பாடல் #238

பாடல் #238: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுகவும்நில் லானே.

விளக்கம்:

கல்வி அறிவு இல்லாத அரசனும் உயிர் எடுப்பதில் எமதர்மனுக்குச் சமமானவன். ஆனாலும் கல்வி அறிவு இல்லாத அரசனைவிட எமதர்மன் மிகவும் நல்லவன். ஏனென்றால் கல்வி அறிவு இல்லாத அரசன் அறம் எது, நீதி எது என்று ஆராயாமல் குற்றம் சாற்றப்பட்டவரை உடனே கொன்றுவிடு என்று கட்டளையிட்டு விடுவான். ஆனால் எமதர்மனோ நல்லவர்களின் பக்கத்தில் நிற்கவும் தயங்கி அவர்களின் காலம் முடியும் வரை காத்திருப்பான்.

பாடல் #239

பாடல் #239: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்
நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே.

விளக்கம்:

ஒரு நாட்டுக்கு அரசனாக இருக்கின்றவன் அந்த நாடு முழுவதிலும் தினந்தோறும் தவ வழியில் வாழ்பவர்களுக்கு எந்தவொரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசனுக்கு என்று விதிக்கப்பட்ட நீதியிலும் தர்மத்திலும் சிறிதளவும் பிழை வந்துவிடாமல் தினந்தோறும் நடந்துகொள்ள வேண்டும். இதில் எதை செய்யத் தவறிவிட்டாலும் அவனுடைய நாட்டின் வளம் குன்றும். மக்களிடையே அறியாமை தோன்றும். அந்த நாட்டில் இருக்கும் செல்வங்கள் எல்லாம் தினந்தோறும் குறைந்து கொண்டே வந்து அரசனும் விரைவில் இறந்து போவான்.

பாடல் #240

பாடல் #240: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன்
வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே
வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தால் வீடது வாகுமே.

விளக்கம்:

போட்டுக்கொண்டிருக்கும் வேடத்திற்கு உண்டான வழிமுறைகளை மேற்கொண்டு அதன்படி நடக்க இயலதவர்கள் இந்த வேடம் போட்டுக்கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. போட்டுக்கொண்டிருக்கும் வேடத்திற்கு உண்டான வழிமுறைகளை மேற்கொண்டு அதன்படி நடப்பவர்களே உண்மையான வேடம் தரித்தவர்கள் ஆவார்கள். தான் போட்டிருக்கும் வேடத்திற்கு ஏற்ற வழியில் செல்லாத வேடதாரிகளை அந்த நாட்டை ஆளும் வலிமை மிக்க அரசன் கண்டுபிடித்து தண்டித்து வேடத்திற்கு ஏற்றபடி நடக்கச்செய்வது அரசனுக்கு முக்தியை வழங்கிவிடும்.

குறிப்பு: மக்களில் விவசாயம், துணி நெய்தல், மண்பாண்டம் செய்தல் போன்று இன்னும் பல வேலைகளை அந்த நாட்டில் வாழும் மக்களில் சிலர் அந்தந்த தொழிலுக்கு ஏற்ற வேடம் ஏற்று அந்த வேலைகளை செய்யாமல் சோம்பேரிகளாக இருப்பார்கள். அவர்களை அரசன் கண்டு பிடித்து தன் வலிமையால் தண்டித்து அவர்கள் ஏற்றுக்கொண்ட வேடத்திற்க்கான தொழிலை அரசன் செய்ய வைத்தால் அது அவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும், நாட்டுக்கும் நன்மை உண்டாக்கும். இதைச் செய்த பயனால் அரசனுக்கு முக்தி கிடைக்கும்.

பாடல் #241

பாடல் #241: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தானன்றே.

விளக்கம்:

அறியாமை அகன்று உண்மை ஞானம் பெறாதவர்கள் குடுமியையும் பூணூலையும் அணிந்து கொள்வதால் அவர்கள் இருக்கும் நாடு வளங்கள் குறைந்து துன்பப்படும். அந்த நாட்டை அரசாண்டு பெரும் வாழ்வை வாழும் அரசனும் பெருமை ஒன்றும் இல்லாதவனாக இழிவு பெற வேண்டியதாகிவிடும். நாட்டை ஆளும் அரசன் தமது நாட்டில் வெறும் ஆடம்பரத்திற்காக சிகை முடியையும் பூணூலையும் தரித்து வாழும் வேஷதாரிகளை நன்றாக ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அவர்களின் வேஷத்தைக் கலைத்து அவர்களை நம்புகின்ற மக்களுக்கு உண்மையைத் தெரிய வைத்தால் அந்த அரசனும் அவனது நாடும் நன்மை பெற்று விளங்கும்.

பாடல் #242

பாடல் #242: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாம் நாட்டிற்கே.

விளக்கம்:

உண்மை ஞானம் இல்லாதவர்கள் வெறும் சடை முடியும் பூணூலும் தரித்து உண்மை ஞானிகள் போல நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் இருக்கும் நாடு எப்போதும் சுபிட்சம் அடையாமல் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கும். நடிப்பவர்கள் யார் என்பதை அந்த நாட்டு மக்களை ஆளுகின்ற அரசன் உண்மையான ஞானிகளின் மூலம் சோதனை செய்து நடிப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு அந்த உண்மையான ஞானிகளின் மூலமே நடித்துக் கொண்டிருக்கின்ற ஞானிகளுக்கும் உண்மை ஞானத்தை போதனை செய்யவைத்து ஞானம் உண்டாக்கினான் என்றால் அவன் நாடும் அவனும் எப்போதும் நலம் பெற்று இன்பமாக இருப்பார்கள்.

பாடல் #243

பாடல் #243: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

விளக்கம்:

பால் தரும் பசுக்களையும் பெண்களையும் அற நெறி உணர்ந்த சான்றோரையும் வானுலகத்து தேவர்கள் போற்றுகின்ற ஞானத்தை உணர்ந்து அதைக் குறிக்கும் வேஷத்தை தரித்த ஞானிகளையும் அவர்கள் வாழும் நாட்டிற்கு காவலனாக விளங்கும் அரசன் அவர்களைக் காத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவர்களை காப்பாற்றவில்லை என்றால் அவன் இறந்தபின் இன்னுமொரு பிறவி எடுக்க முடியாத அளவிற்கு எப்போதுமே தப்பிக்க முடியாத நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டு கிடப்பான்.

பாடல் #244

பாடல் #244: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேயாற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

விளக்கம்:

பிறவி இல்லாத மேன்மை தரும் முக்தியையும் இந்தப் பிறவிக்கு தேவையான செல்வங்களும் வேண்டும் என்று ஒரு அரசன் விரும்பினால் அவன் மறந்த நிலையிலும் தர்மத்தின் வழி தவறாமல் நடக்க வேண்டும். ஏனெனில் சிறப்பு பெற்ற தண்ணீர் சூழ்ந்த இந்த உலகத்தில் அனைத்து உயிர்களும் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கே வந்து சேரும். அந்த உயிர்கள் செய்யும் புண்ணியங்கள் பாவங்கள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு தமக்கு வரும் என்பதை உணர்ந்துகொண்டு அரசன் எப்போதும் மறக்காமல் அறத்தின் வழியிலேயே அவர்களையும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

பாடல் #245

பாடல் #245: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவம்அகத் தானே.

விளக்கம்:

ஒரு நாட்டை ஆளும் அரசன் அதை மிகவும் நன்றாக காத்து ஆட்சி புரிந்தான் என்றால் அந்த நாட்டில் உள்ள மக்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட தொழில்களுக்கு ஏற்ற தர்மநெறிகளிலிருந்து மாறாமல் அவ்வழியே நல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழும் நாட்டை பிறர் போர் செய்தோ அல்லது சூழ்ச்சி செய்தோ கைப்பற்ற நினைத்தால் தங்கள் நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக புலி பதுங்கியிருந்து பாய்ந்து அடித்து தனது உணவை தேடிக்கொள்வது போல போர் தொழில் கொண்ட மக்களும் நாட்டைக் காக்கும் அரசனும் பதுங்கியிருந்து தனது நாட்டை காப்பாற்றிக்கொள்வார்கள்.

கருத்து : மன்னன் தர்மவழியில் நாட்டை ஆட்சி செய்தால் மக்களும் தர்மவழியில் நடப்பார்கள்.

பாடல் #246

பாடல் #246: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

விளக்கம்:

பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மூச்சுக்காற்றை உள்ளே அடக்கி மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றின் மூலம் தலை உச்சியின் மேலேற்றி சகஸ்ரரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனின் நிலவைப் போன்ற திருமுகத்தைக் கண்டு தரிசித்து பிறகு குண்டலினி சக்தியை புருவ மத்தியில் இருக்கும் ஆஞ்சை சக்கரத்தில் கொண்டு வந்து இறக்கி அதன் பிறகு அங்கே இருக்கும் அமிர்தத்தை இறைவனை நினைத்து பருகாமல் புத்தி மயக்கத்தின் மேல் மோகம் கொண்டு பனை மரத்திலிருக்கும் கள்ளை இறக்கித் தினமும் பருகி அந்த மயக்கத்திலேயே இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க தண்டனை அளித்துத் திருத்த வேண்டியது நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

பாடல் #247

பாடல் #247: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

விளக்கம்:

உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும், அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு மறுபிறவியில் கொடுத்து அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

குறிப்பு : ஏன் இறைவன் அடுத்த பிறவியில் தண்டனை கொடுக்க வேண்டும் இப்பிறவியில் கொடுத்தால் என்ன என்ற கேள்வியை பலர் கேட்கின்றனர். அதற்கான பதில் தவறுக்கு ஏற்ற இறைவனின் தண்டனையை உடல் அளவிலும் மன அளவிலும் தாங்கும் சக்தியை அந்த ஆத்மாவிற்கு கொடுத்து தண்டனையை தாங்கும் அளவிற்கு ஆன்மாவை பக்குவப்படுத்திய பிறகே இறைவன் தண்டனையை அளிக்கிறான்.