பாடல் #280

பாடல் #280: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.

விளக்கம்:

தம்மை இகழ்ச்சியாக பேசும் உயிர்களையும் போற்றி வணங்கும் உயிர்களையும் சிவபெருமான் அறிவான். தம்மை இகழ்ந்து பேசிய உயிர்களுக்கும் மனமுவந்து அவரவர் மனதிற்கேற்ப அருளை வழங்கும் உத்தமமான தலைவன் இறைவன். அப்படிப்பட்ட இறைவனை உயிர்கள் தமது உள்ளத்திலிருந்து வெளிவரும் தூய்மையான அன்போடு அழைத்து அருள் வேண்டுமென்று கேட்டுவிட்டால், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வேண்டியதை உடனே தந்துவிடுவதும் அந்த இறைவனின் பேரருளே ஆகும்.

பாடல் #281

பாடல் #281: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல எண்ணினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்த பிறவியிலேயே பேரின்பம் அடைவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் இறைவன் செய்து வைத்திருந்தாலும் உயிர்கள் தாம் எடுத்த பிறவியில் துன்பத்தைத் தரக்கூடிய உலக ஆசைகளின் வழியே பலவித செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் ஆசை வழியே சென்றாலும் உயிர்கள் மீது கொண்ட பேரன்பினால் அவர்களின் பிறவியை அறுக்கும் ஒரு வழியாக தூய்மையான அன்பை வைத்து இருக்கின்றான். ஆசை வழியே சென்று துன்பத்திற்குரிய காரியங்களைச் செய்யும் உயிர்களானாலும் தூய்மையான அன்புடன் இருந்தால் அவர்களுக்கு வேறு பிறவியில்லாத முக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கி அருளுவான்.

பாடல் #282

பாடல் #282: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தன
துன்புறு கண்ணியைந் தொடும் துடக்கற்று
நண்புறு சிந்தையொடு நாடுமின் நீரே.

விளக்கம்:

அனைத்து உயிர்களிடமும் தூய்மையான அன்புடன் இருப்பவர்களின் எண்ணத்தில் பேரொளியாக எழும் இறைவன் உயிர்களின் பிறவியை அறுத்து பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தமாக இரண்டு கண்களுக்கு நடுவே இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் இணைந்து எழுகின்றான். உயிர்களின் உள்ளத்தில் பேரொளியாக இறைவன் எழுந்தபின் ஆன்மாக்களுக்கு துன்பத்தை தரும் ஐம்புலன்களின் தொடர்பு அறுபட்டு நீங்கும். அனைத்து உயிர்களிடமும் அன்பையே சிந்தனை செய்யும் எண்ணத்தோடு அவனைச் சென்று அடையுங்கள் நீங்கள்.

பாடல் #283

பாடல் #283: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

புணர்ச்சியுள் ஆயிழை மேலன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லார்க்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது வாமே.

விளக்கம்:

ஆண்கள் தாம் அன்புகொண்ட மனைவியரோடு இருக்கும் பொழுது அந்த உணர்விலேயே ஊறித் தம்மை மறந்து இருப்பதுபோல இறைவன் மீது தாம் வைத்திருக்கும் தூய்மையான அன்பின் உணர்ச்சியிலேயே ஊறித் தம்மை மறந்து இருக்கக்கூடிய உயிர்களுக்கு வெறும் உடல் உணர்ச்சி இல்லாமல் உள்ளத்திலிருக்கும் உணர்ச்சியோடு ஒன்றாகக் கூடி அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை காத்து நிற்பான் இறைவன். அப்படிப்பட்ட இறைவனிடம் கிடைக்கும் பேரின்பம் உலகப் பற்றுக்களோடு இருக்கும் அன்பில் கிடைக்கும் சிற்றின்பத்தைவிட மிகவும் பெரியது ஆகும்.

பாடல் #284

பாடல் #284: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்துஅவர் முன்புநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களிடம் உண்மையான அன்பு வைத்து இருக்கும் அன்பர்களுடன் சேர்ந்து இருக்கும் பேரொளியான இறைவனை வெறும் சிந்தனை மட்டுமே செய்பவர்களால் அவன் எப்படி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளவோ அவனது பேரன்பையோ அறிந்து கொள்ளவோ முடியாது. சிந்தனையை விட்டுவிட்டு அவன் மீது உண்மையான பக்தி கொண்டு அவன் திருவடிகளைப் பணிந்து தொழுது வருபவர்களுக்கு அவன் முக்தியையும் கொடுத்து அவர்களின் கண் முன்பும் வந்து நிற்பான் இறைவன்.

பாடல் #285

பாடல் #285: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

கண்டேன் கமழ்தரு கொன்றையி னானடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலருறை வானடி
கண்டேன் கழலதுஎன் அன்பினுள் யானே.

விளக்கம்:

சுகந்தமான வாசனை கொண்ட கொன்றை மலர்களைச் சூடியிருக்கின்றவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன். அறியாமையாகிய யானையை கதறும்படி பிளந்து அதன் தோலை உரித்துப் போர்வையாக தன் மேல் போர்த்திக்கொண்டவனின் காதிலிருக்கும் அழகிய கழல்களை யான் கண்டு கொண்டேன். சகஸ்ரர தளத்தில் ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை யான் கண்டு கொண்டேன். இறைவனின் மேல் யான் கொண்ட பேரன்பால் அழகிய கழல்களை அணிந்து அன்பே உருவாமாய் நின்ற அவனது திருமேனியை யான் கண்டு கொண்டேன்.

பாடல் #286

பாடல் #286: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியவுமி லாரே.

விளக்கம்:

நம்மோடு எப்போதும் இருக்கும் இறைவனை அனைத்து விதமான பொருளாகவும் இருப்பவன் என்று விண்ணுலகத்திலிருக்கும் தேவர்களெல்லாம் போற்றித் துதிக்கும் தலைவனை பேரின்பத்தின் உருவமாக இருப்பவனை பேரின்பத்தின் இடையே நின்று பெருங்கருணையை வழங்கும் பேரன்பு மிக்க பெருமானை உயிர்கள் எவரும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்களே!

பாடல் #287

பாடல் #287: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாமறி வோமென்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியவுமி லாரே.

விளக்கம்:

தாம் முன்பு எடுத்த பிறவியையும் அந்தப் பிறவியில் இறந்த விதத்தையுமே அறியாத உயிர்கள் தாம் கொண்ட சிற்றின்ப அன்பிலேயே இறைவனைத் தெரிந்து கொண்டோம் என்று சொல்லுவார்கள். பேரின்பத்தையும் கொடுத்து பிறவியில்லாத வாழ்வைக் கொடுப்பவன் பிறப்பும் இறப்பும் இல்லாத இறைவன். அவனைத் தூய்மையான அன்பின் மூலம் அறிந்து கொள்ளாமல் இவர்கள் இருக்கின்றார்களே!

பாடல் #288

பாடல் #288: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னை
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈண்டிநின் றானே.

விளக்கம்:

இரவு பகல் என்று பார்க்காமல் எப்போதும் தம்மை தூய்மையான அன்பில் வைத்துப் போற்றித் தொழும் உயிர்களை சிவபெருமான் அறிவான். ஜோதியாக அவன் வந்து கலந்துவிடுவான் என்பதை அறிந்து கொண்டு எந்தச் செயலுமின்றி நாம் தியானத்தில் இருந்தாலே போதும். அந்தச் சிவபெருமானே நமது முன்னால் வந்து நம்மோடு அன்பில் கலந்து நிற்பான்.

பாடல் #289

பாடல் #289: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பதுவே மஞ்சன மாமே.

விளக்கம்:

இளமை இருக்கும்போது விட்டுவிட்டு வயதான பிறகு அனைத்திலும் உயர்ந்த ஜோதி வடிவான இறைவனை பிடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மூடத்தனம் ஆகும். செய்யும் அனைத்து காரியங்களிலும் இறைவனை நினைத்துக்கொண்டே வாழ்ந்து வருவது இறைவனை சென்றடைய வழிவகுத்து என்றும் அழியாத பெருமையை கொடுக்கும். அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆருயிராக இருக்கும் சிவபெருமானுடன் அளவில்லாத பேரன்பில் கலந்து இருப்பதுதான் உயிர்களுக்குள் இருக்கும் இறைவனுக்கு செய்யும் மிகச்சிறந்த அபிஷேகம் ஆகும்.