பாடல் #441

பாடல் #441: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

எட்டுத் திசையும் அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாசம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே.

விளக்கம்:

எட்டுத் திசைகளிலும் வீசுகின்ற காற்றும் வட்ட வடிவ உலகைச் சூழ்ந்து இருக்கும் அலை கடல் நீரும் உலகம் தனக்குள்ளிருந்தும் தன்னைச் சுற்றியிருக்கும் வளி மண்டலங்களிலிருந்தும் பெறும் நெருப்பும் உள்ளிருக்கும் நெருப்பை மூடி விரிந்து பரவி இருக்கும் இந்த மாபெரும் நிலமும் உலகத்தைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்தைத் தாண்டி இருக்கும் ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கி ஆன்மாவோடு உயிரைச் சேர்த்து அதை நிலைபெற வைக்கும் மூச்சுக்காற்றை அடைத்து வைத்த தோலால் ஆன பையைப் போன்ற உடலை அவரவர் வினைகளுக்கு ஏற்ப இறக்கும் காலம் வரும் வரை பாதுகாப்பாக கட்டி வைத்தும் காலம் வரும்போது அவிழ்த்துப் போட்டும் விளையாடுவது நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானின் அருளே.

உட்கருத்து: வினைகள் முடியும் வரை உயிர்களை உலகத்தில் பஞ்ச பூதங்களை அடக்கிய உடலில் பிறக்க வைத்து அவற்றை காலம் வரும் வரை காப்பாற்றி வந்து முடியும் காலம் வந்தபின் அழித்து அடுத்த நிலைக்குச் செல்லும்படி செய்வது அனைத்தும் இறைவனின் திருவருளே ஆகும்.

பாடல் #442

பாடல் #442: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமனில்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கும்
தச்சும் அவனேதான் சமைக்கவல் லானே.

விளக்கம்:

தலை உச்சியிலுள்ள சகஸ்ரரதளத்தில் ஒளிவீசித் திகழும் நாத வடிவான இறைவனை அன்பு செய்து அவனோடு சேர்ந்து பேரின்பத்தை உணர்ந்தவர்களுக்கு மரணம் என்பது இல்லாததால் எமன் கிடையாது. விரிந்து பரந்திருக்கின்ற இந்த உலகத்தில் கண்களால் காணக்கூடிய சூரியன் சந்திரன் நெருப்பில் இருந்து வரும் மூன்றுவித ஒளிகளைக் கொடுத்து அருளிய அவனேதான் கண்களால் காண முடியாத ஒளியாக சகஸ்ரரதளத்தில் கலந்து இருக்கின்றான். அந்த ஒளியில் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு பேரின்பத்தை வழங்கி மரணமில்லாத பெருவாழ்வை அருளக்கூடியவனாக இறைவன் இருக்கின்றான்.

பாடல் #443

பாடல் #443: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசையில் உலகம் அதுவிது வாமே.

விளக்கம்:

குயவன் களிமண்ணைப் பிடித்து தனது மனதுக்கு எதுவெல்லாம் நன்மை தரும் என்று தோன்றுகின்றதோ அந்த மாதிரியெல்லாம் பாத்திரங்கள் வரும்படி வளைத்து உருவாக்குவான். அந்தக் குயவனைப் போலவே குருநாதனாக இருக்கும் எம் இறைவனும் ஆன்மாக்களின் வேண்டுதலுக்கு இணங்கி எதுவாக இருந்தால் அவர்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பதை அறிந்து அதுவாகவே அவர்களை, அசைவில்லாத இந்த அண்டசராசரத்தில் அசைவு பெற்றுச் சுழலும் உலகங்களில் பல்வேறு வித உயிர்களாகப் படைத்து அருளுகின்றான்.

உட்கருத்து: உயிர்கள் உலகத்தில் பிறப்பது அவற்றின் ஆசையினால்தான். ஆன்மாவாக இருக்கும் உயிர் ஆசைப்பட்டுவிடும் போது இறைவனை வேண்டி உயிர் எடுத்து உலகத்தில் பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் உயிர் எந்த உருவத்தில் இருந்தால் விரைவில் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டு தனது வினைகளையும் கழித்துக் கொள்ளும் என்பதை அறிந்த இறைவன் அந்த விதத்திலேயே அவர்களைப் படைத்து அருளுகின்றான்.

பாடல் #444

பாடல் #444: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குண மேகுண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் வேறு பட்ட பலவித உருவங்களில் ஒன்றாக இருப்பவனும் பூத கணங்களைப் படையாகக் கொண்டவனும் ஆன்மாக்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு உலகத்துப் பிறவியாகும். பிறவியைப் பரிசாகக் கொடுத்த மாபெரும் வள்ளலாகிய இறைவன் அந்தப் பிறவியில் உயிர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளையும் வினைகளையும் அடைய வேண்டிப் பலவித குணங்களையும் வைத்து அருளுகின்றான். குணங்களையும் மீறித் தம்மை சிந்திக்கும் அடியவர்களுக்கு அவர்களின் சிந்தனையிலேயே திரிசடையைத் தலையில் தரித்த இறைவன் பேரின்பமாக சேர்ந்து இருந்து அருளுகின்றான்.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசைக்கும் வினைக்கும் பிறவி எடுக்கும்போது அதற்கேற்ற உடலையும் உள்ளத்தையும் குணங்களையும் கொடுத்து அருளும் இறைவன் தன் தலையில் திரித்துச் சூடிய சடைபோல வினைகளால் முற்றும் சூழப்பட்ட ஆன்மாக்கள் அதையும் தாண்டி இறைவனை நினைக்கும் போது அவர்களின் சிந்தனையில் பேரின்பமாக வந்து அருளுகின்றான்.

பாடல் #445

பாடல் #445: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

விளக்கம்:

ஆன்மாக்களின் மேல் வைத்த மாபெரும் அன்பினால் அவை ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஏழு உலகங்களையும் படைத்து அருளினான். அந்த உலகங்களின் காலம் முடியும் போது அவற்றை அழித்து மீண்டும் புதியதாக உருவாக்கி அருளினான். உலகங்களும் உயிர்களும் தனது தொழிலை செய்வதற்காக பஞ்ச பூதங்களையும் படைத்து அருளினான். ஆன்மாக்கள் பிறவி எடுக்க உயிரையும் உடலையும் கொடுத்து அருளினான்.

பாடல் #446

பாடல் #446: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

விளக்கம்:

ஏழு உலகங்களைப் படைத்து அவை தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். ஏழு உலகங்களும் தன் தொழில்களை செய்ய பலவித தேவர்களையும் படைத்து அருளினான். பலவித உயிர்களைப் படைத்து தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். அந்த உயிர்கள் தன்னை நாடி வரும்போது அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகவும் நின்று அருளுகின்றான்.

பாடல் #447

பாடல் #447: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள்
ஆதி படைத்தனன் ஆயபல் ஊழிகள்
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவையும் தாங்கிநின் றானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதியான இறைவனே உயிர்கள் வாழ்வதற்க்காக ஆகாயம் நீர் நெருப்பு காற்று மண் என ஐந்து பெரும் பூதங்களைப் படைத்து அருளினான். அந்த உயிர்கள் வினைகள் முடியும் வரை வாழ்ந்து தன்னை வந்து அடைவதற்காக பல ஊழிக்காலங்களையும் அருளினான். அந்த உயிர்கள் தவமிருந்து தன்னை நாடி வரும் போது அவர்களை எண்ணிலடங்காத பல தேவர்களாகக்கி அருளுகின்றான். இப்படி அனைத்தையும் படைத்த இறைவனே தான் படைத்த அனைத்தையும் தாங்கிக் கொண்டு பாதுகாத்து அருளுகின்றான்.

பாடல் #448

பாடல் #448: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே.

விளக்கம்:

பரந்து விரிந்த ஏழு உலகங்கள் முழுவதும் அகன்று பரவி இருந்தாலும் அனைத்தும் ஒருவனாய் இருப்பவன் இறைவன் ஒருவனே. இவன் தான் இறைவன் என்று சுட்டிக் காட்டி உணர்த்தக் கூடிய அளவிற்கு இறைவன் எளிமையானவன் இல்லை. அவனே பலவித ஆன்மாக்களின் உயிரோடு உயிராக உடனே இருந்து பாதுகாத்து அருளுகின்றவன். அவனே பல்வேறு குருநாதர்களாய் வந்து உயிர்களுக்கு நல்வழியை போதித்து அருளிய அவனே உலகத்து உயிர்களெல்லாம் நம்பியிருக்கும் தலைவனும் ஆவான்.

பாடல் #449

பாடல் #449: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதக மாமே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்திற்குள் ஒளியாக இருக்கும் இறைவனே உயிரோடு உயிராகவும் கலந்து ஒரே உடலாக இருக்கின்றான். அவனே விண்ணுலக அமரர்களெல்லாம் விரும்பித் தொழும் அனைத்திற்கும் மேலான பரம்பொருள். அவனே மண்ணுலக அடியவர்களெல்லாம் புகழ்ந்து போற்றும் பல்வேறு உருவங்களாகத் திருமேனி தரித்து இருப்பவன். அவனே கண்களுக்குள் இருந்து காட்சியைக் காட்டும் கருமணியாகவும் இருந்து கண்களால் காண முடியாத பேருண்மைகளைக் குருநாதனாய் இருந்து போதிப்பவனும் ஆவான்.

பாடல் #450

பாடல் #450: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.

விளக்கம்:

யாராலும் அறிந்துவிட முடியாத அண்டசராசரங்கள் அடங்கிய திருமேனியைக் கொண்ட இறைவன் நீரில் பால் சேர்க்கும் போது எப்படி இரண்டும் ஒன்றாகிக் கலந்து விடுகின்றதோ அதுபோலவே உலகத்தில் பிறக்கும் உயிர்களுடன் உயிராகக் கலந்து உடலாகி ஒன்றாக இருப்பதை இடைவிடாமல் கண்டு பேரின்பம் அடையும் பாக்கியத்தை அவனது திருவருளால் யான் பெற்றிருக்கின்றேன்.