பாடல் #1151

பாடல் #1151: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை யேன்றேன்
றடியார் வினைகெடுத் தாதியு மாமே.

விளக்கம்:

பாடல் #1150 இல் உள்ளபடி சாதகர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கின்ற பசுமையான கொடி போன்ற இறைவியைப் பற்றிக் கொண்டவர்களின் உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்ற அமிழ்தத்தை ஊறச் செய்து அருளுகின்ற பேரழகியான இறைவி திரிபுரை சக்தி எனும் வடிவத்தில் என்றும் இளமையுடன் இருக்கின்றாள். பலவிதமான பயத்தைக் கொடுக்கின்ற தீமையான கொடிய வினைகளை அழித்து அருள வேண்டும் என்று இறைவியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு சரணடைபவர்களை தாங்கிக் கொண்டு தமது அடியார்களான அவர்களின் தீமையான கொடிய வினைகளை முழுவதுமாக அழித்து அருளுகின்ற ஆதிப் பரம்பொருளாக இறைவி இருக்கின்றாள்.

பாடல் #1150

பாடல் #1150: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

போற்றியென் றாள்புவ னாபதி யம்மையென்
ஆற்றலுள் நிற்கு மருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றந் துரக்கின்ற கொள்பைந் தொடியே.

விளக்கம்:

பாடல் #1149 இல் உள்ளபடி அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் வல்லமை பெற்றவளும் உலகங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்றவளும் யான் போற்றி வணங்குகின்றவளும் அரியதான தவங்களை செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற என்றும் இளமை ஆற்றலுடன் இருப்பவளுமாகிய இறைவியை போற்றி வணங்குகின்ற உயிர்களின் ஆற்றலுக்குள் வந்து வீற்றிருந்து அவர்களின் முகத்தில் இருக்கும் நெற்றிக்குள் அழகிய ஆபரணங்களை சூடிக்கொண்டு வீற்றிருந்து அவர்களின் அகங்காரத்தை அடக்கி விட்டு பசுமையான கொடியாக இருந்து அவர்களின் இறப்பை நீக்கி ஆட்கொள்கிறாள்.

கருத்து:

உலகங்கள் அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற எமது இறைவியை போற்றி வணங்குகின்ற சாதகர்களின் நெற்றிக்குள் நீல ஜோதியாக அமர்ந்து அவர்களின் அகங்காரத்தை அடக்கி மரணமில்லா பெருவாழ்வை அளித்து ஆட்கொண்டு அருளுகின்றாள்.

பாடல் #1149

பாடல் #1149: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

புனையவல் லாள்புவ னத்திர யங்கள்
வனையவல் லாளண்ட கோடிக ளுள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே.

விளக்கம்:

பாடல் #1148 இல் உள்ளபடி மூன்று ஜோதிகளையும் ஒன்றாக சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள் மேலுலகம் பூலோகம் கீழுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்குள்ளும் கலந்து நின்று கோடிக்கணக்கான அண்ட சராசரங்களையும் அதற்குள் பல உயிர்களையும் உருவாக்கும் வல்லமை பெற்றவள். உயிர்களையும் படைத்து அந்த உயிர்களுக்கு அண்டத்தில் இருக்கும் இறைவனது பேரொளியை காட்டி அருளி உயிர்களுக்கு அந்த ஜோதியை அடையும் வழியையும் அருளுகின்றாள். இவை அனைத்தையும் செய்யும் வல்லமை பெற்ற இறைவியையே யானும் போற்றி வணங்குகின்றேன்.

பாடல் #1148

பாடல் #1148: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமு மண்ட முழுதுஞ்செம் மாந்து
புகலும்முச் சோதி புனையநிற் பாளே.

விளக்கம்:

பாடல் #1147 இல் உள்ளபடி சாதகருக்குள் விரும்பி வீற்றிருக்கும் மிகப் பெரும் தெய்வமாகிய இறைவியே நான்கு வேதங்களும் புகழ்ந்து சொல்லுகின்ற மாபெரும் சக்தியாக இருக்கின்றாள். இறைவன் இறைவி சாதகரின் ஆன்மா ஆகிய மூன்று ஜோதிகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நிற்கின்ற பூரண சக்தியாக அனைத்து திசைகளும் அவளுடைய அழகிய ஆடையாகவும் பூமியையும் கடந்து நிற்கின்ற திருவடிகளையும் கொண்டு நிற்கும் அவளை வேதங்களோடு அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் அனைத்து உலகங்களும் சிறப்பாக போற்றி வணங்குகின்றன.

பாடல் #1147

பாடல் #1147: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அம்பன்ன கண்ணி யரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செ யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.

விளக்கம்:

அம்பைப் போன்ற கூர்மையான கண்களையும் என்றும் மாறாத இளமையுடனும் இறைவனோடு சேர்ந்து இருக்கும் மனோன்மணி எனும் பெயருடனும் கொம்பைப் போல மெலிந்து வளைந்த இடையுடனும் வாசனை மிக்க மலர்களைச் சூடிய கூந்தலுடனும் இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள் முழுவதும் பரவி உலாவிக் கொண்டே இருக்கின்ற போது சாதகரின் உடலானது தூய்மையான தங்கத்தால் செய்ததைப் போல மாறி அவருக்குள்ளிருந்து நறுமணம் திரண்டு நாள் தோறும் வீசிக்கொண்டே இருக்கும். இப்படி சாதகம் செய்து வீற்றிருக்கின்ற சாதகரை அன்போடு பார்த்துக் கொண்டே இறைவியும் அவருடன் விரும்பி வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1146

பாடல் #1146: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

இருந்தனள் தன்முக மாறொடு நாலாய்ப்
பரந்தனள் வாயுத் திசைதிசை தோறுங்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேற லதோமுக மம்பே.

விளக்கம்:

பாடல் #1145 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் அனைத்து சக்கரங்களிலும் வீற்றிருக்கும் இறைவியானவள் பத்து திசைகளையும் காக்கின்ற தனது பத்து முகங்களையும் சாதகரது உடலிலுள்ள பத்து விதமான வாயுக்களுடன் சேர்ந்து அனைத்து திசைகளுக்கும் பரவிச் செல்கிறாள். அப்படி பரவிச் சென்ற சக்தியானது ஒருமுகமாக குவிந்து முத்திலிருந்து வெளிவரும் பிரகாசம் போல சாதகரின் முகத்திலிருந்து ஒளி வீசி வெளிப்படுகின்றது. இந்த நிலையை அடைந்த சாதகருக்கு அமிழ்தம் போன்ற பேரின்பத்தை தரும் இறைவனது கீழ் நோக்கும் முகம் விரைவாகக் கிடைக்கப் பெற்று பாடல் #523 இல் உள்ளபடி தமது உடலும் இந்த அண்டமும் வேறு வேறு இல்லை என்கிற நிலையை சாதகர் அடைவார்.

குறிப்பு:

இறைவனது கீழ் நோக்கும் அதோமுகம் பற்றிய விவரங்களை திருமந்திரம் இரண்டாம் தந்திரத்திலுள்ள 20 ஆவதான “அதோமுக தரிசனம்” தலைப்பில் காணவும்.

பாடல் #1145

பாடல் #1145: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்து மிடம்பெற வோடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ளொளிபெற
எச்சது ரத்து மிருந்தனள் தானே.

விளக்கம்:

பாடல் #1144 இல் உள்ளபடி மூன்று கோணங்களை உடைய சதுர அமைப்பில் இருக்கும் மூலாதார சக்கரத்திலிருந்து விதை போல முளைத்துக் கிளம்பிய குண்டலினி அக்னிச் சுடரானது ஒவ்வொரு சக்கரங்களுக்கும் சென்று அங்கிருந்து தொடர்ந்து மேலே சகஸ்ரதளத்தை நோக்கிச் சென்று தலை உச்சித் துளையைக் கடந்து பரவெளிக்குள் சென்று அங்கிருக்கும் ஜோதி வடிவான இறைவனை அடைந்து அவரிடமுள்ள ஒளியைப் பெற்று விட்டால் அந்த ஒளியானது இறைவியாக சாதகருக்குள் நுழைந்து அவருக்குள் இருக்கும் அனைத்து சக்கரங்களிலும் அமர்ந்து விடுவாள்.

பாடல் #1144

பாடல் #1144: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அடுக்குந் தாமரை யாதி யிருப்பிடம்
எடுக்கும் தாமரை யில்லகத் துள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே.

விளக்கம்:

பாடல் #1143 இல் உள்ளபடி ஒன்பது விதமான சக்திகளும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கு ஆதார சக்தியாக இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் இறைவனின் இருப்பிடமாகும். உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கும் அமிழ்தம் சாதகரின் உடலுக்குள்ளிருந்து ஊறிக்கொண்டே இருக்கின்றது. உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற இந்த சக்தியினால் சாதகருக்கு தாமே இயக்குகின்றோம் என்கிற அகங்காரம் வந்துவிடாமல் நெற்றியின் உச்சியில் இருந்து சகஸ்ரதள சக்தி தடுத்துக் காக்கின்றது. சாதகரின் உடலை இயக்கத் தேவைப்படுகின்ற சக்தியை மூலாதாரம் சகஸ்ரதளத்திலிருந்து சிறிதளவு எடுத்து கொள்கிறது.

கருத்து:

சாதகரின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் இறைவன் ஜோதி வடிவமாக இருந்து உலகங்கள் இயங்குவதின் காரணமாக இருக்கின்றார். இதனால் சாதகருக்கு தாமே இயக்குகின்றோம் என்கிற அகங்காரம் வந்துவிடாமல் இருக்க நெற்றியின் உச்சியிலிருந்து சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவன் தடுத்து காப்பாற்றுகின்றார். சாதகரின் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை சகஸ்ரதளத்திலிருந்து ஊறும் அமிழ்தத்தில் சிறிதளவு மூலாதாரத்திற்கு கொடுத்து இயங்க வைக்கின்றார்.

பாடல் #1143

பாடல் #1143: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

நடந்தது அம்மலர் நாலுட னஞ்சாய்
இருந்தனர் கன்னிக ளெட்டுட னொன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.

விளக்கம்:

பாடல் #1142 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக இருக்கும் இறைவி அங்கிருந்து வெளிப்பட்டு உலகங்கள் அனைத்தையும் இயங்க வைப்பதற்கு ஒன்பது விதமான அம்சங்களாக வெளிப்படுகிறாள். இந்த அம்சங்கள் எட்டு விதமான தேவியர்களாகவும் இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் அம்சமான மனோன்மணியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது விதமான சக்திகளாக அவரவர்களுக்கு ஏற்ற தனித்தன்மையான வழிகளின் மூலம் ஜோதி வடிவாய் கொடி போல சகஸ்ரதளத்திலிருந்து வெளிப்பட்டு வளர்ந்து சென்று உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்றார்கள். இவர்கள் தத்தமது வழிகளின் மூலம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கான ஆதார சக்தியாக சகஸ்ரதளத்தில் இருக்கும் ஜோதி இருக்கின்றது.

பாடல் #1142

பாடல் #1142: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

பைங்கொடி யாளும் பரம னிருந்திடந்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாக விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே.

விளக்கம்:

பாடல் #1141 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து பசுமையான கொடி போல வெளிப்பட்ட சக்தியானவள் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக ஒரு பருமனான பிரகாசத்தைத் தருகின்ற ஜோதியாக வானம் வரை கொடி போல் வளர்ந்து உலகங்கள் அனைத்தையும் இயங்க வைக்கின்றாள்.