பாடல் #1376

பாடல் #1376: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பரந்த கரமிரு பங்கய மேந்திக்
குவிந்த கரமிரு கொய்த மாபாணி
மலர்ந்தணி கொங்கைகள் முத்தார் பவள
மிருந்தல் குலாடை மணிபொதிந் தன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பரநத கரமிரு பஙகய மெநதிக
குவிநத கரமிரு கொயத மாபாணி
மலரநதணி கொஙகைகள முததார பவள
மிருநதல குலாடை மணிபொதிந தனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பரந்த கரம் இரு பங்கயம் ஏந்தி
குவிந்த கரம் இரு கொய்த மா பாணி
மலர்ந்து அணி கொங்கைகள் முத்து ஆர் பவளம்
இருந்த அல்குல் ஆடை மணி பொதிந்து அன்றே.

பதப்பொருள்:

பரந்த (எங்கும் பரந்து விரிந்து இருக்கும் இறைவியின்) கரம் (திருக் கரங்கள்) இரு (இரண்டிலும்) பங்கயம் (தாமரை மலர்களை) ஏந்தி (ஏந்திக் கொண்டு இருக்கின்றாள்)
குவிந்த (மலரின் மொக்கு பொல குவிந்து இருக்கின்ற) கரம் (திருக் கரங்கள்) இரு (இரண்டும்) கொய்த (அப்போது பறித்த மலர்களைப் போல) மா (மிகப் பெரும்) பாணி (அழகு பொருந்தி இருக்கின்றாள்)
மலர்ந்து (மலர்ந்த மலர்களால் ஆன மாலையை) அணி (அணிந்து இருக்கும்) கொங்கைகள் (திரு மார்புகளில்) முத்து (முத்துக்களால் ஆன) ஆர் (மாலையில்) பவளம் (பவளத்தை பதிந்து அணிந்து இருக்கின்றாள்)
இருந்த (அவளது திரு இடைக்கு) அல்குல் (கீழே இருக்கின்ற) ஆடை (ஆடையில்) மணி (நவரத்தின மணிகளைப்) பொதிந்து (பதித்து வைத்த பேரழகுடன்) அன்றே (நினைத்த அந்த கணமே தோன்றுகிறாள்).

விளக்கம்:

பாடல் #1375 இல் உள்ளபடி உலகம் எங்கும் பரந்து விரிந்து இருக்கும் இறைவியின் திருக் கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்களை ஏந்திக் கொண்டு இருக்கின்றாள். மலரின் மொக்கு பொல குவிந்து இருக்கின்ற அவளுடைய திருக் கரங்கள் இரண்டும் அப்போது பறித்த மலர்களைப் போல மிகப் பெரும் அழகு பொருந்தி இருக்கின்றாள். மலர்ந்த மலர்களால் ஆன மாலையை அணிந்து இருக்கும் அவளுடைய திரு மார்புகளில் முத்துக்களால் ஆன மாலையில் பவளத்தை பதிந்து அணிந்து இருக்கின்றாள். அவளது திரு இடைக்கு கீழே இருக்கின்ற ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்த பேரழகுடன் நினைத்த அந்த கணமே தோன்றுகிறாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.