பாடல் #1397

பாடல் #1397: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலா
லாபத்துக் கைகள டைந்தன நாலைந்து
பாசம றுக்கப் பரந்தன சூழவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூபததுச சததி குளிரமுகம பததுள
தாபததுச சததி தயஙகி வருதலா
லாபததுக கைகள டைநதன நாலைநது
பாசம றுககப பரநதன சூழவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூபத்து சத்தி குளிர் முகம் பத்து உள
தாபத்து சத்தி தயங்கி வருதல் ஆல்
ஆபத்து கைகள் அடைந்தன நால் ஐந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூழவே.

பதப்பொருள்:

கூபத்து (சாதகரின் தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையான கிணற்றில்) சத்தி (வீற்றிருக்கும் இறைவிக்கு) குளிர் (குளிர்ச்சியான அருளை வழங்கும்) முகம் (முகங்கள்) பத்து (பத்து விதமாக) உள (இருக்கின்றது)
தாபத்து (சாதகருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற மனதை சஞ்சலப் படுத்துகின்ற உணர்வுகளை) சத்தி (அந்த பத்து முகங்களின் அருளால் இறைவியானவள்) தயங்கி (வேகத்தை தடுத்துக் குறைத்து தயங்கி) வருதல் (வரும்படி) ஆல் (அருளுவதால்)
ஆபத்து (அந்த உணர்வுகளால் வருகின்ற ஆபத்துகளில் இருந்து சாதகரை காப்பாற்றி அருளுவதற்கு) கைகள் (பல விதமான ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இருக்கும் தனது திருக்கரங்களை) அடைந்தன (சாதகருக்குள் கொடுத்து) நால் (நான்கும்) ஐந்து (ஐந்தும் பெருக்கி வருகின்ற இருபது திருக்கரங்களால்)
பாசம் (சாதகருக்கும் அந்த உணர்வுகளுக்குமான பந்தத்தை) அறுக்க (அறுக்கும் படி) பரந்தன (பரந்து விரிந்து) சூழவே (சாதகரை சுற்றி அருளுகிறாள்).

விளக்கம்:

பாடல் #1396 இல் உள்ளபடி சாதகரின் தொப்புள் குழிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்ற சூட்சுமத் துளையான கிணற்றில் வீற்றிருக்கும் இறைவிக்கு குளிர்ச்சியான அருளை வழங்கும் திருமுகங்கள் பத்து விதமாக இருக்கின்றது. சாதகருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற உணர்வுகளால் மனம் சஞ்சலம் அடையாதபடி அந்த பத்து திருமுகங்களின் அருளால் இறைவியானவள் வேகத்தை தடுத்துக் குறைத்து தயங்கி வரும்படி அருளுகின்றாள். அந்த உணர்வுகளால் வருகின்ற ஆபத்துகளில் இருந்து சாதகரை காப்பாற்றி அருளுவதற்கு பல விதமான ஆயுதங்களை ஏந்திக் கொண்டு இருக்கும் தனது இருபது திருக்கரங்களை சாதகருக்குள் கொடுத்து சாதகருக்கும் அந்த உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும் படி பரந்து விரிந்து சாதகரை சுற்றி அருளுகிறாள்.

இறைவி தனது பத்து திருமுகங்களாலும் தடுத்து அருளுகின்ற பத்து விதமான மன சஞ்சலங்கள்:

  1. காமம் – சிற்றின்பம்
  2. குரோதம் – கோபம்
  3. உலோபம் – பேராசை, கருமித்தனம்
  4. மோகம் – மாயையால் நிகழும் மயக்க உணர்ச்சி
  5. மதம் – கொள்கை, செருக்கு, வெறி, மதுபானக் களிப்பு, பெருமை
  6. மாச்சரியம் – பொறாமை, பகைமை
  7. டம்பம் – ஆடம்பரம்
  8. தர்ப்பம் – ஆசைகள்
  9. அசூயை – பொறாமை
  10. ஈரிசை – பிறர் துன்பம் கண்டு மகிழ்வது

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.