பாடல் #1412

பாடல் #1412: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே யதோமுக மேலே யமுதமாய்த்
தானே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ யதொமுக மெலெ யமுதமாயத
தானெ யுகாரந தழைததெழுஞ சொமனுங
காமெல வருகினற கறபக மானது
பூமெல வருகினற பொறகொடி யானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே அதோ முகம் மேலே அமுதம் ஆய்
தானே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொற் கொடி ஆனதே.

பதப்பொருள்:

ஆமே (எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர்) அதோ (இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோ) முகம் (முகம் போல் உலகத்தை தாங்கிக் கொண்டு இருப்பவராகவும்) மேலே (அதற்கு மேலே இருக்கின்ற) அமுதம் (அமிழ்தம்) ஆய் (ஆகவும்)
தானே (தாமே) உகாரம் (அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும்) தழைத்து (சிறப்பாக) எழும் (எழுந்து வந்து) சோமனும் (உயிர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும்)
கா (தமது உடலுக்கு) மேல் (மேலே) வருகின்ற (வந்து கேட்டது அனைத்தும் கொடுத்து அருளும்) கற்பகம் (கற்பகத் தரு) ஆனது (ஆகவும்)
பூ (பூமியின்) மேல் (மேல்) வருகின்ற (வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற) பொற் (தங்கம் போல் பிரகாசிக்கின்ற) கொடி (கொடியாகவும்) ஆனதே (ஆகி இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1411 இல் உள்ளபடி உலகத்திலுள்ள அனைத்தையும் தமக்குள்ளேயே நின்று இருக்க அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்த சாதகர் இறைவனின் கீழ் நோக்கி இருக்கும் ஆறாவது முகமான அதோ முகம் போல் உலகத்தை தாங்கிக் கொண்டு இருப்பவராகவும், அதற்கு மேலே இருக்கின்ற அமிழ்தமாகவும், அனைத்தையும் காக்கின்ற ஓங்காரத்தின் உகாரத் தத்துவமாகவும், சிறப்பாக எழுந்து வந்து உயிர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் அமைதியைக் கொடுக்கும் சந்திரனாகவும், தமது உடலுக்கு மேலே வந்து கேட்டது அனைத்தும் கொடுத்து அருளும் கற்பகத் தருவாகவும், பூமியின் மேல் வருகின்ற அனைத்து உலகங்களையும் இணைக்கின்ற தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாகவும் இருக்கின்றார்.

பாடல் #1411

பாடல் #1411: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

விளங்கிடும் வானிடை நின்றவை யெல்லாம்
வணங்கிடு மண்டல மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளஙகிடும வானிடை நினறவை யெலலாம
வணஙகிடு மண்டல மனனுயி ராக
நலஙகிளர நனமைகள நாரண னொததுச
சுணஙகிடை நினறவை சொலலலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து
சுணங்கு இடை நின்றவை செல்லலும் ஆமே.

பதப்பொருள்:

விளங்கிடும் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொண்ட சாதகருக்கு விளங்கி விடும்) வான் (ஆகாயத்தின்) இடை (நடுவில்) நின்றவை (நிற்கின்ற) எல்லாம் (அனைத்து தத்துவங்களும்)
வணங்கிடும் (அவரை வணங்கிடும்) மண்டலம் (இடத்திலெல்லாம்) மன் (வாழுகின்ற) உயிர் (உயிர்கள்) ஆக (ஆகவே அவரும் இருந்து)
நலம் (நலம் தரும்) கிளர் (பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து) நன்மைகள் (அதன் மூலம் அந்த உயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து) நாரணன் (நரனாக / மனிதனாக இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து) ஒத்து (காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே)
சுணங்கு (உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க) இடை (அதற்கு நடுவில்) நின்றவை (நின்று கொண்டு) செல்லலும் (அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும்) ஆமே (முடியும்).

விளக்கம்:

பாடல் #1410 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொண்ட சாதகருக்கு ஆகாயத்தின் நடுவில் நிற்கின்ற அனைத்து தத்துவங்களும் விளங்கிவிடும். அவரை வணங்கிடும் இடத்திலெல்லாம் வாழுகின்ற உயிர்கள் ஆகவே அவரும் இருந்து நலம் தரும் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்து அதன் மூலம் அந்த உயிர்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்து நரனாக (மனிதனாக) இருந்தும் அனைத்துமாகவே தானும் இருந்து காக்கும் தொழில் புரியும் திருமாலைப் போலவே உலகத்திலுள்ள அனைத்தும் தமக்குள்ளேயே இருக்க அதற்கு நடுவில் நின்று கொண்டு அவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லவும் முடியும்.

பாடல் #1410

பாடல் #1410: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்து ளிருந்திடக்
கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின வென்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறது புநதி நிறைநதிடும வனனியுங
கணடது சொதி கருதது ளிருநதிடக
கொணடது வொராணடு கூடி வருகைககு
விணட வெளகாரம விளஙகின வெனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்ற அது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்ட அது சோதி கருத்து உள் இருந்திட
கொண்ட அது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின என்றே.

பதப்பொருள்:

நின்ற (முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற) அது (இறைவியே) புந்தி (சாதகரின் அறிவு) நிறைந்திடும் (முழுவதும் நிறைந்து இருக்கின்ற) வன்னியும் (அக்னியாகவும்)
கண்ட (அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற) அது (வடிவமே) சோதி (ஜோதியாகவும்) கருத்து (தமது கருத்துக்கு) உள் (உள்ளே வைத்து) இருந்திட (தியானத்தில் இருப்பதையே)
கொண்ட (சாதகமாகக் கொண்ட) அது (சாதகர்களுக்கு) ஓர் (அந்த நிலையே ஒரு) ஆண்டு (ஆண்டு முழுவதும்) கூடி (விட்டுவிடாமல் சேர்ந்து) வருகைக்கு (கைவரப் பெற்றால்)
விண்ட (ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள) வௌகாரம் (‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின்) விளங்கின (உட் பொருளை விளங்கிக் கொள்ள) என்றே (முடியும்).

விளக்கம்:

பாடல் #1409 இல் உள்ளபடி முப்பத்தாறு சக்திகளும் நெருங்கி நிற்கின்ற இறைவியே சாதகரின் அறிவு முழுவதும் நிறைந்து இருக்கின்ற அக்னியாகவும் அந்த அக்னிக்குள் தரிசிக்கின்ற வடிவமே ஜோதியாகவும் தமது கருத்துக்கு உள்ளே வைத்து இடைவிடாமல் ஒரு வருடம் தியானத்தில் இருந்தால் பாடல் #1406 இல் உள்ளபடி ஆகாயம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஔம்’ எனும் பீஜ மந்திரத்தின் உட் பொருளை விளங்கிக் கொள்ள முடியும்.

பாடல் #1409

பாடல் #1409: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரு
நாடிலி கன்னிக ணாலொன் பதிமரும்
பூவிலி பூவித ழுள்ளே யிருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின்றார் களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடிலி சததிகள முபபத தறுவரு
நாடிலி கனனிக ணாலொன பதிமரும
பூவிலி பூவித ளுளளெ யிருநதவர
நாளிலி தனனை நணுகிநினறார களெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும்
நாடு இலி கன்னிகள் நால் ஒன்பதிமரும்
பூ இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள் இலி தன்னை நணுகி நின்றார்களே.

பதப்பொருள்:

கேடு (எந்தவிதமான தீங்கும்) இலி (இல்லாமல்) சத்திகள் (சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள்) முப்பத்து (முப்பதும்) அறுவரும் (ஆறும் கூட்டி வரும் மொத்தம் முப்பத்தாறு பேரும்)
நாடு (சாதகர் தேடி அடைய வேண்டியது) இலி (இல்லாமல்) கன்னிகள் (தாமாகவே இறைவியோடு சேர்ந்து வருகின்ற என்றும் இளமையுடன் இருக்கும் சக்திகள்) நால் (நான்கும்) ஒன்பதிமரும் (ஒன்பதும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு பேரும்)
பூ (தமக்கென்று எந்த இடமும்) இலி (இல்லாதவர்களாக) பூ (சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின்) இதழ் (இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு) உள்ளே (அதற்கு உள்ளே வந்து) இருந்தவர் (வீற்றிருக்கின்றார்கள்)
நாள் (காலம் என்கிற ஒன்று) இலி (இல்லாதவளாகிய) தன்னை (இறைவியை) நணுகி (நெருங்கியே) நின்றார்களே (இவர்கள் நிற்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1408 இல் உள்ளபடி எந்தவிதமான தீங்கும் இல்லாமல் சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்தாறு பேர் இருக்கின்றார்கள். சாதகர் தேடி அடைய வேண்டியது இல்லாமல் தாமாகவே இறைவியோடு சேர்ந்து வருகின்ற என்றும் இளமையுடன் இருக்கும் இந்த முப்பத்தாறு சக்திகளும் தமக்கென்று எந்த இடமும் இல்லாதவர்களாக சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின் இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு அதன் உள்ளே வீற்றிருக்கின்றார்கள். இவர்கள் முப்பத்தாறு பேரும் காலம் என்கிற ஒன்று இல்லாதவளாகிய இறைவியை நெருங்கியே நிற்கின்றார்கள்.

பாடல் #1408

பாடல் #1408: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அமுத மதாக வழகிய மேனி
படிக மதாகப் பரந்தெழு முள்ளே
குமுத மதாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுத மதாகிய கேடிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அமுத மதாக வழகிய மெனி
படிக மதாகப பரநதெழு முளளெ
குமுத மதாகக குளிரநதெழு முததுக
கெழுத மதாகிய கெடிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆக குளிர்ந்து எழும் முத்துக்கு
எழுதம் அது ஆகிய கேடு இலி தானே.

பதப்பொருள்:

அமுதம் (அமிழ்தம்) அது (எனும் பொருள்) ஆக (ஆகவே மாறி இருக்கும் இறைவியின்) அழகிய (பேரழகுடைய) மேனி (திருமேனியானது)
படிகம் (பளிங்குக் கல்லை) அது (போலவே) ஆக (உறுதியாக) பரந்து (சாதகரை வணங்கும் உயிர்களுக்குள் பரந்து விரிந்து) எழும் (எழுந்து) உள்ளே (உள்ளுக்குள்)
குமுதம் (அல்லி எனும்) அது (மலரைப்) ஆக (போலவே) குளிர்ந்து (குளிர்ச்சியுடன்) எழும் (மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை) முத்துக்கு (முத்துப் போன்ற)
எழுதம் (வடிவமாகவும்) அது (உறுதியான கல்லாகவும்) ஆகிய (ஆக்கி) கேடு (அதற்கு எந்த விதமான தீங்கும்) இலி (இல்லாத) தானே (சக்தியாகிறது).

விளக்கம்:

பாடல் #1407 இல் உள்ளபடி அமிழ்தமாகவே மாறி இருக்கும் இறைவியின் பேரழகுடைய திருமேனியானது பளிங்குக் கல்லை போலவே உறுதியாக சாதகருக்குள் பரந்து விரிந்து எழுந்து அல்லி மலரைப் போலவே குளிர்ச்சியுடன் மூலாதாரத்திலிருந்து எழுந்து வருகின்ற சுக்கிலத்தை முத்துப் போன்ற வடிவமாகவும் உறுதியான கல்லாகவும் ஆக்கி அதற்கு எந்த விதமான தீங்கும் இல்லாத சக்தியாகிறது.

பாடல் #1407

பாடல் #1407: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

என்றங் கிருந்த வமுதக் கலையிடைச்
சென்றங் கிருந்த வமுதப் பயோதரி
கண்ட கரமிரு வெள்ளிபொன் மண்டையாய்க்
கொண்டங் கிருந்தது வண்ண வமுதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எனறங கிருநத வமுதக கலையிடைச
செனறங கிருநத வமுதப பயொதரி
கணட கரமிரு வெளளிபொன மணடையாயக
கொணடங கிருநதது வணண வமுதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

என்று அங்கு இருந்த அமுத கலை இடை
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி
கண்ட கரம் இரு வெள்ளி பொன் மண்டை ஆய்
கொண்டு அங்கு இருந்தது வண்ண அமுதமே.

பதப்பொருள்:

என்று (ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று) அங்கு (உயிர்களுக்குள்) இருந்த (இருந்த சாதகரின் ஜோதியானது) அமுத (அமிழ்தம்) கலை (செயல் பட்டுக் கொண்டு இருக்கும்) இடை (மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு)
சென்று (உள்ளே சென்று) அங்கு (அங்கே) இருந்த (வீற்றிருக்கின்ற) அமுத (அமிழ்தத்தினால்) பயோதரி (உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியை)
கண்ட (தரிசித்து) கரம் (அங்கு கரங்களாக இருக்கின்ற) இரு (இரண்டு நாடிகளின் [இடகலை, பிங்கலை] மூலமாக மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று) வெள்ளி (வெள்ளி போன்ற நிறத்தில் மூலாதாரத்துக்கு அருகில் இருக்கும் சுக்கிலத்தோடு உராய்ந்து) பொன் (அதை தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றி) மண்டை (அந்த ஜோதியை தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்று) ஆய் (ஜோதி வடிவம்)
கொண்டு (கொண்டு) அங்கு (அங்கே) இருந்தது (இருக்கின்ற இறைவியோடு கலக்கும் பொழுது அவள்) வண்ண (தனது திருமேனி) அமுதமே (அமிழ்தமாக மாறி அருளுகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1406 இல் உள்ளபடி தம்மை இறைவனாகவே வணங்குகின்ற உயிர்களின் ஆன்மாவிற்கு ஜோதி தரிசனம் காட்ட என்று அவர்களுக்குள் இருந்த சாதகரின் ஜோதியானது அமிழ்தம் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் மூலாதாரத்திற்கும் தலை உச்சிக்கும் இடைப் பட்ட பகுதிக்கு உள்ளே சென்று அங்கே வீற்றிருக்கின்ற அமிழ்தத்தினால் உயிர்களின் மாயையை நீக்கி அருளுகின்ற இறைவியை தரிசித்து அங்கு கரங்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற இரண்டு நாடிகளின் [இடகலை, பிங்கலை] மூலமாக மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று வெள்ளி போன்ற நிறத்தில் மூலாதாரத்துக்கு அருகில் இருக்கும் சுக்கிலத்தோடு உராய்ந்து அதை தங்கம் போன்ற நிறத்தில் இருக்கும் ஜோதியாக மாற்றிகின்றது. அதன் பிறகு அந்த ஜோதியை தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்று ஜோதி வடிவம் கொண்டு அங்கே வீற்றிருக்கின்ற இறைவியோடு கலக்கும் பொழுது அவள் தனது திருமேனி அமிழ்தமாக மாறி அருளுகின்றாள்.

பாடல் #1406

பாடல் #1406: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மண்ணி லெழுந்த வகார வுகாரங்கள்
விண்ணி லெழுந்து சிவாய நமவென்று
தண்ணி லெழுந்தது காண்பரி தென்றுதான்
கண்ணி லெழுந்தது காட்சிதர வென்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மணணி லெழுநத வகார வுகாரஙகள
விணணி லெழுநது சிவாய நமவெனறு
தணணி லெழுநதது காணபரி தெனறுதான
கணணி லெழுநதது காட்சிதர வெனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நம என்று
தண்ணில் எழுந்தது காண்பு அரிது என்று தான்
கண்ணில் எழுந்தது காட்சி தர என்றே.

பதப்பொருள்:

மண்ணில் (சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்து) எழுந்த (எழுந்து இருக்கும் ஜோதியே) அகார (ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும்) உகாரங்கள் (காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல் படுகின்றது)
விண்ணில் (அதுவே ஆகாயத்தில்) எழுந்து (எழுந்து வீற்றிருக்கும் போது) சிவாய (இறைவனாகவே ‘சிவாய’ என்று அழைத்து) நம (‘நம’ என்று வணங்குவதற்கு) என்று (என்றும்)
தண்ணில் (கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகின்றதாகவும்) எழுந்தது (எழுந்து இருக்கின்றது) காண்பு (இந்த ஜோதியை உருவமாக பாரப்பது) அரிது (இயலாது) என்று (என்ற காரணத்தால்) தான் (உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும் போது)
கண்ணில் (சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே) எழுந்தது (எழுந்து வந்து) காட்சி (அருள் காட்சியை) தர (அருளவும்) என்றே (காரணமாக இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1405 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்து எழுந்து இருக்கும் ஜோதியே ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும் காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல் படுகின்றது. அதுவே ஆகாயத்தில் எழுந்து வீற்றிருக்கும் போது இறைவனாகவே ‘சிவாயநம’ என்று வணங்குபவர்களுக்கு கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகின்றதாகவும் இருக்கின்றது. இந்த ஜோதியை உருவமாக பார்ப்பது இயலாது என்ற காரணத்தால் உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும் போது சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே எழுந்து வந்து அருள் காட்சியை அருளவும் காரணமாக இருக்கின்றது.

உட்கருத்து:

இறை நிலையில் வீற்றிருக்கும் சாகதருக்குள் இருக்கும் ஜோதியானது உலகம் முழுவதும் இருக்கின்ற உயிர்களுக்குள் சென்று மாயை நீங்கி இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதே படைத்தல் தொழிலாகும். அவ்வாறு எண்ணிக் கொண்டு வணங்கும் உயிர்கள் மீண்டும் மாயையில் சிக்கிக் கொள்ளாமல் காத்து அருளுவதே காத்தல் தொழிலாகும். இந்த இரண்டு தொழில்களையும் இறை நிலையில் இருந்து சாதகர் செய்வதால் அவரது ஜோதியை இறைவனாகவே வணங்கும் உயிர்களுக்கும் ஜோதி தரிசனத்தையும் கிடைப்பதற்கு அரியதான அமைதியையும் வழங்கும் நிலையில் இருக்கின்றார்.

பாடல் #1405

பாடல் #1405: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாரதி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரதி னுள்ளே பரந்து ளெழுந்திட
வேரதுவ் வொன்றி நின்றெண்ணு மனோமயங்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாரதி னுளளெ தயஙகிய சொதியைப
பாரதி னுளளெ பரநது ளெழுநதிட
வெரதுவ வொனறி நினறெணணு மனொமயங
காரது பொலக கலநதெழு மணணிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தார் அதின் உள்ளே தயங்கிய சோதியை
பார் அதின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போல கலந்து எழு மண்ணிலே.

பதப்பொருள்:

தார் (சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை) அதின் (மலரின்) உள்ளே (உள்ளே இருந்து) தயங்கிய (சாதகம் செய்ய செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற) சோதியை (ஜோதியை)
பார் (சாதகர் இருக்கின்ற உலகம்) அதின் (அதற்கு) உள்ளே (உள்ளே இருக்கின்ற உயிர்களுக்கு எல்லாம்) பரந்து (பரந்து சென்று) உள் (அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற) எழுந்திட (ஜோதியோடு எழுந்திட)
வேர் (அந்த ஜோதியின் ஆதாரமாக) அது (சாதகரின் உள்ளே இருக்கின்ற ஜோதியும்) ஒன்றி (ஒன்றாக சேர்ந்து) நின்று (நிற்கும் படி) எண்ணு (எண்ணிக் கொண்டே இருக்கின்ற சாதகரின்) மனோமயம் (மன வலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி)
கார் (மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாக) அது (பொழிவது) போல (போலவே) கலந்து (சாதகருக்குள்ளிருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற உயிர்களோடும் கலந்து) எழு (எழுந்து) மண்ணிலே (அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகின்றது).

விளக்கம்:

சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே இருந்து சாதகம் செய்ய செய்ய மெதுவாக மேலெழுந்து வருகின்ற ஜோதியை சாதகர் இருக்கின்ற உலகத்தில் இருக்கின்ற உயிர்களுக்கு எல்லாம் பரந்து சென்று அவைகளுக்கு உள்ளே இருக்கின்ற ஜோதியோடு எழுந்திடும். இதற்கு ஆதாரமாக சாதகரின் உள்ளே சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஜோதியும் அதனோடு ஒன்றாக சேர்ந்து நிற்கும் படி எண்ணிக் கொண்டே இருக்கின்ற சாதகரின் மன வலிமைக்கும் தியானத்திற்கும் ஏற்றபடி மேகங்களில் இருக்கின்ற நீர் மண்ணில் மழையாகப் பொழிந்து வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் மேகத்தோடு சேர்ந்து மழையாக பொழிவது போலவே சாதகருக்குள்ளிருக்கும் ஆதார ஜோதியானது உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்ற உயிர்களோடும் கலந்து எழுந்து அனைவருக்கும் பயன் கொடுக்கும் ஜோதியாக விளங்குகின்றது.

பாடல் #1404

பாடல் #1404: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பூசனை சத்திக ளெண்ணைவர் சூழவே
நேசவள் கன்னிகள் நாற்பது நேரதாக்
காசினி சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூசனை சததிக ளெணணைவர சூழவெ
நெசவள கனனிகள நாறபது நெரதாக
காசினி சககரத துளளெ கலநதவள
மாசடை யாமல மகிழநதிருந தாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூசனை சத்திகள் எண் ஐவர் சூழவே
நேச அவள் கன்னிகள் நால் பத்து நேர் அதாய்
காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள்
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே.

பதப்பொருள்:

பூசனை (இறைவிக்கு சரிசமமாக பூஜிக்க தகுந்த பத்து பொருள்களையும் சூழ்ந்து இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) எண் (எட்டும்) ஐவர் (ஐந்தும் பெருக்கினால் வரும் மொத்தம் நாற்பது பேரும்) சூழவே (சூழ்ந்து இருக்க)
நேச (அவர்கள் நேசிக்கின்ற) அவள் (இறைவி நடுவில் வீற்றிருக்கின்றாள்) கன்னிகள் (என்றும் இளமையுடன் இருக்கின்ற சக்திகள்) நால் (நான்கும்) பத்து (பத்தும் கூட்டி வரும் மொத்தம் நாற்பது பேரும்) நேர் (இறைவிக்கு சரிசமமாக) அதாய் (அருளுபவர்களாக இருக்கின்றார்கள்)
காசினி (இறைவியோடு ஒன்றாக சேர்ந்தே இருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள்) சக்கரத்து (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு) உள்ளே (உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு) கலந்து (ஒன்றாகக் கலந்து) அவள் (அவளது அருளால்)
மாசு (தாங்கள் கழிக்கும் எந்த கர்ம வினைகளினாலும் மாசு வந்து) அடையாமல் (சேர்ந்து விடாமலும்) மகிழ்ந்து (கர்ம வினைகளை கழித்து உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும்) இருந்தார்களே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

பாடல் #1403 இல் உள்ளபடி இறைவிக்கு சரிசமமாக பூஜிக்க தகுந்த பத்து பொருள்களையும் சூழ்ந்து இருக்கின்ற சக்திகள் நாற்பது பேரும் நேசிக்கின்ற இறைவி அவர்களுக்கு நடுவில் வீற்றிருக்கின்றாள். என்றும் இளமையுடன் இருக்கின்ற இந்த நாற்பது சக்திகளும் இறைவிக்கு சரிசமமாக அருளுபவர்களாக இருக்கின்றார்கள். பாடல் #1401 இல் உள்ளபடி இறைவியோடு ஒன்றாக சேர்ந்தே இருப்பதால் உலகமாகவே ஆகிவிட்ட சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளே வீற்றிருக்கும் இறைவியோடு இந்த நாற்பது பேரும் ஒன்றாகக் கலந்து அவளது அருளால் இறைவியையோ அல்லது அவளுக்கு சரிசமமாக இருக்கின்ற பத்து பொருள்களையோ வணங்குகின்ற உயிர்களின் கர்மங்களை தீர்க்கும் போது அதனால் எந்தவிதமான மாசும் வந்து சேர்ந்து விடாமலும் கர்ம வினைகளை தீர்த்து அதனால் உயிர்கள் இன்பம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றார்கள்.

பாடல் #1403

பாடல் #1403: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்
பன்மணி நாகமழுக் கத்தி பந்தாகுங்
கன்மணி தாமரை கையிற் றமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நனமணி சூலங கபாலங கிளியுடன
பனமணி நாகமழுக கததி பநதாகுங
கனமணி தாமரை கையிற றமருகம
பொனமணி பூணாரம பூசனை யானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழு கத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரை கையில் தமருகம்
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே.

பதப்பொருள்:

நல் (நன்மையை அருளும் இறைவியின் திருக்கரங்களில் தூய்மையான) மணி (ரத்தின மணிகளை பதித்த) சூலம் (திரிசூலமும்) கபாலம் (மண்டையோடும்) கிளியுடன் (கிளியும்)
பல் (பலவிதமான) மணி (ரத்தின மணிகளை பதித்த) நாகம் (நாகமும்) மழு (கோடரியும்) கத்தி (கத்தியும்) பந்து (பந்தும்) ஆகும் (ஆயுதமாகவும்)
கல் (கல்லில்) மணி (ரத்தின மணிகளை பதித்த) தாமரை (தாமரை மலரும்) கையில் (தாங்கி இருக்கின்ற திருக்கரங்களில்) தமருகம் (தமருகமும்)
பொன் (தங்கத்தில்) மணி (ரத்தின மணிகளால்) பூண் (சேர்த்துப் பூட்டிய) ஆரம் (மாலையும்) பூசனை (ஆகிய பொருட்கள் அனைத்துமே இறைவிக்கு சரிசமமாக பூஜிக்கத்) ஆனதே (தகுந்தது ஆகும்).

விளக்கம்:

பாடல் #1402 இல் உள்ளபடி நன்மையை அருளும் இறைவியின் பத்து திருக்கரங்களில் தூய்மையான ரத்தின மணிகளை பதித்த 1. திரிசூலமும் 2. மண்டையோடும் 3. கிளியும் 4. பலவிதமான ரத்தின மணிகளை பதித்த நாகமும் 5. கோடரியும் 6. கத்தியும் 7. பந்தும் ஆயுதமாகவும் 8. கல்லில் ரத்தின மணிகளை பதித்த தாமரை மலரும் 9. தமருகமும் 10. தங்கத்தில் ரத்தின மணிகளால் சேர்த்துப் பூட்டிய மாலையும் வைத்து இருக்கின்றாள். இப்படி இறைவியின் திருக்கரங்களில் இருக்கும் பத்து பொருட்களுமே இறைவிக்கு சரிசமமாக பூஜிக்கத் தகுந்தது ஆகும்.

குறிப்பு:

முருகனின் வேலை வணங்குவது முருகப் பெருமானை வணங்குவதற்கு சமமாகக் கொள்ளப் படுவது போலவே இங்கே இறைவியின் திருக்கரங்களில் இருக்கின்ற பத்து பொருளையும் வணங்குதல் இறைவியை வணங்குவதற்கு சமமாகக் கொள்ளப் படுகிறது.