்ற தத்துவமும்) சேர்ந்து (சேர்ந்து) உய்ய (மேல் நிலையை அடைவதற்காக)
வையத்து (உலகத்தில்) உள்ளார்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும்) வகுத்து (அதனதன் பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து) வைத்தானே (வைத்து அருளுகின்றான் குரு நாதனாக நிற்கின்ற இறைவன்).

விளக்கம்:

சைவம் எனும் வழிமுறைக்கு பெருமையளிக்கும் தனிப் பெரும் தலைவனாகவும் குருநாதராகவும் நிற்கின்ற இறைவன் ஆன்மாக்கள் மேல் நிலையை அடைவதற்கு அவரவரது பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து அருளிய குரு வழி முறை ஒன்று இருக்கின்றது. அதுவே தெய்வ அம்சமாகிய சிவத்தை அடைகின்ற வழி முறை ஆகும். அதனுடன் உண்மை வழியாகிய தாமும் பார்க்கின்ற பொருளும் அந்த இறைவனாகவே இருக்கின்ற தத்துவமும் சேர்ந்து மேல் நிலையை அடைவதற்காக உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் பக்குவத்திற்கு ஏற்றபடி கொடுத்து வைத்து அருளுகின்றான் குரு நாதனாக நிற்கின்ற இறைவன்.

பாடல் #1479

பாடல் #1479: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலையத் தோர்க்குத்
தருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்கந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெரிசிககப பூசிககச சிநதனை செயயப
பரிசிககக கீரததிககப பாதுகஞ சூடக
குருபததி செயயுங குவலையத தொரககுத
தருமுததி சாரபூடடுஞ சனமாரகந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட
குரு பத்தி செய்யும் குவலயத்தோர்க்கு
தரு முத்தி சார்பு ஊட்டும் சன் மார்கம் தானே.

பதப்பொருள்:

தெரிசிக்க (குருவை இறைவனாகவே தரிசிப்பதும்) பூசிக்க (அவரை பூசிப்பதும்) சிந்தனை (குருவின் திருவுருவத்தை தியானத்தில் சிந்தனை) செய்ய (செய்வதும்)
பரிசிக்க (குருவின் அருகாமையை அனுவிப்பதும்) கீர்த்திக்க (அவரது புகழை போற்றி பாடுவதும்) பாதுகம் (அவரது திருவடிகளில் இருக்கும் பாதுகைகளை) சூட (தமது தலை மேல் சூடுவதும்)
குரு (ஆகிய இவற்றை எல்லாம் செய்து தமது குருவுக்கு) பத்தி (பக்தியை) செய்யும் (முறைப்படி செய்கின்ற) குவலயத்தோர்க்கு (உலகத்தவர்களுக்கு)
தரு (அதன் பயனால் தருகின்ற) முத்தி (முக்தி நிலைக்கு) சார்பு (சார்பாக) ஊட்டும் (இருந்து அனுபவிக்க வைப்பது) சன் (உண்மையான) மார்கம் (வழி) தானே (ஆகும்).

விளக்கம்:

குருவை இறைவனாகவே தரிசிப்பதும் அவரை பூசிப்பதும் குருவின் திருவுருவத்தை தியானத்தில் சிந்தனை செய்வதும் குருவின் அருகாமையை அனுவிப்பதும் அவரது புகழை போற்றி பாடுவதும் அவரது திருவடிகளில் இருக்கும் பாதுகைகளை தமது தலை மேல் சூடுவதும் ஆகிய இவற்றை எல்லாம் செய்து தமது குருவுக்கு பக்தியை முறைப்படி செய்கின்ற உலகத்தவர்களுக்கு அதன் பயனால் தருகின்ற முக்தி நிலைக்கு சார்பாக இருந்து அனுபவிக்க வைப்பது உண்மையான வழியாகும்.

பாடல் #1480

பாடல் #1480: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீராப் பிறப்பே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெளிவறி யாதார சிவனை யறியார
தெளிவறி யாதார சீவனு மாகார
தெளிவறி யாதார சிவமாக மாடடார
தெளிவறி யாதவர தீராப பிறபபெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியாதவர் தீரா பிறப்பே.

பதப்பொருள்:

தெளிவு (குருவின் அருளால் ஞானத் தெளிவை) அறியாதார் (அறியாதவர்கள்) சிவனை (சிவப் பரம்பொருளை) அறியார் (அறிந்து கொள்ள மாட்டார்கள்)
தெளிவு (குருவின் அருளால் ஞானத் தெளிவை) அறியாதார் (அறியாதவர்கள்) சீவனும் (தமது ஆத்ம ஞானத்தில்) ஆகார் (முழுமை அடைய மாட்டார்கள்)
தெளிவு (குருவின் அருளால் ஞானத் தெளிவை) அறியாதார் (அறியாதவர்கள்) சிவம் (தாமும் சிவமாக) ஆக (ஆக) மாட்டார் (மாட்டார்கள்)
தெளிவு (குருவின் அருளால் ஞானத் தெளிவை) அறியாதவர் (அறியாதவர்களுக்கு) தீரா (எப்போதும் தீர்ந்து விடாமல்) பிறப்பே (பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்).

விளக்கம்:

குருவின் அருளால் ஞானத் தெளிவை அறியாதவர்கள் சிவப் பரம்பொருளை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தமது ஆத்ம ஞானத்தில் முழுமை அடைய மாட்டார்கள். அவர்கள் சிவமாக ஆக மாட்டார்கள். அவர்களுக்கு எப்போதும் தீர்ந்து விடாமல் பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பாடல் #1481

பாடல் #1481: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாமொழிப் பான்முத்த ராவது
மீனமில் ஞானா னுபூதியி லின்பமுந்
தானவ னாயறற லானசன் மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானவ னாகித தானைநதா மலஞசெறறு
மொனம தாமொழிப பானமுதத ராவது
மீனமில ஞானா னுபூதியி லினபமுந
தானவ னாயறற லானசன மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று
மோனம் அதாம் ஒழிப்பான் முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனுபூதி இல் இன்பமும்
தான் அவன் ஆய் அற்றல் ஆன சன் மார்க்கமே.

பதப்பொருள்:

தான் (குருவருளால் தெளிவு பெற்றவர்கள் தாம்) அவன் (சிவமாகவே) ஆகி (ஆகுவதும்) தான் (தம்மிடம் இருக்கின்ற) ஐந்தாம் (ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி ஆகிய ஐந்து விதமான) மலம் (மலங்களையும்) செற்று (அழிப்பதும்)
மோனம் (மௌனம்) அதாம் (என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலையில்) ஒழிப்பான் (எண்ணங்கள் அனைத்தையும் அழித்து) முத்தர் (முக்தி நிலை பெற்றவராக) ஆவதும் (ஆகுவதும்)
ஈனம் (ஒரு குறையும்) இல் (இல்லாத) ஞான (பேரறிவு ஞானத்தை) அனுபூதி (தமது அனுபவித்தில் உணர்ந்து) இல் (அதில்) இன்பமும் (பேரின்பம் பெறுவதும்)
தான் (தாமே) அவன் (சிவமாக) ஆய் (ஆகி) அற்றல் (தான் எனும் எண்ணமே இல்லாமல் இருப்பதும்) ஆன (ஆகிய இவை அனைத்துமே) சன் (உண்மையான) மார்க்கமே (வழிகளாகும்).

விளக்கம்:

குருவருளால் தெளிவு பெற்றவர்கள் தாம் சிவமாகவே ஆகுவதும் தம்மிடம் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி ஆகிய ஐந்து விதமான மலங்களையும் அழிப்பதும் மௌனம் என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலையில் எண்ணங்கள் அனைத்தையும் அழித்து முக்தி நிலை பெற்றவராக ஆகுவதும் ஒரு குறையும் இல்லாத பேரறிவு ஞானத்தை தமது அனுபவித்தில் உணர்ந்து அதில் பேரின்பம் பெறுவதும் தாமே சிவமாக ஆகி தான் எனும் எண்ணமே இல்லாமல் இருப்பதும் ஆகிய இவை அனைத்துமே உண்மையான வழிகளாகும்.

ஐந்து விதமான மலங்கள்

  1. ஆணவம் – செருக்கு, மமதை
  2. கன்மம் – வினைப் பயன்
  3. மாயை – பொய்யான தோற்றம்
  4. மாயேயம் – அசுத்த மாயை
  5. திரோதாயி – உண்மையை மறைத்தல்

பாடல் #1482

பாடல் #1482: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சன்மார்கத் தார்க்கு முகத்தோடு பீடமுஞ்
சன்மார்கத் தார்க்கு மிடத்தோடு தெய்வமுஞ்
சன்மார்கத் தார்க்கும் வருக்கந் தெரிசன
மெய்மார்கத் தார்க்கு மியம்புவன் கேண்மினே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரகத தாரககு முகததொடு பீடமுஞ
சனமாரகத தாரககு மிடததொடு தெயவமுஞ
சனமாரகத தாரககும வருககந தெரிசன
மெயமாரகத தாரககு மியமபுவன கெணமினெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்கத்தார்க்கு முகத்தோடு பீடமும்
சன் மார்கத்தார்க்கும் இடத்தோடு தெய்வமும்
சன் மார்கத்தார்க்கும் வருக்கம் தெரிசனம்
மெய் மார்கத்தார்க்கும் இயம்புவன் கேண்மினே.

பதப்பொருள்:

சன் (உண்மையான) மார்கத்தார்க்கு (வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின்) முகத்தோடு (முகமே) பீடமும் (இறைவன் அமர்ந்து இருக்கின்ற பீடமாகவும்)
சன் (உண்மையான) மார்கத்தார்க்கும் (வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்கள்) இடத்தோடு (இருக்கின்ற இடமே) தெய்வமும் (இறைவன் வீற்றிருக்கின்ற கோயிலாகவும்)
சன் (உண்மையான) மார்கத்தார்க்கும் (வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின்) வருக்கம் (கூட்டத்தை) தெரிசனம் (காண்பதே இறைவனின் தரிசனமாகவும் இருக்கின்ற)
மெய் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருக்கின்ற உண்மையை தெரிந்து கொள்ளுகின்ற) மார்கத்தார்க்கும் (வழியை தேடுகின்ற அனைவருக்கும்) இயம்புவன் (இதுவே வழி என்று யான் எடுத்து சொல்கின்றேன்) கேண்மினே (கேட்டுக் கொள்ளுங்கள்).

விளக்கம்:

உண்மையான வழியை பின்பற்றி முக்தி நிலையில் சிவமாகவே இருக்கின்றவர்களின் முகமே இறைவன் அமர்ந்து இருக்கின்ற பீடமாகவும் அவர்கள் இருக்கின்ற இடமே இறைவன் வீற்றிருக்கின்ற கோயிலாகவும் அவர்களின் கூட்டத்தை காண்பதே இறைவனின் தரிசனமாகவும் இருக்கின்றது. தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருக்கின்ற உண்மையை தெரிந்து கொள்ளுகின்ற வழியை தேடுகின்ற அனைவருக்கும் இதுவே வழி என்று யான் எடுத்து சொல்கின்றேன் கேட்டுக் கொள்ளுங்கள்.

பாடல் #1483

பாடல் #1483: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சன்மார்கச் சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்கச் சாதனம் பேதையர்க் காய்நிற்குந்
துன்மார்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்கந் தானவ னாகுஞ்சன் மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரகச சாதனந தானஞான ஞெயமாம
பினமாரகச சாதனம பெதையரக காயநிறகுந
துனமாரகம விடட துரியத துரிசறறார
சனமாரகந தானவ னாகுஞசன மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம்
பின் மார்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும்
துன் மார்கம் விட்ட துரிய துரிசு அற்றார்
சன் மார்கம் தான் அவன் ஆகும் சன் மார்கமே.

பதப்பொருள்:

சன் (உண்மையான) மார்க (வழிக்கு) சாதனம் (உதவுகின்ற கருவியாக) தான் (இருப்பது) ஞான (ஞானத்தின் மூலம்) ஞேயம் (அன்பு வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொள்ளுவது) ஆம் (ஆகும்)
பின் (மற்ற) மார்க (வழிகளுக்கு) சாதனம் (கருவியாக இருக்கின்ற அனைத்தும்) பேதையர்க்கு (அறியாமையில் இருப்பவர்களுக்கு) ஆய் (பெற முடியாததாகவே) நிற்கும் (நிற்கின்றது)
துன் (தீய) மார்கம் (வழிகளை) விட்ட (நீக்கி விட்ட) துரிய (ஆழ்நிலை தியான நிலையில்) துரிசு (அழுக்குகள் எதுவும்) அற்றார் (இல்லாதவர்களாக பேரின்பத்தில் இருப்பதுவே)
சன் (உண்மையான) மார்கம் (வழிமுறையில்) தான் (தாமே) அவன் (சிவம்) ஆகும் (ஆகுகின்ற) சன் (சன் மார்க்க) மார்கமே (வழியாகும்).

விளக்கம்:

உண்மையான வழிக்கு உதவுகின்ற கருவியாக இருப்பது ஞானத்தின் மூலம் அன்பு வடிவமாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொள்ளுவது ஆகும். மற்ற வழிகளுக்கு கருவியாக இருக்கின்ற அனைத்தும் அறியாமையில் இருப்பவர்களுக்கு பெற முடியாததாகவே நிற்கின்றது. தீய வழிகளை நீக்கி விட்ட ஆழ்நிலை தியான நிலையில் அழுக்குகள் எதுவும் இல்லாதவர்களாக பேரின்பத்தில் இருப்பதுவே உண்மையான வழி முறையில் தாமே சிவம் ஆகுகின்ற சன் மார்க்க வழியாகும்.

பாடல் #1484

பாடல் #1484: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

சன்மார்க மேத்த வரும்பெருஞ் சீடர்க்கும்
பின்மார்க மூன்றும் பிறவியற் பாமென்றால்
நன்மார்கந் தான்சிவ னோடுற நாடலே
சொன்மார்கஞ் சொல்லச் சுருதிகைக் கொள்ளுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரக மெதத வருமபெருஞ சீடரககும
பினமாரக மூனறும பிறவியற பாமெனறால
நனமாரகந தானசிவ னொடுற நாடலெ
சொனமாரகஞ சொலலச சுருதிகைக கொளளுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்கம் ஏத்த வரும் பெரும் சீடர்க்கு
பின் மார்கம் மூன்றும் பிறவி இயல்பாம் என்றால்
நன் மார்கம் தான் சிவனோடு உற நாடலே
சொன் மார்கம் சொல்ல சுருதி கை கொள்ளுமே.

பதப்பொருள்:

சன் (உண்மையான) மார்கம் (வழி முறையை) ஏத்த (அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி சிறப்பிக்க) வரும் (வருகின்ற) பெரும் (பெருமை பெற்ற) சீடர்க்கு (சீடர்களுக்கு)
பின் (அதற்கு பிறகு இருக்கின்ற) மார்கம் (வழி முறைகளாகிய) மூன்றும் (சக மார்கம், சற்புத்திர மார்கம், தாச மார்கம் ஆகிய மூன்றும்) பிறவி (பிறவியிலேயே) இயல்பாம் (இயல்பாக) என்றால் (கிடைத்து விடுகின்றது ஏன் என்றால்)
நன் (நன்மையான) மார்கம் (வழி முறையானது) தான் (அவர்கள்) சிவனோடு (சிவப் பரம்பொருளோடு) உற (சேர்ந்து இருப்பதை) நாடலே (விரும்பி தேடிக்கொண்டே இருப்பதால் ஆகும்)
சொன் (ஆகவே, குரு தமது சீடர்களுக்கு அறிவுறுத்தக் கூடிய) மார்கம் (வழி முறைகளாக) சொல்ல (சொல்லிய) சுருதி (வேதம் கொடுத்த அனைத்து முறைகளும்) கை (அவர்களுக்கு கைவரப்) கொள்ளுமே (பெறும்).

விளக்கம்:

உண்மையான வழி முறையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி சிறப்பிக்க வருகின்ற பெருமை பெற்ற சீடர்களுக்கு அதற்கு பிறகு இருக்கின்ற வழி முறைகளாகிய சக மார்கம் சற்புத்திர மார்கம் தாச மார்கம் ஆகிய மூன்றும் பிறவியிலேயே இயல்பாக கிடைத்து விடுகின்றது. ஏன் என்றால் நன்மையான வழி முறையானது அவர்கள் சிவப் பரம்பொருளோடு சேர்ந்து இருப்பதை விரும்பி தேடிக்கொண்டே இருப்பதால் ஆகும். ஆகவே குரு தமது சீடர்களுக்கு அறிவுறுத்தக் கூடிய வழி முறைகளாக வேதங்கள் கொடுத்த அனைத்து முறைகளும் அவர்களுக்கு கைவரப் பெறும்.

பாடல் #1485

பாடல் #1485: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

அன்னிய பாசமு மாகுங் கருமமு
முன்னு மவத்தையு மூலப் பகுதியும்
பின்னிய பாசமும் பேதாதி பேதமுந்
தன்னோடுங் கண்டவர் சன்மார்கத் தோரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அனனிய பாசமு மாகுங கருமமு
முனனு மவததையு மூலப பகுதியும
பினனிய பாசமும பெதாதி பெதமுந
தனனொடுங கணடவர சனமாரகத தொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
உன்னும் அவத்தையும் மூல பகுதியும்
பின்னிய பாசமும் பேத ஆதி பேதமும்
தன்னோடும் கண்டவர் சன் மார்கத்தோரே.

பதப்பொருள்:

அன்னிய (தனக்கு வேறாகவும் தன்னை அடிமைப்படுத்தியும் தன்னுள் அடங்கியும் இருக்கின்ற) பாசமும் (பாசத்தையும்) ஆகும் (அதற்கு காரணமாகும்) கருமமும் (கர்மத்தையும்)
உன்னும் (அந்த கர்மத்தின் பயனால் அனுபவிக்கின்ற) அவத்தையும் (அனைத்து வாழ்க்கை அனுவங்களையும்) மூல (அந்த அனுபங்களுக்கு மூலமாக இருக்கின்ற) பகுதியும் (ஆசைகளையும்)
பின்னிய (அதனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்ற) பாசமும் (பாசக் கட்டுகளையும்) பேத (அதனோடு சேர்ந்து இருக்காமல் விலகி இருக்கின்ற ஆன்மாவையும்) ஆதி (ஆதியில் முதன் முதலில் அந்த ஆன்மா) பேதமும் (இறைவனை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தையும்)
தன்னோடும் (தமக்கு உள்ளும் வெளியிலும்) கண்டவர் (கண்டு அறிந்து கொண்டவர்களே) சன் (உண்மையான) மார்கத்தோரே (வழியை கடை பிடிப்பவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

தனக்கு வேறாகவும் தன்னை அடிமைப்படுத்தியும் தன்னுள் அடங்கியும் இருக்கின்ற பாசத்தையும் அதற்கு காரணமாகும் கர்மத்தையும் அந்த கர்மத்தின் பயனால் அனுபவிக்கின்ற அனைத்து வாழ்க்கை அனுவங்களையும் அந்த அனுபங்களுக்கு மூலமாக இருக்கின்ற ஆசைகளையும் அதனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்ற பாசக் கட்டுகளையும் அதனோடு சேர்ந்து இருக்காமல் விலகி இருக்கின்ற ஆன்மாவையும் ஆதியில் முதன் முதலில் அந்த ஆன்மா இறைவனை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தையும் தமக்கு உள்ளும் வெளியிலும் கண்டு அறிந்து கொண்டவர்களே உண்மையான வழியை கடை பிடிப்பவர்கள் ஆவார்கள்.

பாடல் #1486

பாடல் #1486: ஐந்தாம் தந்திரம் – 9. சன் மார்க்கம் (தாமும் பார்க்கின்ற பொருளும் சிவமாகவே இருப்பதை உணர்கின்ற உண்மையான வழி)

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தோரசிபாத வுண்மைச் சொரூபோ தையத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பசுபாச நீககிப பதியுடன கூடடிக
கசியாத நெஞசங கசியக கசிவித
தொரசிபாத வுணமைச சொரூபொ தையததுற
றசைவான திலலாமை யானசன மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி
கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து
ஓர் அசி பாத உண்மை சொரூப உதையத்து உற்று
அசைவானது இல்லாமை ஆன சன் மார்கமே.

பதப்பொருள்:

பசு (ஆன்மாவில் இருகின்ற “நான்” எனும் எண்ணத்தையும்) பாசம் (பாசத் தளைகளையும்) நீக்கி (நீக்கி) பதியுடன் (இறைவனுடன்) கூட்டி (ஒன்று சேர்த்து)
கசியாத (எதனாலும் உருகாமல் இருக்கின்ற) நெஞ்சம் (நெஞ்சத்தையும்) கசிய (இறைவனின் மேல் கொண்ட தூய அன்பினால் உருகும் படி) கசிவித்து (உருக வைத்து)
ஓர் (ஒரு) அசி (ஆன்மாவாக இருப்பதுவே) பாத (இறைவனின்) உண்மை (பேருண்மை) சொரூப (சுய உருவமாக இருக்கின்றது என்கின்ற எண்ணத்தை) உதையத்து (உருவாக்கி அதனை உணர வைத்து) உற்று (அதிலேயே இலயிக்க வைத்து)
அசைவானது (அசைவது என்பதே) இல்லாமை (இல்லாமல்) ஆன (ஆக்குகின்றது) சன் (உண்மை) மார்கமே (வழியாகும்).

விளக்கம்:

ஆன்மாவில் இருகின்ற “நான்” எனும் எண்ணத்தையும் பாசத் தளைகளையும் நீக்கி இறைவனுடன் ஒன்று சேர்த்து எதனாலும் உருகாமல் இருக்கின்ற நெஞ்சத்தையும் இறைவனின் மேல் கொண்ட தூய அன்பினால் உருகும் படி உருக வைத்து ஒரு ஆன்மாவாக இருப்பதுவே இறைவனின் பேருண்மை சுய உருவமாக இருக்கின்றது என்கின்ற எண்ணத்தை உருவாக்கி அதனை உணர வைத்து அதிலேயே இலயிக்க வைத்து அசைவில்லாமல் இருக்கும்படி ஆக்குகின்றது உண்மை வழியாகும்.