திருமந்திரம் – மூன்றாம் தந்திரம்

திருமந்திரம் மூன்றாம் தந்திரம் அனைத்து பாடல்களும் விளக்கங்களுடன் PDF மின் புத்தகமாக கீழே இருக்கும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளும்படி கொடுத்துள்ளோம். அதற்கு கீழே நேரடியாகவே புத்தகத்தை பார்த்துப் படிக்கும்படி கொடுத்துள்ளோம்.

https://www.kvnthirumoolar.com/wp-content/uploads/2020/05/Thirumandhiram-Thandhiram-3.pdf

Thirumandhiram-Thandhiram-3

பாடல் #853

பாடல் #853: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளு மற்றங்கி கூடவே.

விளக்கம் :

சூரியன் பன்னிரண்டு கலைகளோடு சந்திரனது பதினாறு கலைகளையும் அக்கினியோடு சேர்க்க அறிந்து கொண்டவர் உலகம் விரும்பும் பேறுகளை அடைவர்.

பாடல் #854

பாடல் #854: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமையை ஆய்ந்துகொள் வீரே.

விளக்கம்:

சூரியகலை உயர்ந்து செல்லும் அளவு பன்னிரண்டு ஆகும். சந்திரக்கலை செல்லும் அளவு பதினாறு ஆகும். சூரியகலையும் சந்திரகலையும் சேர்ந்து குண்டலினியாகிய அக்கினியை உயர்த்திச் செல்வது மொத்தம் அறுபத்து நான்கு ஆகும். இவை மூன்றையும் குருநாதரின் வழிகாட்டுதலில் யோக முறைப்படி செய்து ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

பாடல் #855

பாடல் #855: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீ தீரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.

விளக்கம்:

அக்கினிக் கலைகள் அறுபது நான்கு. சூரியனின் கலைகள் பன்னிரண்டு. சந்திரனின் கலைகள் பதினாறு இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சூழ்ந்து இருந்தாலும் தனித்தனியாகவே விளங்கிக் கொண்டிருக்கும்.

பாடல் #856

பாடல் #856: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையென்ப
கட்டப் படுந்தார கைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.

விளக்கம் :

அக்கினிக்கு அறுபத்து நான்கு சூரியனுக்குப் பன்னிரண்டு சந்திரனுக்குப் பதினாறு என கலைகள் 92 ம் சேர்ந்துள்ள மூலாதாரத்தில் நட்சத்திரக் கலை நான்கு உள்ளன. இவ்வாறு மூலாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைகள் மொத்தம் தொண்ணூற்றாறு ஆகும்.

பாடல் #857

பாடல் #857: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடியை நண்ணிநிற் பாரே.

விளக்கம் :

சந்திர மண்டலமாகிய இடகலை மற்றும் சூரிய மண்டலமாகிய பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் எல்லா மூச்சுக்காற்றும் இயல்பாகவே கீழ் நோக்கி செல்லக்கூடியவை. அவற்றைத் தடுத்து நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே அவற்றை மேல் நோக்கி எடுத்துச் சென்று உச்சந்தலையில் உள்ள சகஸ்ரதளத்தில் சேர்த்து இறைவனின் மேல் எண்ணத்தை வைத்து இருக்கும் யோகியர்கள் எப்போதும் இறப்பின்றி இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.

பாடல் #858

பாடல் #858: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.

விளக்கம்:

சந்திர யோகத்தில் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் மூச்சுக்காற்று மூலாதாரத்தில் உள்ள நெருப்பின் மேல் பட்டு மூலாதாரத்தின் அசைவினால் தோன்றும் ஒளிக்கீற்றுக்கள் சூரியன் சந்திரன் என்னும் இரண்டு நட்சத்திரங்களாக மாறுகிறது. இந்த நட்சத்திரங்களாக மாறிய ஒளிக்கீற்றைகளை மூச்சுக்காற்றுடன் உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தாண்டி எட்டாவது சக்கரமாகிய துவாதசந்தவெளியையும் தாண்டி ஒன்பதாவது பரவெளியில் கொண்டு சென்று அங்கு உள்ள பரவொளியுடன் கலந்து விட்டால் உலகத்தை இயக்கும் இறைவனது பேரொளியின் அம்சமாக இருக்கலாம்.

குறிப்பு: அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது எனும் சொல்லுக்கு ஏற்ப உலகம் என்று நாம் அழைக்கும் சூரிய குடும்பத்தில் இருக்கின்ற ஒன்பது கிரகங்களும் இன்னும் பல நட்சத்திரங்களும் நமது உடலிலேயே இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒளி உருவமாக இருந்து இயக்கும் இறைசக்தியே நமது உடலில் சகஸ்ரதளத்தில் ஜோதி வடிவாக தங்கி இருக்கின்றது. இதை நாம் யோகப் பயிற்சியின் மூலம் இயக்க ஆரம்பித்தால் உலகங்கள் அனைத்தையும் இயக்கும் இறை சக்தியாகவே நாமும் மாறிவிடுவோம்.

பாடல் #859

பாடல் #859: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.

விளக்கம்:

உயிர்களின் உடலில் இருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத அம்சங்கள் இடகலை பிங்கலை வழியே சுழன்று கொண்டிருக்கும் சூடான மற்றும் குளிர்ந்த மூச்சுக்காற்று மூலாதாரத்திலுள்ள குண்டலினியிலிருந்து தோன்றும் ஒளிக்கீற்றுக்கள் என மொத்தம் ஒன்பது வகையான அம்சங்களும் பிரணவமாகிய இறை சக்தியின் அம்சங்களாகும். இவற்றை உபயோகித்து செய்யும் யோகமே இறைவனை அடைவதற்கு உதவும் மிகப்பெரிய மார்க்கமாகும்.

பாடல் #860

பாடல் #860: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தானாஞ் சொரூபமே.

விளக்கம்:

வானத்து நட்சத்திரங்கள் சந்திரனின் தேய்பிறை சமயத்தில் பிரகாசமாக மின்னும். அதுவே சந்திரனின் வளர்பிறை சமயத்தில் நட்சத்திரங்களின் ஒளி சந்திரனின் பிரகாசமான ஒளியில் மங்கிவிடும். அதுபோலவே சந்திர யோகம் செய்கின்ற யோகியர்கள் தமது மூச்சுக்காற்றை கீழ் நோக்கி எடுத்துச் சென்று குண்டலினியில் கலக்கும்போது அதில் பிரகாசமான ஒளிக்கீற்றுக்கள் உருவாகும். அதை ஒளிக்கீற்றை மேல் நோக்கி சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் செல்லும்போது சகஸ்ரதள ஜோதியின் பிரகாசமான ஒளியில் மங்கிவிடும். சந்திர யோகம் செய்து குண்டலினியில் உருவாகும் ஒளிக்கீற்றுக்களை சகஸ்ரதள ஜோதியில் சென்று சேர்க்கும் யோகியர்களிடம் பிரகாசிக்கும் ஜோதி உலகத்தில் அனைத்தையும் உருவாக்கும் பேரொளி ஜோதியான இறைவனின் சொரூபம் (ஒளி உருவம்) ஆகும்.

பாடல் #861

பாடல் #861: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யானின்கழல் சேர்தலு மாமே.

விளக்கம் :

சந்திரன் முதல் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பெளர்ணமியில் முழுமை அடையும். அதன்பிறகு பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து அமாவாசையில் முழுமையாக மறைந்துவிடும். அதுபோலவே சந்திர யோகம் செய்யும் யோகியருக்கு குண்டலினியில் ஒளிக்கீற்றுக்கள் தோன்றி பெரிய நட்சத்திரமாக வளர்ந்து பின்பு சகஸ்ரதளத்தில் சென்று முழுமையாக மறைந்துவிடும். இந்த பதினைந்து நிலைகளையும் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய யோகியர்கள் வார்த்தைகளில் கூறிவிடமுடியாத மகத்துவத்தைக் கொண்ட இறைவனின் திருவடிகளை தமக்குள் கண்டு அடைவார்கள்.