பாடல் #509

பாடல் #509: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடையக் கல்வியி லோரே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்துக்குள் பலவித புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றை தியானத்தின் மூலம் மெள்ள ஆராய்ந்து உணர்ந்து அதனுள் மூழ்கிக் குளித்து தங்களின் வினைகளை நீங்க முயற்சி செய்யாமல் தங்களின் வினைகளைக் கழிக்க உலகத்தில் இருக்கும் புனித தீர்த்தங்களைத் தேடி பள்ளத்தாக்குகளுக்கும் மலை மேடுகளுக்கும் அலைந்து திரிகின்றவர்கள் பொய்யான மனதைக் கொண்ட உண்மை ஞானமில்லாதவர்கள்.

உட்கருத்து: உயிர்களின் உள்ளத்துக்குள் இறைவன் பலவித குணங்களாக இருக்கின்றான். இவற்றை ஆராய்ந்து நல்ல குணங்களை வளர்த்துக் கொண்டு தீய குணங்களை நீக்கிக் கொண்டால் வினைகள் நீங்கி விடும். இதை அறியாமல் உலகத்தில் இருக்கும் நதிகளிலும் குளங்களிலும் குளித்துவிட்டால் எல்லா பாவங்களும் போய்விடும் என்று தம்மைத் தாமே பொய்யாக ஏமாற்றி கொள்ளுபவர்கள் உண்மை ஞானமில்லாதவர்கள்.

பாடல் #510

பாடல் #510: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் வொண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.

விளக்கம்:

கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் முறையை அறிந்தவர்க்கு இறைவனின் அருள் குளிச்சியாய் தோன்றும். அவனே அந்த கோவிலில் உள்ள தீர்த்தக்குளத்தில் குளித்தால் பாவங்கள் தீர்ந்து விடும் என்றும் இறைவனை அடைந்து விடலாம் என்றும் எண்ணினால் இறைவன் பக்கத்தில் கூட நிற்க மாட்டான். அவனே மூச்சை அடக்கி அளவாக விட்டு முறைப்படி தியானம் செய்யத் தெரிந்து அதை செயல்படுத்தினால் இறைவனின் அருள் கிடைத்தாலும் கிடைக்கும். அவனே தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தை உணர்ந்து தெளிந்து விட்டால் அவன் சிந்தனையில்தான் இறைவன் எப்போதுமே குடிகொண்டிருக்கின்றான்.

பாடல் #511

பாடல் #511: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாலுங் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதுஓர் பத்தலுள் ளாமே.

விளக்கம்:

உயிர்கள் தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தில் மூழ்கி குளித்தால் தமக்குள் இருக்கும் இறைவன் ஒருவனை உணரலாம். அந்த இறைவனுக்கு அடியவர் போல நடித்துக் கொண்டாவது அவனோடு கலந்து அவனை அறிந்து கொள்ளுபவர்கள் எவரும் இல்லை. நதிகளுக்கும் குளங்களுக்கும் சென்று மூழ்கி எழுபவர்களது பாவ வினைகள் கிணற்றில் விட்ட ஓட்டைக் குடம் போன்றதே ஆகும்.

உள்விளக்கம்: ஓட்டையான குடத்தில் எவ்வளவு முறை அள்ளினாலும் தண்ணீர் நிற்காதது போல உலகத்திலுள்ள எத்தனை குளங்களுக்கும் நதிகளுக்கும் சென்று குளித்தாலும் பாவ வினைகள் தீராது.

பாடல் #512

பாடல் #512: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவா னுறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனற் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.

விளக்கம்:

உயிர்கள் அனைத்துக்குள்ளும் வீற்றிருக்கும் ஆதிமூல நாயகனாகிய இறைவனை தேவர்கள் தங்களுக்குள் இருக்கும் தீர்த்தத்தைத் தேடி அடைந்து அதன் மூலம் தங்களைப் பக்குவப் படுத்திக்கொண்டே அடைந்திருக்கிறார்கள். அது போலவே உயிர்கள் தங்களிடம் இருக்கும் 5 வித தீய குணங்களை நீக்கித் தங்களைப் பக்குவப் படுத்திக்கொண்டு தங்களுக்குள் மூலப்பொறியாக இருக்கும் குண்டலினி சக்தியை மேலெழுப்பிச் சென்று தங்களின் தலைக்குள் இருக்கும் கங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து விட்டால் புண்ணியர்களாக ஆகலாம்.

5 வித தீய குணங்கள்

  1. காமம் – மோகம்
  2. குரோதம் – கோபம்
  3. லோபம் – சுயநலம்
  4. மதம் – கர்வம், ஆணவம்
  5. மாச்சரியம் – பொறாமை

பாடல் #513

பாடல் #513: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுறத் தேடுவார் தம்மையொப் பாரே
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

விளக்கம்:

கடலினில் ஒரு பொருளைத் தொலைத்து விட்டு அதை கடலினில் தேடாமல் குளத்தில் தேடி அலைவதைப் போல உடலில் இறைவனே பல தீர்த்தங்களாக இருப்பதை அறியாமல் வெளியே தேடி அலைகின்றனர். உயிர்களின் உயிரை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கும் குருநாதனாகிய இறைவன் தனது திருவருளால் உடலுக்குள்ளேயே புகுந்து இருப்பதை ஒருவரும் அறியாமல் இருக்கின்றனர்.

பாடல் #514

பாடல் #514: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பிற் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

விளக்கம்:

உயிர்கள் பிறக்கும் போது உள்ளத்தில் பலவகை குணங்கள் உள்ளது. அவை தாமசம், இராசதம், சாத்வீகம் என்ற 3 வகை குணங்களுக்கு உட்பட்டவை. தாமச குணங்கள் இருக்கும் போது குண்டலினி சக்தியாக இருக்கும் தீர்த்தமானது கறுப்பாக இருக்கும். இந்த தாமச குணம் இராசத குணங்களாக மேலோங்கும் போது அந்த தீர்த்தமானது சிவப்பாக மாறும். இந்த இராசத குணம் சாத்வீக குணங்களாக மேலோங்கும் போது அந்த தீர்த்தமானது வெளுப்பாகி மேலே சென்று சகஸ்ரதளத்தை அடையும். அவ்வாறு சகஸ்ரதளத்தை அடைந்ததும் தமது உடலாகவும் உடலுக்குள் உயிராகவும் இறைவனே இருப்பதை உயிர்கள் உணரலாம்.

குணங்களின் விளக்கம்:

தாமச குணம் (தாமசம்) – காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களுக்கு ஆசைப்படுதல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வது, பகட்டுக்காக செயல்கள் செய்வது.

இராசத குணம் (இராட்சதம்) – ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.

சத்துவ குணம் (சாத்விகம்) – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம், புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதற்கு கூச்சப்படுதல், தன்னிலேயே மகிழ்ந்திருத்தல், தானம், பணிவு மற்றும் எளிமை.

குறிப்பு: இப்படாலில் 4வது வரியில் குறிப்பிட்டுள்ள நீர் அமிர்தத்தையும் நிலம் மண்ணாகிய உடம்பையும் காற்று மூச்சுக்காற்றாகிய உயிரையும் குறிக்கும்.