பாடல் #940

பாடல் #940: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாமவ ராமே.

விளக்கம்:

உயிர்கள் இறைவனின் தன்மையை தமக்குள் உணர்ந்து கொள்ள மனிதப் பிறவியை பெற்றுள்ளன. அதனை அறிந்து அனைத்து உயிர்களையும் இறைவனாகப் பார்த்து உணர்பவர்கள் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தில் மறைவாக இருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் வைத்து தியானிக்க அவர்களும் இறைவனாகும் பேறு பெற்று ‘நமசிவாய’ ஐந்தெழுத்து மந்திரத்தை தாமாகவே உணர்வார்கள்.

பாடல் #939

பாடல் #939: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானே யெழுகுணந் தண்சுட ராய்நிற்குந்
தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்குந்
தானே யெழுகுண மாவதும் ஓதிடில்
தானே யெழுந்த மறையவ னாமே.

விளக்கம்:

பாடல் #938 இல் உள்ளபடி சாதகருக்குள் ஒளியாக தன்னை காட்டி நின்ற இறைவன் குளிர்ந்த சுடர் ஒளியாக நிற்பதையும் அந்த இறைவனே வேதங்களின் பொருளாகவும் அதில் கூறியுள்ள பலவித குணங்களாகவும் தமக்குள் நிற்பதை உணர்ந்து பாடல் #936 #937 #938 இல் உள்ளபடி ’ந’ ’ம’ ’சி’ எழுத்தை செபித்துக்கொண்டே இருந்தால் தனக்குள் மட்டுமில்லாமல் தனக்கு வெளியில் இருக்கும் அனைத்திலும் மறைந்து நிற்பது இறைவனின் தன்மையே என்பதை சாதகர் அறிந்து கொள்வார்.

பாடல் #938

பாடல் #938: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கல்லொளி யேஎன நின்ற வடதிசை
கல்லொளி யேஎன நின்றனன் இந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

விளக்கம்:

பாடல் #937 இல் உள்ளபடி சாதகரின் உடலிலிருந்து பிரகாசிக்கும் ஒளி கீழிருந்து மேல் நோக்கி எழும் சுடர் போல உணர்ந்தால் தமது உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாக இருப்பதை உணர்வார்கள். அதன்பிறகு நமசிவாய மந்திரத்தின் மூன்றாவது எழுத்தாகிய ‘சி’ எழுத்தை செபித்தால் சாதகரின் உடலிலிருந்து பிரகாசிக்கும் ஒளியாகத் தாமே இருப்பதை இறைவன் காட்டி நிற்பான்.

பாடல் #937

பாடல் #937: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானே யளித்திடுந் தையலை நோக்கினால்
தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந்
தானே யளித்த மகாரத்தை ஓதிடத்
தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

விளக்கம்:

பாடல் #936 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தை தமக்குள் உணர்ந்தபின் அதிலிருந்து வெளிவரும் சக்தியை தமக்குள் உணர்ந்து கொண்டே இருந்தால் சக்கரத்திலிருந்து வரும் சக்திமயம் சாதகரின் உடலைச் சுற்றி உறைபோல் மூடிக்கொள்ளும். அதன் பிறகு ‘நமசிவாய’ மந்திரத்தின் இரண்டாவது எழுத்தாகிய ‘ம’ எழுத்தை செபித்தால் சாதகரின் சதையால் ஆன உடலும் மாணிக்கக் கல்லைப் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.

பாடல் #936

பாடல் #936: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அத்திசைக் குள்நின் றனலை எழுப்பியே
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுறவு ஆக்கினன் தானே.

விளக்கம்:

பாடல் #935 இல் உள்ளபடி நமசிவாய மந்திரத்தின் முதலெழுத்தாகிய ‘ந’ எழுத்தை செபித்து திருவம்பலச் சக்கரத்தின் நான்கு திசையிலும் உள்ள சூலத்தின் அக்கினியை எழுப்பும் சாதகர்கள் நான்கு திசைகளுக்குள்ளும் மறைந்து நிற்கின்ற இறைவனோடு தாமும் கலந்து நின்று திருவம்பலச் சக்கரத்தை தமக்குள் உணர்வார்கள்.

பாடல் #935

பாடல் #935: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கூத்தனைக் காணும் குறிபல பேசிடிற்
கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார்
கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியுமது வாமே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் திருநடனமாடும் இறைவனைக் கண்டு அடைய வழிகள் பல இருக்கிறது என்று பேசினாலும் இறைவனின் வடிவமாக இருக்கும் நமசிவாய மந்திரத்தின் முதலெழுத்தான ‘ந’ அல்லது அதன் அட்சரமான ‘அ’ என்ற எழுத்தை செபித்தால் இறைவனாகிய அந்த எழுத்தோடு ஒன்றாக சேர்ந்து நிற்பார்கள். இதுவே திருவம்பலச் சக்கரத்தில் திருநடனமாடும் இறைவனைக் கண்டு அடையும் வழியாகும்.

குறிப்பு: ‘ந’ அல்லது ‘அ’ என்ற முதலெழுத்தை ஒலியலை சிறிதும் மாறாமல் தொடர்ந்து உச்சரித்து செபிக்க வேண்டும்.

பாடல் #934

பாடல் #934: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துஉள்ளே அமர்ந்திருந் தானே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் உள்ள நமசிவாய என்னும் மந்திரத்தை எண்ணி தியானித்தால் உள்ளுக்குள் இருந்து இறைவனே குருவாக வந்து வழி காட்டுவார். குருவாக அமர்ந்த இறைவனின் வழிகாட்டுதலின் படி நமசிவாய மந்திரத்தின் ஐந்து அட்சரங்களான அ, இ, உ, எ, ஒ என்கிற எழுத்துக்கள் இறைவனின் வடிவமாகவே இருப்பதை உணர்ந்து திருவம்பலச் சக்கரத்தில் அமைந்திருக்கும் இந்த ஐந்து அட்சரங்களும் சதாசிவமூர்த்தியாகவே இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #933

பாடல் #933: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்ட சத்தியும் சதாசிவன் தானே.

விளக்கம்:

பாடல் #931 இல் உள்ளபடி ‘சி’ என்ற எழுத்தின் அட்சரமான ‘ச’ எழுத்தில் அடங்கியிருக்கும் சக்தியும் ‘வ’ என்ற எழுத்தின் அட்சரமான ‘அ’ எழுத்தில் அடங்கியிருக்கும் சிவமும் ஒன்றாக சேர்ந்த சிவசக்திக்குள் அண்டசராசரங்கள் அனைத்தும் அடங்கியிருப்பதை யாரும் அறியவில்லை. பாடல் #932 இல் உள்ளபடி தியானித்து இதை அறிந்து கொண்ட சாதகர்கள் இரண்டாக பிரிந்து இருக்கும் சிவசக்தியானது ஒன்றான சதாசிவமூர்த்தியாகவே இருப்பதை உணர்ந்து கொள்வார்கள்.

குறிப்பு: பாடல் #931 இல் உள்ள குறிப்பின்படி ‘சிவயவசி’ என்று இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் ஆன்மாவை வைத்து தியானிக்கும் சாதகர்கள் இறைவன் இறைவி என்று இரண்டாகப் பார்த்த பொருள் ஒன்றான சதாசிவம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #932

பாடல் #932: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

விளக்கம்:

அடிப் பகுதியில் இறைவனைக் குறிக்கும் ‘அ’ எழுத்தை பீடமாக வைத்து எழுதி நடுப் பகுதியில் சிவசக்தியை குறிக்கும் ‘ஹர’ எழுத்துக்களை எழுதி மேல் பகுதியில் இறைவியைக் குறிக்கும் ‘இ’ எழுத்தை எழுதினால் வரும் வடிவம் இலிங்க சொரூபமாகும். அந்த லிங்க உருவத்தோடு உயிர்களைக் குறிக்கும் ‘ம’ எழுத்தையும் சேர்த்து மூச்சுக்காற்றோடு தியானித்தால் இறைவனின் திருநடனத்தை இசையோடு சுடர் விட்டு எரியும் ஒளி உருவமாக காணலாம்.

குறிப்பு: பாடல் #765 இல் அகார உகார மகார எழுத்துக்களின் விளக்கத்தை காணலாம். பாடல் #931 இல் உள்ளபடி இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்கும் ‘சிவ’ ‘வசி’ எழுத்துக்களுக்கு நடுவில் ஆன்மாவை குறிக்கும் மகாராமாகிய ‘ய’ எழுத்தை சேர்த்து சிவயவசி எனும் மந்திரமாக தியானிக்க வேண்டும்.

பாடல் #931

பாடல் #931: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணிநல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

விளக்கம்:

நமசிவாய மந்திரத்தில் இறைவியைக் குறிக்கும் ‘வ’ எழுத்துக்குள் இறைவனும் அடங்கியிருக்கிறான். அது போலவே இறைவனைக் குறிக்கும் ‘சி’ எழுத்துக்குள் இறைவியும் அடங்கியிருக்கிறாள். பாடல் #930 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரம் வரைந்து மந்திரத்தை செபிக்கும் சாதகர்கள் திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் இறைவனும் இறைவியும் ‘சிவ’ மற்றும் ‘வசி’ எனும் மந்திர எழுத்துக்களில் சேர்ந்து இருப்பதை அறிவார்கள்.

குறிப்பு: திருவம்பலச் சக்கரத்தை முறைப்படி தியானிக்கும் சாதகர்களே புண்ணியவாளர்கள் ஆவார்கள்.