பாடல் #995

பாடல் #995: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவஞ் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

விளக்கம்:

குறுக்கும் நெடுக்குமாக நான்கு கோடுகள் வரைந்து வருகின்ற ஒன்பது அறைகளில் நடு அறையில் ‘சி’ எழுத்தை எழுதி அந்த எழுத்தையே எட்டு எழுத்துக்களாகவும் காணும்படி சுற்றியிருக்கும் எட்டு கட்டங்களிலும் ‘சி’ எழுத்தையே எழுதி நிரப்பி இந்த சக்கரத்தை முழுவதும் சுற்றியிருக்கும்படி ‘ஓம்’ எனும் எழுத்தை எழுதி தியானிக்கும் சாதகர்களுக்கு இறைவனும் இறைவியும் உடன் இருப்பார்கள்.

குறிப்பு: இந்தப் பாடலின் மூலம் உமாபதி சக்கரம் அமைத்து தியானிக்கும் முறையை அறியலாம்.

பாடல் #994

பாடல் #994: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆறெழுத் தாவது வாறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

விளக்கம்:

‘ஓம் நமசிவாய’ என்னும் ஆறு எழுத்து இறைவனை அடையும் ஆறுவித வழிகளின் விரிவாகும். சமஸ்கிருத எழுத்தில் காயத்திரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை (புள்ளி வைத்த மூன்று எழுத்துக்கள் தவிர்த்து) நான்கு முறை செபிப்பது ‘ஓம் நமசிவாய’ எனும் ஆறு எழுத்துக்களை ஒரு முறை செபிப்பதற்கு சமமாகும். காயத்ரி மந்திரத்திலுள்ள முதல் எழுத்தாகிய ‘ஓம்’ எனும் மூல மந்திரத்தையும் காயத்ரி மந்திரத்தையும் பிரித்து அறிந்து உணர வல்லவர்கள் பிறவி இல்லாத நிலையை அடைவார்கள்.

குறிப்பு: சமயங்கள் என்பதன் பொருள் இறைவனை அடைவதற்கு முறைப்படி கடைபிடித்து செல்லும் வழிகளாகும்.

இறைவனை அடையும் ஆறுவித வழிகள்:

  1. தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
  2. செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
  3. பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
  4. சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
  5. ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
  6. புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்

பாடல் #993

பாடல் #993: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்
றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

விளக்கம்:

புண்ணியத்தால் வானுலக வாழ்வு பெற்ற தேவர்கள் இறைவனுக்கு இணையான ‘நமசிவாய’ ஐந்தெழுத்து மந்திரத்தால் இறைவனை பூ மழை போல் அர்ச்சனை செய்து தியானித்து நமசிவாய மந்திரத்தை உணர்ந்து கண்ணிலிருந்து காணும் அனைத்தையும் அந்த மந்திரமாகவே கண்டு அதனுடன் கலந்து இருப்பார்கள்.

பாடல் #992

பாடல் #992: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென லாமே.

விளக்கம்:

பாடல் #991 இல் உள்ளபடி திரிமண்டல சக்கரத்தை இதயத்தாமரைக்குள் வைத்து பலகாலமாக சாதகம் செய்து விழுப்புணர்வு பெற்று ஆதியிலிருந்தே அழியாமல் என்றும் உடனிருக்கும் இறைவனை கண்டுகொண்டு அவன் காட்டிய வழியே சென்று என்றும் அழியாமல் அவனே சரணாகதி என்று இருக்கலாம்.

குறிப்பு: சக்கரத்தை வெளியில் பூசிப்பதால் பயனில்லை சக்கரத்தை மனதில் எண்ணி தியானிப்பதாலேயே பயன் கிடைக்கும் என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்.

பாடல் #991

பாடல் #991: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வித்தாஞ் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதி கலைதொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

விளக்கம்:

36 தத்துவங்களைக் குறிக்கும் 36 கட்டங்கள் வரைந்து அதனுள் இடது பக்கம் மூன்றாவது அடுக்கு முதல் ஆறாம் அடுக்கு வரை ஒவ்வொரு அடுக்கிலும் 4 கட்டங்கள் வீதம் மொத்தம் 16 கட்டங்களில் சந்திரகலையின் ‘க்ஷ’ எழுத்து முதலாக ‘ட’ எழுத்து வரை உள்ள 16 எழுத்துக்களை எழுதி, முதல் இரண்டு அடுக்குகளில் 6 கட்டங்கள் வீதம் மொத்தம் 12 கட்டங்களில் ‘ஊ’ எழுத்து முதலாக ‘ஒ’ எழுத்து வரை உள்ள 12 எழுத்துக்களையும் எழுதி சக்கரம் அமைத்து ‘சிவாயநம’ எனும் மந்திரத்தை செபித்து வந்தால் சக்கரத்திலுள்ள இரண்டு கலைகளும் ஒன்றாகி சக்கரத்தின் வலது பக்கம் இருக்கும் எட்டு கட்டங்களோடு மேலே தலைப் பகுதியுள்ள இரண்டு கட்டங்களும் சேர்த்து மொத்தம் பத்து அக்னி கலைகள் உருவாகும். அப்படி உருவான பிறகு சக்கரத்திலிருக்கும் சந்திர, சூரிய, அக்னி கலைகள் மூன்றையும் சேர்த்து சாதகம் செய்ய வேண்டும்.

பாடல் #990

பாடல் #990: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

விளக்கம்:

‘சிவாய’ என்ற மூன்று எழுத்தோடு ‘நம’ என்ற இரண்டு எழுத்து சேர்ந்து ‘சிவாயநம’ எனும் சிறந்த ஐந்தெழுத்து மந்திரத்தோடு ஆதார 12 எழுத்துக்களும் சேர்ந்து ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இருக்கும் திருவம்பலச் சக்கரத்தில் ஒளி ஒலியாக சிவசக்தி சிறந்து விளங்கும் நிலையில் அது சங்கரன் சக்கரம் ஆகும்.

பாடல் #989

பாடல் #989: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பட்டன மாதவ மாறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தை முறைப்படி ‘ஓம் சிவாயநம’ என்ற ஆறெழுத்து மந்திரத்தை செபித்து சாதகம் செய்து சதாசிவமூர்த்தியை அடைபவர்கள் தான் எனும் நினைப்பை அறுத்து இறைவனே சரணாகதி என்று இருக்கின்றார்கள். அளவில்லாத இறைவனின் பெருமைகளை எம்மால் இயன்றவரை எடுத்துரைத்து போற்றிப் புகழ்வதைத் தவிர வேறொன்றும் யாம் அறியேன்.

பாடல் #987

பாடல் #987: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டு வரையின்மே லெட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டுமிட்டுச்
சிட்ட அஞ்செழுத்துஞ் செபிசக் கரமே.

விளக்கம்:

இடமிருந்து வலமாக எட்டு கோடுகளும் மேலிருந்து கீழாக எட்டு கோடுகளும் வரைந்தால் அதற்குள் நாற்பத்தொன்பது கட்டங்கள் வரும். இதில் நடுவிலுள்ள கட்டத்தில் இறைவனின் வடிவமான ‘ஓம்’ எழுத்தை எழுதி அதைச் சுற்றியுள்ள நாற்பத்தெட்டு கட்டங்களிலும் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை மாற்றி மாற்றி எழுதி அமைத்தால் வரும் சக்கரம் செபிப்பதற்கு உகந்ததாகும். (இந்த சக்கரத்தின் அமைப்பு அடுத்த பாடலிலும் தொடரும்)

பாடல் #986

பாடல் #986: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

விளக்கம்:

எட்டு என்பது அகராமாகிய சிவம். இரண்டு என்பது உகாரமாகிய சக்தி. இருமூன்றும் நான்கும் சேர்ந்த பத்து என்பது யகாரமாகிய உயிர். குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட இப்பொருள்களை அனுபவமாக உணராதவர்கள் ‘அ, உ, ய’ எனும் எழுத்துக்களை அறியத் தொடங்கும் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். சாதகர்கள் இந்த எழுத்துக்களின் உட்பொருளை உணர்வதன் மூலம் தன்னை அறிந்து சதாசிவத்தை அடையும் உபாயத்தை உணர்த்துவதே இந்த ஞானப் பாதையாகும்.

பாடல் #985

பாடல் #985: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கூடிய எட்டும் இரண்டுங் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி அதனைத் தெளிந்துஅறி யீரே.

விளக்கம்:

சாதகர்கள் தேடுகின்ற இறைவனை தமக்குள்ளேயே அறிவு வடிவமாக உணர்ந்து அந்த அறிவைப் பெறுதற்கு அகார உகாரங்களின் கூட்டாகிய ‘ஓம்’ எனும் மந்திரத்தை தியானித்தால் இறைவனே குருவாக நின்று வழிகாட்டுவார். அவரின் வழிகாட்டுதலின் படி இதுவரை தம்மோடு மாறுபட்டுப் போராடி வந்த ஐந்து புலன்களும் தம் வயப்பட்டு துணைசெய்து நிற்கும். ஐந்து புலன்களையும் தம் வயப்படுத்த தேடிக்கொண்டிருந்த வழியை இவ்வாறு தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.