பாடல் #1661

பாடல் #1661: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

தவமிக் கவரே தலையான வேட
ரவமிக் கவரே யதிகொலை வேட
ரவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தவமிக கவரெ தலையான வெட
ரவமிக கவரெ யதிகொலை வெட
ரவமிக கவரவெடத தாகாரவ வெடந
தவமிக கவரககனறித தாஙகவொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தவம் மிக்கு அவரே தலையான வேடர்
அவம் மிக்கு அவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கு அவர் வேடத்து ஆகார் அவ் வேடம்
தவம் மிக்கு அவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே.

பதப்பொருள்:

தவம் (உண்மையான தவ வலிமையை) மிக்கு (அதிகமாக கொண்ட) அவரே (தவசிகளே) தலையான (அனைத்திலும் சிறந்த) வேடர் (உண்மையான தவ வேடத்தை அணிந்தவர்கள் ஆவார்கள்)
அவம் (பொய்யான தவ வேடம் அணிந்ததால் பெற்ற பாவங்கள்) மிக்கு (அதிகமாக கொண்ட) அவரே (பொய்யான தவசிகளே) அதி (உயிர் கொலையை விடவும் கொடுமையான கொலையாகிய தர்மத்தையே) கொலை (கொலை செய்கின்ற) வேடர் (பொய்யான வேடதாரிகள் ஆவார்கள்)
அவம் (ஆதலால் பாவங்கள்) மிக்கு (அதிகமாக கொண்ட) அவர் (அவர்கள்) வேடத்து (உண்மையான தவ வேடத்திற்கு) ஆகார் (தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள்) அவ் (உண்மையான அந்த) வேடம் (தவ வேடத்தை)
தவம் (உண்மையான தவ வலிமையை) மிக்கு (அதிகமாக கொண்ட) அவர்க்கு (தவசிகளைத்) அன்றி (தவிர) தாங்க (வேறு யாராலும் தாங்க) ஒண்ணாதே (முடியாது).

விளக்கம்:

உண்மையான தவ வலிமையை அதிகமாக கொண்ட தவசிகளே அனைத்திலும் சிறந்த உண்மையான தவ வேடத்தை அணிந்தவர்கள் ஆவார்கள். பொய்யான தவ வேடம் அணிந்ததால் பெற்ற பாவங்கள் அதிகமாக கொண்ட பொய்யான தவசிகளே உயிர் கொலையை விடவும் கொடுமையான கொலையாகிய தர்மத்தையே கொலை செய்கின்ற பொய்யான வேடதாரிகள் ஆவார்கள். ஆதலால் பாவங்கள் அதிகமாக கொண்ட அவர்கள் உண்மையான தவ வேடத்திற்கு தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள். உண்மையான அந்த தவ வேடத்தை தவ வலிமை அதிகமாக கொண்ட தவசிகளைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது.

கருத்து:

உண்மையான தவசிகள் அணிந்து இருக்கின்ற வேடப் பொருள்களில் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் சக்தியானது அதிகமாக இருக்கும். அந்த சக்தியை தாங்குகின்ற தவ வலிமை அவர்களிடம் உண்டு. ஆனால், பொய்யான வேடதாரிகளிடம் தவ வலிமை இல்லாததால் அந்த பொருள்களில் உள்ள சக்தியை தாங்க முடியாது.

பாடல் #1662

பாடல் #1662: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிரங் குண்டலங் கண்டிகை
யோதி யவர்க்கு முருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூதி யணிவது சாதன மாதியிற
காதணி தாமபிரங குணடலங கணடிகை
யொதி யவரககு முருததிர சாதனந
தீதில சிவயொகி சாதனந தெரிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிரம் குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே.

பதப்பொருள்:

பூதி (விபூதியை) அணிவது (அணிந்து கொள்வது) சாதனம் (மிகவும் உன்னதமான கருவியாக) ஆதியில் (அனைத்திற்கும் முதலானது ஆகும்)
காது (அது மட்டுமின்றி காதுகளில்) அணி (அணிகின்ற) தாம்பிரம் (செப்பினால் செய்த) குண்டலம் (குண்டலங்களும்) கண்டிகை (கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் கருவியாகும்)
ஓதி (மந்திரங்களை ஓதுகின்ற) அவர்க்கும் (தவசிகளுக்கு உறுவேற்றுகின்ற) உருத்திர (கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும்) சாதனம் (கருவியாக உள்ளது)
தீது (இவை தீமை) இல் (இல்லாத) சிவ (உண்மையான சிவ யோகத்தை புரிகின்ற) யோகி (யோகிகளுக்கு) சாதனம் (கருவிகளாகப் பயன்படுவது) தேரிலே (அந்தக் கருவிகளின் தத்துவங்களை முழுவதும் உணர்ந்து தெளிந்தால் மட்டுமே ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகள் விபூதியை அணிந்து கொள்வது மிகவும் உன்னதமான கருவியாக அனைத்திற்கும் முதலானது ஆகும். அது மட்டுமின்றி காதுகளில் அணிகின்ற செப்பினால் செய்த குண்டலங்களும் கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் அவர்களுக்கு கருவியாகும். மந்திரங்களை ஓதுகின்ற தவசிகளுக்கு உறுவேற்றுகின்ற கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும் கருவியாக உள்ளது. இந்தக் கருவிகளை பயன்படுத்துகின்ற முறையை முழுவதும் அறிந்து தெளிந்த தீமை இல்லாத உண்மையான சிவ யோகத்தை புரிகின்ற யோகிகளுக்கு மட்டுமே அவை பயனுள்ளதாகும்.

கருத்து:

சிவ யோகிகள் அணிந்து இருக்கின்ற விபூதி, குண்டலம், உருத்திராட்சம் போன்ற பொருள்களை தீமைகளை நீக்கி நன்மையை கொடுப்பதற்கு கருவியாக பயன்படுத்திக் கொள்ளுகின்ற முறை உண்மையான சிவ யோகிகளுக்கே தெரியும்.

பாடல் #1663

பாடல் #1663: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையொன்று
வாகத்து நீறணி யாங்கக் கப்பாளஞ்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகிக கிடுமது வுடகடடுக கஞசுளி
தொகைககுப பாசததுச சுறறுஞ சடையொனறு
வாகதது நீறணி யாஙகக கபபாளஞ
சீகதத மாததிரை திணபிரம பாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோகிக்கு இடும் அது உள் கட்டுக்கு கஞ்சுளி
தோகைக்கு பாசத்து சுற்றும் சடை ஒன்று
ஆகத்து நீறு அணி ஆம் அக்கு பாளம்
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே.

பதப்பொருள்:

யோகிக்கு (சிவ யோகிகள்) இடும் (அணிகின்ற) அது (பொருள்களான) உள் (தங்களின் இடுப்புக்கு கீழே) கட்டுக்கு (கட்டுகின்ற கோவணமும்) கஞ்சுளி (உடலைப் போர்த்தி இருக்கின்ற காவி ஆடையும்)
தோகைக்கு (மயிலின் தோகையால் திரித்த) பாசத்து (கயிறு போல) சுற்றும் (சுற்றி இருக்கின்ற) சடை (திரிந்த சடை முடி) ஒன்று (ஒன்றும்)
ஆகத்து (உடம்பு முழுவதும்) நீறு (திருநீறு) அணி (அணிந்தும்) ஆம் (மார்பில் அணிந்து இருக்கின்ற மாலையாகிய) அக்கு (உருத்திராட்ச) பாளம் (மணியும்)
சீகத்த (அழகிய கைப் பிடியைக் கொண்ட) மாத்திரை (கமண்டலமும்) திண் (உறுதியான) பிரம்பு (தண்டமும்) ஆகுமே (அவர்களின் தவ அடையாளங்கள் ஆகும்).

விளக்கம்:

சிவ யோகிகள் அணிகின்ற பொருள்களான தங்களின் இடுப்புக்கு கீழே கட்டுகின்ற கோவணமும், உடலைப் போர்த்தி இருக்கின்ற காவி ஆடையும், மயிலின் தோகையால் திரித்த கயிறு போல சுற்றி இருக்கின்ற திரிந்த சடை முடி ஒன்றும், உடம்பு முழுவதும் திருநீறு அணிந்தும், மார்பில் அணிந்து இருக்கின்ற மாலையாகிய உருத்திராட்ச மணியும், அழகிய கைப் பிடியைக் கொண்ட கமண்டலமும், உறுதியான தண்டமும் அவர்களின் தவ அடையாளங்கள் ஆகும்.

பாடல் #1664

பாடல் #1664: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

காதணி குண்டலங் கண்டிகை நாகமு
மூதின சங்கு முயர்கட்டிக் கப்பரை
யேதமில் பாதுகம் யோகாந்த மாதன
மேதமில் யோகவட்டந் தண்டமீ ரைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காதணி குணடலங கணடிகை நாகமு
மூதின சஙகு முயரகடடிக கபபரை
யெதமில பாதுகம யொகாநத மாதன
மெதமில யொகவடடந தணடமீ ரைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காது அணி குண்டலம் கண்டிகை நாகமும்
ஊதின சங்கும் உயர் கட்டி கப்பரை
ஏதம் இல் பாதுகம் யோக அந்தம் ஆதனம்
ஏதம் இல் யோக வட்டம் தண்டம் ஈர் ஐந்தே.

பதப்பொருள்:

காது (காதுகளில்) அணி (அணிந்து இருக்கின்ற) குண்டலம் (குண்டலங்கள்) கண்டிகை (கழுத்தில் அணிந்து இருக்கின்ற) நாகமும் (நாக மணி மாலை)
ஊதின (இயற்கையாகவே முதுமை பெற்று இறந்து கிடைத்த) சங்கும் (சங்கு) உயர் (உயர்வான) கட்டி (திருநீறு வைத்திருக்கும் பாத்திரம்) கப்பரை (பிச்சை எடுக்கின்ற பாத்திரம் / திருவோடு)
ஏதம் (குற்றம்) இல் (இல்லாத) பாதுகம் (பாதணிகள்) யோக (யோக) அந்தம் (முத்திரை) ஆதனம் (அமர்ந்து இருக்கின்ற ஆசனம்)
ஏதம் (குற்றம்) இல் (இல்லாத) யோக (யோக) வட்டம் (காப்பு / இரட்சை) தண்டம் (தண்டம்) ஈர் (ஆகிய இரண்டும்) ஐந்தே (ஐந்தும் பெருக்கி வரும் மொத்தம் பத்து அடையாளங்களும் உண்மையான தவசிகளுக்கான வேடமாகும்).

விளக்கம்:

1.காதுகளில் அணிந்து இருக்கின்ற குண்டலங்கள், 2. கழுத்தில் அணிந்து இருக்கின்ற நாக மணி மாலை, 3. இயற்கையாகவே முதுமை பெற்று இறந்து கிடைத்த சங்கு, 4. உயர்வான திருநீறு வைத்திருக்கும் பாத்திரம், 5. பிச்சை எடுக்கின்ற பாத்திரம் (திருவோடு), 6. குற்றம் இல்லாத பாதணிகள், 7. யோக முத்திரை, 8. அமர்ந்து இருக்கின்ற ஆசனம், 9. குற்றம் இல்லாத யோக காப்பு (இரட்சை), 10. தண்டம் ஆகிய பத்து அடையாளங்களும் உண்மையான தவசிகளுக்கான வேடமாகும்.

பாடல் #1665

பாடல் #1665: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

நூலுஞ் சிகையு முணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்று மந்தணர் பாப்பார் பரமுயி
ரோரொன் றிரண்டெனி லோங்கார மோதிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நூலுஞ சிகையு முணராரநின மூடரகள
நூலது வெதாநதம நுணசிகை ஞானமாம
பாலொனறு மநதணர பாபபார பரமுயி
ரொரொன றிரணடெனி லொஙகார மொதிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
பால் ஒன்றும் அந்தணர் பாப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டு எனில் ஓங்காரம் ஓதிலே.

பதப்பொருள்:

நூலும் (பூணூலுக்கும்) சிகையும் (குடுமிக்கும்) உணரார் (உள்ள உட் பொருளை உணராதவர்கள்) நின் (முழு) மூடர்கள் (மூடர்களாக இருக்கின்றார்கள்)
நூல் (பூணூல்) அது (என்பது) வேத (வேதத்தை) அந்தம் (முழுதும் அறிந்து உணர்ந்ததை குறிப்பதாகும்) நுண் (தலை உச்சியில் இருக்கும்) சிகை (குடுமி என்பது) ஞானம் (உண்மை ஞானத்தை) ஆம் (உணர்ந்ததை குறிப்பதாகும்)
பால் (வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு) ஒன்றும் (ஒன்றி இருக்கின்ற) அந்தணர் (அந்தணர்களே) பாப்பார் (தமக்குள் பார்க்கின்றார்கள்) பரம் (பரம்பொருளாகிய இறைவனே) உயிர் (தமது உயிராகவும் இருப்பதை)
ஓர் (ஒரே பொருளாக) ஒன்று (ஒன்று பட்டு இருக்கின்ற) இரண்டு (இறைவன் ஆன்மா ஆகிய இரண்டும்) எனில் (என்று உணர்ந்தால் அது) ஓங்காரம் (ஓங்காரத்தை) ஓதிலே (ஓதியே உணர்ந்தது ஆகும்).

விளக்கம்:

பூணூலுக்கும் குடுமிக்கும் உள்ள உட் பொருளை உணராதவர்கள் முழு மூடர்களாக இருக்கின்றார்கள். பூணூல் என்பது வேதத்தை முழுதும் அறிந்து உணர்ந்ததை குறிப்பதாகும். தலை உச்சியில் இருக்கும் குடுமி என்பது உண்மை ஞானத்தை உணர்ந்ததை குறிப்பதாகும். வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு ஒன்றி இருக்கின்ற அந்தணர்களே பரம்பொருளாகிய இறைவனே தமது உயிராகவும் இருப்பதை தமக்குள் பார்க்கின்றார்கள். ஒன்று பட்டு இருக்கின்ற இறைவன் ஆன்மா ஆகிய இரண்டும் ஒரே பொருளே என்பதை ஓங்காரத்தை ஓதியே அவர்கள் உணர்ந்தார்கள்.

குறிப்பு:

சுவடிகளில் இந்தப் பாடல் “தவ வேடம்” தலைப்பிலேயே உள்ளது. ஆனால் சில புத்தகங்களில் அடுத்து வருகின்ற “திரு நீறு” தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் பொருள் தவ வேடத்திற்கே பொருத்தமாக இருக்கின்றது.