பாடல் #371

பாடல் #371: இரண்டாம் தந்திரம் – 7. எலும்பும் கபாலமும் (இறைவன் அணிந்திருக்கும் எலும்பும் கபாலமும் தத்துவம்)

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

விளக்கம்:

ஊழிக்காலத்தில் மனித உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் மாலையாகத் தரித்து எழுந்தருளும் இறைவன் வீரர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த வீரனும் மணிமுடி சூடிய விண்ணுலகத் தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும் ஆவான். ஊழிக்காலத்தில் இறைவன் மானிட உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் ஏந்தி நிற்கவில்லை என்றால் அனைத்து உயிர்களின் எலும்புகளும் மண்டையோடுகளும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் அழிந்துவிடும்.

உட்கருத்து: ஊழிக்காலத்தில் (பிரளயம்) உயிர்கள் மொத்தமாக சுவடின்றி மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விடாமல் காக்கும் மாபெரும் கருணையினால் இறைவனே மனித உடலின் எலும்புகளையும் மண்டையோடுகளையும் தாங்கி நிற்கின்றான். அப்படி அவன் நிற்கவில்லையெனில் உயிர்களின் சுவடுகூட மிஞ்சாது மொத்த உலகமும் அழிந்துபோய்விடும்.

Related image