பாடல் #1337

பாடல் #1337: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மெல்லிய லாகிய மெய்ப்பொரு டாடன்னைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்
பல்லியல் பாகப் பரந்தெழு நாள்பல
நல்லியல் பாக நடந்திடுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலலிய லாகிய மெயபபொரு டாடனனைச
சொலலிய லாலெ தொடரநதங கிருநதிடும
பலலியல பாகப பரநதெழு நாளபல
நலலியல பாக நடநதிடுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மெல் இயல் ஆகிய மெய் பொருள் ஆள் தன்னை
சொல் இயல் ஆலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல்பு ஆகப் பரந்து எழும் நாள் பல
நல் இயல்பு ஆக நடந்திடும் தானே.

பதப்பொருள்:

மெல் (மென்மையான) இயல் (தன்மையைக்) ஆகிய (கொண்டு) மெய் (உண்மைப்) பொருள் (பொருளின்) ஆள் (உருவமாகவே விளங்குகின்ற) தன்னை (இறைவியானவள்)
சொல் (சாதகர் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களை செபிக்கும்) இயல் (தன்மைக்கு) ஆலே (ஏற்ற படியே) தொடர்ந்து (சாதகரைத் தொடர்ந்து) அங்கு (அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து) இருந்திடும் (வீற்றிருப்பாள்)
பல் (அதன் பிறகு நல் வினை தீய வினை ஆகியவற்றால் பல) இயல்பு (விதங்கள்) ஆகப் (ஆகவே) பரந்து (உலகம் முழுவதும் பரந்து விரிந்து) எழும் (சாதகருக்குள்ளிருந்து எழுந்து செல்லும் சக்தியானது) நாள் (கடந்து செல்கின்ற நாள்கள்) பல (பலவற்றையும் / பல காலங்களையும்)
நல் (நல் வினை கொண்ட) இயல்பு (தன்மை) ஆக (ஆகவே மாற்றி) நடந்திடும் (அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி) தானே (அருளும்).

விளக்கம்:

பாடல் #1336 இல் உள்ளபடி மென்மையான தன்மையைக் கொண்டு உண்மைப் பொருளின் உருவமாகவே விளங்குகின்ற இறைவியானவள் சாதகர் குருவிடமிருந்து பெற்ற மந்திரங்களை செபிக்கும் தன்மைக்கு ஏற்ற படியே சாதகரைத் தொடர்ந்து அவர் இருக்கும் இடத்திலேயே அவருடன் சேர்ந்து வீற்றிருப்பாள். அதன் பிறகு சாதகருக்குள்ளிருந்து எழுந்து உலகம் முழுவதும் பரந்து செல்லும் சக்தியானது நல் வினை தீய வினை ஆகியவற்றால் பல விதமாகக் கடந்து செல்கின்ற பல நாள்களையும் நல் வினை கொண்ட நாட்களாகவே மாற்றி அனைத்தும் நன்மையாகவே நடக்கும்படி அருளும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.