பாடல் #505

பாடல் #505: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.

விளக்கம்:

மடி வற்றிப்போன பசுமாடு அழகாக இருக்கிறதே என்று குனிந்து அதற்கு புற்களை உணவாகக் கொடுத்து அதன் மடியிலிருந்து பாலைக் கறந்து குடித்து விடலாம் என்று நினைப்பது ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு தானம் கொடுத்து பேரின்ப வாழ்வைப் பெற்று விடலாம் என்று நினைப்பது போலாகும். ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானம் பருவம் முடிந்த பிறகு விதைத்த பயிர் எப்படி வளர்ந்து செழிக்காதோ அதுபோல எந்தப் பயனையும் கொடுக்காமல் வீணாகிவிடும்.

உள்விளக்கம்: ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்கள் தானம் பெற தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.

பாடல் #506

பாடல் #506: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவது பெரும்பிழை யென்றுகொள் ளீரே.

விளக்கம்:

தவம் யோகம் செய்து தீய குணங்களை போக்கி நன்மைகளைச் செய்து அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கும் அடியவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். வேஷம் போட்டுக் கொண்டு நடித்தால் தானம் கிடைக்கும் என்கிற ஆசையில் மனதில் உண்மையான அன்பில்லாமல் இருப்பவர்களுக்கு தானம் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பாடல் #507

பாடல் #507: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்றோன்
போமா நரகிற் புகான்போதங் கற்கவே.

விளக்கம்:

ஒழுக்கத்தில் செல்லும் வழியை அறியாமல் பஞ்சமகா பாவங்களை செய்கின்ற மகா பாவியாக இருந்தாலும் குற்றமில்லாத சிவனடியார்களுக்கும் தூய்மையான சிவஞானத்தைப் போதிக்கும் குருக்களுக்கும் காமம் மற்றும் பஞ்சமாக தீயகுணங்களை கைவிட்ட சிவயோகியர்களுக்கும் தரக்கூடிய தானத்தை தந்து அதன் பயனால் ஞானம் பெற்றுவிட்டால் மகா பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற்குப் போக மாட்டார்கள்.

உட்கருத்து: மகாபாவத்தை செய்தவர்களாக இருந்தாலும் முறையான தானத்தை சரியானவர்களுக்குச் செய்துவிட்டால் அதன் பயனால் பாவ வினைகள் தீர்ந்து நல் வினைகளைச் சேர்த்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

ஐந்து மகா பாவங்கள் (பாடல் #200 இல் காண்க):

  1. கொலை – தெரிந்தே ஒரு உயிரைக் கொல்வது
  2. களவு – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருடுவது
  3. கள் – போதையில் மயங்கிக் கிடப்பது
  4. காமம் – மோகத்தில் மயங்கிக் கிடப்பது
  5. பொய் – உண்மையை மறைத்துப் பொய் பேசுவது

ஐந்து மகா தீய குணங்கள்:

  1. காமம் – மோகம்
  2. குரோதம் – கோபம்
  3. லோபம் – சுயநலம்
  4. மதம் – கர்வம், ஆணவம்
  5. மாச்சரியம் – பொறாமை

பாடல் #508

பாடல் #508: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்று அஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்க் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

விளக்கம்:

தம்மை ஆளுகின்ற தந்தையான இறைவனே மனித வடிவில் வந்து தானம் கொடுக்கின்றான் என்று கைகூப்பித் தொழுது இறைவனை நினைத்துத் தானம் கேட்காதவர்களுக்கு மலையளவு மாபெரும் பொருளை தானமாகத் தந்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது. இறைவனை நினைக்காமல் தானம் கொடுத்தவனும் இறைவனை நினைக்காமல் தானம் பெற்ற இருவருமே ஏழு வித நரகங்களின் குழியை சென்று அடைவார்கள்.