பாடல் #1507

பாடல் #1507: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சாலோக மாதி சரிதாதியிற் பெறுஞ்
சாலோக சாமீபந் தங்குஞ் சரிதையா
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாலொக மாதி சரிதாதியிற பெறுஞ
சாலொக சாமீபந தஙகுஞ சரிதையா
மாலொகஞ செரில வழியாகுஞ சாரூபம
பாலொக மிலலாப பரனுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாலோகம் ஆதி சரிதை ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரிதை ஆம்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆகுமே.

பதப்பொருள்:

சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை) ஆதி (முதலாகிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும்) சரிதை (இறைவனை அடைவதற்கான சரியை) ஆதியில் (முதலாகிய சரியை, கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால்) பெறும் (பெறப்படும்)
சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம்) சாமீபம் (இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலை) தங்கும் (நமக்கு கிடைப்பது) சரிதை (சரியையை தொடர்ந்து முறைப்படி) ஆம் (செய்து கொண்டு இருப்பதால் ஆகும்)
மாலோகம் (இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே) சேரில் (சேர்ந்து இருந்தால்) வழி (அதுவே வழியாக) ஆகும் (இருக்கும்) சாரூபம் (அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு)
பாலோகம் (அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும்) இல்லா (இருக்கின்ற வடிவங்களில் இல்லாத) பரன் (பரம்பொருளின்) உரு (ஒளி உருவத்தோடு) ஆகுமே (அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்).

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை முதலாகிய சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும் இறைவனை அடைவதற்கான சரியை முதலாகிய சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால் பெறப்படும். இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம் இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலையானது சரியையை தொடர்ந்து முறைப்படி செய்து கொண்டு இருப்பதால் நமக்கு கிடைக்கும். இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே சேர்ந்து இருந்தால் அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு அதுவே வழியாக இருக்கும். அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற வடிவங்களில் இல்லாத பரம்பொருளின் ஒளி உருவத்தோடு அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்.

இறைவனை அடைந்த முக்திக்கான நிலைகள்:

 1. சாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
 2. சாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
 3. சாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
 4. சாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

இறைவனை அடைவதற்கான வழிகள்:

 1. சரியை – கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது.
 2. கிரியை – மந்திரம் சொல்லி சக்கரங்கள் வைத்து வழிபடுவது.
 3. யோகம் – தியானம் தவம் செய்வது.
 4. ஞானம் – அனைத்திற்கும் மேலான நிலையில் சலனங்கள் இன்றி இருப்பது.

பாடல் #1508

பாடல் #1508: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சமயங் கிரிதையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமயங கிரிதையிற றனமனங கொயில
சமய மனுமுறை தானெ விசெடஞ
சமயதது மூலந தனைததெறன மூனறாஞ
சமயாபி டெகந தானாஞ சமாதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமயம் கிரிதையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனை தேறல் மூன்று ஆம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் எனப்படுவது) கிரிதையில் (கிரியையில்) தன் (தன்) மனம் (மனதையே) கோயில் (இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) மனு (மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட) முறை (வழி முறைகளாக இருப்பது) தானே (தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின்) விசேடம் (விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும்)
சமயத்து (அந்த சமயத்தின்) மூலம் (மூலமே) தனை (தாம் யாராக இருக்கின்றோம்) தேறல் (என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது) மூன்று (சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான) ஆம் (நிலைகளை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) அபிடேகம் (அபிஷேகம்) தான் (என்பது தானே) ஆம் (இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த) சமாதியே (ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்).

விளக்கம்:

சமயம் எனப்படுவது கிரியையில் தன் மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும். சமயத்தில் மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வழி முறைகளாக இருப்பது தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின் விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும். அந்த சமயத்தின் மூலமே தாம் யாராக இருக்கின்றோம் என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான நிலைகளை அடைவது ஆகும். சமயத்தில் அபிஷேகம் என்பது தானே இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்.

கருத்து:

 1. மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மானசீகமாக அமைத்து சரியை முறையை பின்பற்றுவது இறைவன் இருக்கின்ற உலகத்தையே சார்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.
 2. மனதுக்குள் இருக்கின்ற இறைவனுக்கு பூஜைகளும் மந்திர உச்சாடனங்களும் செய்து கிரியை முறையை பின்பற்றுவது இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
 3. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவே இறைவன் என்று அறிந்து கொண்டு அவனையே தியானம் செய்கின்ற யோக முறையை பின்பற்றுவது இறைவனுடைய உருவத்திலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
 4. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவாகிய இறைவனை உணர்கின்ற ஞான முறையை அடைவது இறைவனுடனே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.

குறிப்பு:

இந்தப் பாடலில் வருகின்ற சமயம் என்பது என்னவென்றால் தாங்கள் எந்த மதத்தை சார்ந்து எந்த வழிமுறையை பின் பற்றினாலும் அதற்கு என்று வகுத்துக் கொடுக்கப் பட்ட விதிமுறைகளே சமயம் என்று அழைக்கப் படுகின்றது.