பாடல் #632

பாடல் #632: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் உமையவள் காண ஆனந்த நடனம் புரிபவனும் அழகிய மலரின் நறுமனம் கமழும் படர்ந்த சடையுடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகள் எப்படி இருக்கும் என்று காண விருப்பம் கொண்டு தேடுபவர்கள் அமரர்களின் தலைவனாகிய இறைவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து அதை அருள்புரிவான் சிவபெருமான்.

பாடல் #633

பாடல் #633: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.

விளக்கம்:

சிவத்தின் திருவடியை அன்போடு பற்றிக்கொண்டு அவரின் புகழை கற்று அறிந்துகொண்டு அவரின் சிறப்புகளிலேயே எண்ணத்தை வைத்து இருப்பவர்களை இறைவனிடம் இருக்கும் முனிவரெல்லாம் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்கள் மனத் தெளிவு பெற்று சிவபதம் அடைவார்கள்.

பாடல் #634

பாடல் #634: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

விளக்கம்:

சிவபெருமானை நோக்கித் தன்னை வருத்தி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்பவர்களை தேவர்களுக்கு அரசனாக இருந்து பிறவியில்லா உலகத்திற்கு செல்வார் இவர் என குளிர்ந்த சந்தனத்தால் ஆன முரசும் புல்லாங்குழலும் இசைத்துக் கூற சிவபெருமானின் அருளால் இன்பம் பெறுவார்கள்.

கருத்து: சிவனை நோக்கி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்தவர் பிறவியில்லா நிலையை அடைவர்.

பாடல் #635

பாடல் #635: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் சிவகதி சென்று அடையும் காலத்தில் பூரண கும்பத்தோடு தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து பொன் போல போற்றத்தக்க எங்கள் தலைவர் இவர் என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்து இருப்பார்கள்.

பாடல் #636

பாடல் #636: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடி சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவதால் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று அவரின் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானை தேவர்கள் தரிசிப்பார்கள்.

பாடல் #637

பாடல் #637: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

விளக்கம்:

நல் வழியாகிய தாரணை மூலம் அடங்கிய மனதை உள்ளே இருக்கும் இறைவன் மீது ஒருநிலைபெறச் செய்தவர்களுக்கு மரணத்திற்குச் செல்லும் வழியை மாற்றிவிடும். இறைவனால் கொடுக்கப்படும் ஞானமாகிய குறைவில்லாத பெரும் கொடையை அடைந்தவர்கள் இறைவனை அடையக்கூடிய அனைத்து வழிகளிலும் இந்த உலகத்திலிருந்தே செல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.

பாடல் #638

பாடல் #638: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமையைக் கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்குள்ளே அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன் சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.

பாடல் #639

பாடல் #639: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

விளக்கம்:

இந்த உலகத்தில் துன்பம் தரக்கூடிய காரணங்களாகிய தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பந்தங்களைக் கடந்து சென்று ஏழுவகையான சிவ தத்துவங்களையும் தன் அறிவாலேயே உணர்ந்து பெற்று ஜென்ம ஜென்மமாய்த் தொடர்ந்து வரும் மாயையைத் தவத்தால் வெற்றி பெற்று இறைவனின் திருவடியைச் சேருதல் சமாதியால் பெறும் பயனாகும்.

நான்கு வகை பந்தங்கள்:

தனு – தன் உடலின் மேல் இருக்கும் பற்று
கரணம் – ஆசைப்படும் மனது
புவனம் – உலகப் பற்று
போகம் – உலகப் பொருள்களை அனுபவித்தல்

ஏழுவகை சிவ தத்துவங்கள்:

இறைமை – இறைவனாக தன்னை உணர்தல்
முற்றறிவு உடைமை – அனைத்தையும் அறிந்தவனாக இருத்தல்
எங்கும் தானாதல் – எங்கும் வியாபித்து இருத்தல்
இயல்பாகவே மாயையின்மை – மாயையே இல்லாது இருத்தல்
வரம்பில்லாத ஆற்றல் – எல்லையில்லா சக்தியைக் கொண்டிருத்தல்
தன்வயத்தன் ஆதல் – எதனாலும் கட்டுப்படாமல் தன் கட்டுப்பாட்டிலேயே இருத்தல்
ஒன்றியுணர்தல் – அனைத்திலும் ஒன்றி இருப்பதாக உணர்தல்

கருத்து: சமாதி நிலையை அடைந்தால் அனைத்துவித துன்பங்கள் மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெற்று சிவ தத்துவங்களை உணரலாம்.