பாடல் #1322

பாடல் #1322: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நலந்தரு ஞானமுங் கல்வியு மெல்லா
முரந்தரு வல்வினை யும்மை விட்டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நலநதரு ஞானமுங கலவியு மெலலா
முரநதரு வலவினை யுமமை விடடொடிச
சிரநதரு தீவினை செயவ தகறறி
வரநதரு சொதியும வாயததிடுங காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நலம் தரும் ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம் தரும் வல் வினை உம்மை விட்டு ஓடிச்
சிரம் தரும் தீ வினை செய்வது அகற்றி
வரம் தரும் சோதியும் வாய்த்திடும் காணே.

பதப்பொருள்:

நலம் (நன்மைகள் அனைத்தையும்) தரும் (கொடுத்து) ஞானமும் (இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து) கல்வியும் (உலக அறிவை அறிகின்ற கல்விகள்) எல்லாம் (அனைத்தையும் கொடுத்து)
உரம் (மன பலத்தையும்) தரும் (கொடுத்து) வல் (பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான) வினை (வினைகள் அனைத்தும்) உம்மை (சாதகரை) விட்டு (விட்டு விட்டு) ஓடிச் (ஓடி விடும்படியும் செய்து)
சிரம் (மேன்மையான நிலையைக்) தரும் (கொடுத்து) தீ (இனி மேலும் தீமையான) வினை (வினைகளை எதுவும்) செய்வது (செய்து விடுகின்ற நிலையையும்) அகற்றி (இல்லாமல் செய்து)
வரம் (நினைத்ததை அடையும் வரங்களையும்) தரும் (கொடுத்து) சோதியும் (இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற) வாய்த்திடும் (நிலையும் கிடைக்கப் பெறுவதைக்) காணே (காணலாம்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்களுக்கு பாடல் #1321 இல் உள்ளபடி மூன்று விதமான நன்மைகள் அனைத்தையும் கொடுத்து, இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து, உலக அறிவை அறிகின்ற கல்விகள் அனைத்தையும் கொடுத்து, மன பலத்தையும் கொடுத்து அதன் பயனாகப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான வினைகள் அனைத்தும் சாதகரை விட்டு விட்டு ஓடி விடும்படியும் செய்து, மேன்மையான நிலையைக் கொடுத்து அதன் பயனாக இனி மேலும் தீமையான வினைகளை எதுவும் செய்து விடுகின்ற நிலையையும் இல்லாமல் செய்து, நினைத்ததை அடையும் வரங்களையும் கொடுத்து, இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற நிலையும் கிடைக்கப் பெறுவதைக் காணலாம்.

பாடல் #1323

பாடல் #1323: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடு முன்னே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கு
நின்றிடு சக்கரம் நினைக்கு மளவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடிடுஞ சககரம வெளளிபொன செமபிடை
கொணடிடு முனனெ குறிதத வினைகளை
வெனறிடு மணடலம வெறறி தருவிககு
நினறிடு சககரம நினைககு மளவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் முன்னே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.

பதப்பொருள்:

கண்டிடும் (சாதகர் கண்டு அறிந்த) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம்) வெள்ளி (வெள்ளி போன்ற தூய்மையுடனும்) பொன் (பொன் போன்ற பிரகாசத்தோடும்) செம்பு (செம்பு போன்ற உறுதியுடனும்) இடை (மனதிற்கு உள்ளே)
கொண்டிடும் (உள் வாங்கி வைக்கும் போது) முன்னே (இந்த பிறவிக்கு முன்பே) குறித்த (குறிக்கப்பட்ட / முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும்) வினைகளை (அனைத்து வினைகளையும்)
வென்றிடும் (வென்று அழித்துவிடும்) மண்டலம் (இந்த சக்தி மண்டலம்) வெற்றி (ஐந்து புலன்களையும் வெற்றி) தருவிக்கும் (பெறுவதற்கும் வழி கொடுக்கும்)
நின்றிடும் (உறுதியாக நிற்கின்ற) சக்கரம் (இந்த நவாக்கிரி சக்கரமானது) நினைக்கும் (எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ) அளவே (அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்).

விளக்கம்:

பாடல் #1322 இல் உள்ளபடி சாதகர் கண்டு அறிந்த நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம் வெள்ளி போன்ற தூய்மையுடனும், பொன் போன்ற பிரகாசத்தோடும், செம்பு போன்ற உறுதியுடனும் மனதிற்கு உள்ளே உள் வாங்கி வைக்கும் போது சாதகரின் இந்த பிறவிக்கு முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும் அனைத்து வினைகளையும் இந்த சக்கரத்தின் சக்தி மண்டலமானது வென்று அழித்துவிடும். ஐந்து புலன்களையும் வெற்றி பெறுவதற்கும் வழி கொடுக்கும். இந்த நவாக்கிரி சக்கரமானது எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்.

பாடல் #1324

பாடல் #1324: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நினைத்திடு மச்சிறீயிக் கிறீ யீரா
நினைத்திடு சக்கர மாதியு மீறு
நினைத்திடு நெல்லொடு புல்வினை யுள்ளே
நினைத்திடு மற்சனை நேர்தரு வாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினைததிடு மசசிறீயிக கிறீ யீரா
நினைததிடு சககர மாதியு மீறு
நினைததிடு நெலலொடு புலவினை யுளளெ
நினைததிடு மறசனை நெரதரு வாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நினைத்திடும் அச் சிறீ இக் கிறீ ஈரா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல் வினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர் தருவாளே.

பதப்பொருள்:

நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) அச் (அந்த சக்கரத்தில் உள்ள) சிறீ (ஸ்ரீம் எனும் அட்சரம்) இக்கிறீ (ஹ்ரீம் எனும் அட்சரம்) ஈரா (ஆகிய இரண்டு அட்சரங்களும்)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தில்) ஆதியும் (முதலாகவும்) ஈறு (முடிவாகவும் வைத்து)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற போது) நெல்லொடு (நெல்லை விதைத்து) புல் (அதிலிருந்து புல்லை விளைவிக்கும்) வினை (செயலைப் போலவே) உள்ளே (மனதிற்குள்)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) அருச்சனை (மந்திரத்தை சாற்றுகின்ற போது) நேர் (அதற்கு இணையான பலன்களை) தருவாளே (சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்).

விளக்கம்:

பாடல் #1323 இல் உள்ளபடி சாதகர் நினைத்து தியானிக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ஸ்ரீம் எனும் அட்சரம் ஹ்ரீம் எனும் அட்சரம் ஆகிய இரண்டு அட்சரங்களையும் முதலாகவும் முடிவாகவும் வைத்து தியானிக்க வேண்டும். அப்படி தியானிக்கும் போது நெல்லை விதைத்தால் அதிலிருந்து புல்லாக முளைத்து விளைவிக்கும் செயலைப் போலவே மனதிற்குள் சாதகர் நினைத்து தியானிக்கின்ற மந்திரத்தை சாற்றுகின்ற போது அதற்கு இணையான பலன்களை சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்.

பாடல் #1325

பாடல் #1325: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நேர்தரு மத்திரு நாயகி யானவள்
யாதொரு வண்ண மறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணங் கருதின கைவரும்
நாள்தரு வண்ணம் நடத்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெரதரு மததிரு நாயகி யானவள
யாதொரு வணண மறிந்திடும பொறபூவை
காரதரு வணணங கருதின கைவரும
நாளதரு வணணம நடததிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நேர் தரும் அத் திரு நாயகி ஆனவள்
யாது ஒரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை
கார் தரு வண்ணம் கருதின கை வரும்
நாள் தரு வண்ணம் நடத்திடு நீயே.

பதப்பொருள்:

நேர் (இணையான பலனை) தரும் (தந்து அருளுகின்ற) அத் (அந்த) திரு (திருவருள்) நாயகி (தலைவியாக இருக்கின்ற) ஆனவள் (இறைவியானவள்)
யாது (எந்த) ஒரு (விதமான) வண்ணம் (வண்ணத்தில் இருக்கின்றாள் என்பதை) அறிந்திடும் (தமக்குள் தரிசித்து அறிந்து கொண்டால்) பொன் (அவள் தங்கம் போல ஜொலிக்கும் பிரகாசத்துடனும்) பூவை (மென்மையான பூவைப் போலவும் இருப்பதை உணர்ந்து கொண்டு)
கார் (மழையைக்) தரு (கொடுக்கின்ற மேகத்தைப்) வண்ணம் (போலவே இறைவியானவள்) கருதின (தன்னை நினைத்து வணங்கும் எவருக்கும்) கை (அவர்கள் எண்ணியது கிடைக்கும்) வரும் (படி செய்து அருளுவாள் என்பதை உணர்ந்து கொண்டு)
நாள் (தினந்தோறும்) தரு (அவள் அருளுகின்ற) வண்ணம் (விதத்திலேயே) நடத்திடு (உலக நன்மைக்குத் தேவையானதை நடத்துங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1324 இல் உள்ளபடி தியானிக்கின்ற மந்திரத்தை சாற்றுகின்ற போது அதற்கு இணையான பலன்களை தந்து அருளுகின்ற திருவருள் தலைவியான இறைவியானவள் எந்த விதமான வண்ணத்தில் இருக்கின்றாள் என்பதை தமக்குள் தரிசித்து அறிந்து கொண்டால் அவள் தங்கம் போல ஜொலிக்கும் பிரகாசத்துடனும் மென்மையான பூவைப் போலவும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மழையைக் கொடுக்கின்ற மேகத்தைப் போலவே இறைவியானவள் தன்னை நினைத்து வணங்கும் எவருக்கும் அவர்கள் எண்ணியது கிடைக்கும் படி செய்து அருளுவாள் என்பதை உணர்ந்து கொண்டு தினந்தோறும் அவள் அருளுகின்ற விதத்திலேயே உலக நன்மைக்குத் தேவையானதை சாதகர்கள் நடத்துவார்கள்.

பாடல் #1326

பாடல் #1326: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நடந்திடும் பாரி னன்மைக ளெல்லாங்
கடந்திடுங் காலனு மெண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
வடைந்திடு மவ்வண்ண மடைந்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடநதிடும பாரி னனமைக ளெலலாங
கடநதிடுங காலனு மெணணிய நாளும
படரநதிடு நாமமும பாயகதிர பொல
வடைநதிடு மவவணண மடைநதிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடந்திடும் பாரின் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடும் அவ் வண்ணம் அடைந்திடு நீயே.

பதப்பொருள்:

நடந்திடும் (உலக நன்மைக்கு வேண்டியது என்று சாதகர்கள் எண்ணியபடியே நடத்தப்படும்) பாரின் (உலகிலுள்ள) நன்மைகள் (நன்மையான காரியங்கள்) எல்லாம் (அனைத்தும்)
கடந்திடும் (கடந்து போய்விடும்) காலனும் (எமன் சாதகர்களுக்கு) எண்ணிய (குறித்த) நாளும் (ஆயுள் முடியும் நாளும்)
படர்ந்திடும் (உலகம் முழுவதும் பரந்து செல்லும்) நாமமும் (சாதகரின் பெயரும் புகழும்) பாய் (சூரியனிலிருந்து பாய்ந்து வருகின்ற) கதிர் (ஒளிக்கதிர்களைப்) போல (போலவே)
அடைந்திடும் (இதன் மூலம் இறையை நோக்கி) அவ் (செல்லுகின்ற சாதகத்தின்) வண்ணம் (முறைப்படியே) அடைந்திடு (இறையைச் சென்று அடையுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1325 இல் உள்ளபடி உலக நன்மைக்குத் தேவையானதை சாதகர்கள் எண்ணியபடியே நவாக்கிரி சக்கரம் சக்தியால் அனைத்து விதமான நன்மையான காரியங்களும் உலகினில் நடக்கும். எமன் சாதகர்களுக்கு குறித்த ஆயுள் முடியும் நாளும் அவர்களைக் கடந்து போய்விடும். சாதகரின் பெயரும் புகழும் சூரியனிலிருந்து பாய்ந்து வருகின்ற ஒளிக் கதிர்களைப் போலவே உலகம் முழுவதும் பரந்து செல்லும். இப்படி தாம் செய்கின்ற சாதகத்தின் மூலம் உலகத்திற்கு நன்மைகள் செய்து இறையை நோக்கிச் சென்று அடைவார்கள் சாதகர்கள்.

பாடல் #1327

பாடல் #1327: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுட னெல்லா
மடைந்திடு மாதி யருளுந் திருவு
மடைந்திடு மண்டத் தமரர்கள் வாழ்வு
மடைந்திடு மவ்வண்ண மறிந்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடைநதிடு பொனவெளளி கலலுட னெலலா
மடைநதிடு மாதி யருளுந திருவு
மடைநதிடு மணடத தமரரகள வாழவு
மடைநதிடு மவவணண மறிநதிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் அவ் வண்ணம் அறிந்திடு நீயே.

பதப்பொருள்:

அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) பொன் (பொன் போல பிரகாசிக்கின்ற உடல்) வெள்ளி (வெள்ளி போல தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மா) கல்லுடன் (வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனம்) எல்லாம் (ஆகிய அனைத்தும்)
அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) ஆதி (ஆதிப் பரம்பொருளான இறைவனின்) அருளும் (திருவருளும்) திருவும் (இறைவனது திருமேனியும்)
அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) அண்டத்து (அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும்) அமரர்கள் (இறவா நிலை பெற்ற அமரர்களின்) வாழ்வும் (தெய்வீக வாழ்க்கையும்)
அடைந்திடும் (சாதகத்தின் மூலம் அடையக்கூடிய) அவ் (அனைத்தையும் அதனதன்) வண்ணம் (முறைப்படியே அடையும்) அறிந்திடு (முறைகளை அறிந்து கொள்ளுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1326 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்கள் பொன் போல பிரகாசிக்கின்ற உடல், வெள்ளி போல தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மா, வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனம் ஆகிய அனைத்தும் அடைவார்கள். அது மட்டுமின்றி ஆதிப் பரம்பொருளான இறைவனின் திருவருளும் இறைவனது திருமேனியையும் அடைவார்கள். மேலும் அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும் இறவா நிலை பெற்ற அமரர்களின் தெய்வீக வாழ்க்கையும் அடைவார்கள். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்வதன் மூலம் அனைத்தையும் அதனதன் முறைப்படியே அடையும் முறைகளை சாதகர்கள் அறிந்து கொள்வார்கள்.

பாடல் #1328

பாடல் #1328: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அறிந்திடு வார்க ளமரர்க ளாகத்
தெரிந்திடும் வானோருந் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றிடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதிடு வாரக ளமரரக ளாகத
தெரிநதிடும வானொருந தெவரகள தெவன
பரிநதிடும வானவன பாயபுனல சூடி
முரிநதிடு வானை முயனறிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்திடுவார்கள் அமரர்கள் ஆகத்
தெரிந்திடும் வானோரும் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வான் அவன் பாய் புனல் சூடி
முரிந்திடுவானை முயன்றிடு நீயே.

பதப்பொருள்:

அறிந்திடுவார்கள் (மேலே உள்ளபடி அறிந்து கொண்ட சாதகர்கள்) அமரர்கள் (அமரர்களாகவே) ஆகத் (ஆகிவிடுகின்ற முறைகளை)
தெரிந்திடும் (அவர்களுக்குத் தெரிந்திடும்) வானோரும் (விண்ணவர்களுக்கும்) தேவர்கள் (தேவர்களுக்கும்) தேவன் (தலைவனானவனும்)
பரிந்திடும் (பெருங்கருணையில் உலகங்களுக்கு) வான் (மழை போல் பொழியும் வானத்தைப்) அவன் (போன்றவனும்) பாய் (பாய்ந்து வருகின்ற) புனல் (கங்கையை) சூடி (உலக நன்மைக்காகத் தன் தலையின் மேல் தாங்கி)
முரிந்திடுவானை (அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனும் ஆகிய இறைவனை) முயன்றிடு (முழுவதும் உணர்ந்து அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1327 இல் உள்ளபடி அனைத்தையும் அதனதன் முறைப்படியே அறிந்து கொண்ட சாதகர்கள் அமரர்களாகவே ஆகிவிடுகின்ற முறைகளை அறிந்து கொள்வார்கள். அதனால் அவர்களுக்குத் தெரிந்திடும் விண்ணவர்களுக்கும் தேவர்களுக்கும் தலைவனானவனும் பெருங்கருணையில் உலகங்களுக்கு மழை போல் பொழியும் வானத்தைப் போன்றவனும் பாய்ந்து வருகின்ற கங்கையை உலக நன்மைக்காகத் தன் தலையின் மேல் தாங்கி அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனும் ஆகிய இறைவனை முழுவதும் உணர்ந்து அடைவதற்கு முயற்சி செய்யுங்கள் சாதகர்களே.

பாடல் #1329

பாடல் #1329: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நீர்தரு சக்கர நேர்தரு வண்ணங்கள்
பார்மதி யும்மிறீ மன்சிறீ யீரான
தாரணி யும்புகழ்த் தையல் நல்லாடன்னைக்
காரணி யும்பொழிற் கண்டு கொள்ளீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நீரதரு சககர நெரதரு வணணஙகள
பாரமதி யுமமிறீ மனசிறீ யீரான
தாரணி யுமபுகழத தையல நலலாடனனைக
காரணி யுமபொழிற கணடு கொளளீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நீர் தரு சக்கரம் நேர் தரு வண்ணங்கள்
பார் மதியும் இறீமன் சிறீம் ஈரான
தார் அணியும் புகழ்த் தையல் நல் ஆடன் தனைக்
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே.

பதப்பொருள்:

நீர் (சாதகர்) தரு (தாங்கள் சாதகம் செய்து பெற்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரமானது) நேர் (அவரது சாதகத்திற்கு சமமாக) தரு (தருகின்ற) வண்ணங்கள் (பல விதமான பலன்களில்)
பார் (உலகத்தில் உள்ள) மதியும் (மொத்த அறிவும்) இறீமன் (‘ஹ்ரீம்’ மற்றும்) சிறீம் (‘ஸ்ரீம்’ ஆகிய) ஈரான (இரண்டு விதமான பீஜ மந்திரங்களின் மூலமே பெறுவதும்)
தார் (அழகிய பூக்களை) அணியும் (மாலையாக அணிந்திருக்கும்) புகழ்த் (அனைத்து விதமான புகழ்களுக்கும் உரியவளான) தையல் (இறைவியோடு) நல் (சேர்ந்து உலக நன்மைக்காக) ஆடன் (திருக்கூத்து ஆடிக்கொண்டு இருக்கும்) தன்னைக் (இறைவனையும்)
கார் (மேகங்கள்) அணியும் (மூடியிருக்கும்) பொழில் (அழகிய பூக்கள் பூத்து விளங்கும் சோலையில்) கண்டு (சாதகர் தமது கண்களால்) கொள்ளீரே (தரிசனம் செய்து கொள்ளுங்கள்).

விளக்கம்:

பாடல் #1328 இல் உள்ளபடி சாதகர்கள் சாதகம் செய்து பெற்ற நவாக்கிரி சக்கரமானது அவரது சாதகத்திற்கு சமமாகத் தருகின்ற பல விதமான பலன்களில் முதலில் உலகத்தில் உள்ள மொத்த அறிவும் ‘ஹ்ரீம்’ மற்றும் ‘ஸ்ரீம்’ ஆகிய இரண்டு விதமான பீஜ மந்திரங்களின் மூலமே பெறுகின்றார். அதன் பிறகு அழகிய பூக்களை மாலையாக அணிந்திருக்கும் அனைத்து விதமான புகழ்களுக்கும் உரியவளான இறைவியோடு சேர்ந்து உலக நன்மைக்காக திருக்கூத்து ஆடிக்கொண்டு இருக்கும் இறைவனையும் மேகங்கள் மூடியிருக்கும் அழகிய பூக்கள் பூத்து விளங்கும் சோலையில் சாதகர்கள் தமது கண்களால் தரிசனம் செய்து கொள்வார்கள்.

பாடல் #1330

பாடல் #1330: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டுகொ ழுந்தனி நாயகி தன்னையு
மொண்டுகொ ழுமுக வசியம தாயிடும்
பண்டுகொ ழும்பர மாய பரஞ்சுடர்
நின்று கொளுநிலை பேறுடை யாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடுகொ ழுநதனி நாயகி தனனையு
மொணடுகொ ழுமுக வசியம தாயிடும
பணடுகொ ழுமபர மாய பரஞசுடர
நினறு கொளுநிலை பெறுடை யாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டு கொழும் தனி நாயகி தன்னையும்
ஒண்டு கொழும் உக வசியம் அது ஆயிடும்
பண்டு கொழும் பரம் ஆய பரம் சுடர்
நின்று கொளும் நிலை பேறு உடையாளே.

பதப்பொருள்:

கண்டு (சாதகர்கள் தமக்குள் தரிசிக்கும்) கொழும் (தலைவனாகிய இறைவனோடு சேர்ந்தும்) தனி (நவாக்கிரி சக்கரத்தில் தனி) நாயகி (நாயகியாகவும் இருக்கின்ற) தன்னையும் (இறைவியையும்)
ஒண்டு (ஒன்றாகச் சேர்த்து) கொழும் (தலைவனாகிய இறைவனையும்) உக (தியானிக்கும் அளவுக்கு ஏற்ப) வசியம் (இறைசக்தியை தனக்குள் கிரகித்துக் கொள்ளும்) அது (கருவியாகவே நவாக்கிரி சக்கரம்) ஆயிடும் (ஆகி விடும்)
பண்டு (ஆதியிலிருந்தே) கொழும் (தலைவனாகவும்) பரம் (பரம்பொருள்) ஆய (ஆகவும் இருக்கின்ற இறைவனையும்) பரம் (பராசக்தியின்) சுடர் (பேரொளியான இறைவியையும்)
நின்று (சாதகர்கள் தமக்குள் மானசீகமாக வடித்துக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தில் நிலை நிறுத்திக்) கொளும் (கொள்கின்ற) நிலை (உயர்வான நிலையைப் பெறுகின்ற) பேறு (மிகப் பெரிய வரத்தை) உடையாளே (இறைவியானவள் கொடுத்து அருளுவாள்).

விளக்கம்:

பாடல் #1329 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் தரிசிக்கும் இறைவனோடு சேர்ந்தும் நவாக்கிரி சக்கரத்தில் தனி நாயகியாகவும் இருக்கின்ற இறைவியையும் இறைவனையும் ஒன்றாகச் சேர்த்து தியானிக்கும் அளவுக்கு ஏற்ப இறைசக்தியை தனக்குள் கிரகித்துக் கொள்ளும் கருவியாக நவாக்கிரி சக்கரம் ஆகி விடும். அதன் பிறகு ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாகவும் பரம்பொருளாகவும் இருக்கின்ற இறைவனையும் பராசக்தியின் பேரொளியான இறைவியையும் சாதகர்கள் தமக்குள் மானசீகமாக வடித்துக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தில் நிலை நிறுத்திக் கொள்கின்ற உயர்வான நிலையைப் பெறுகின்ற மிகப் பெரிய வரத்தை இறைவியானவள் கொடுத்து அருளுவாள்.

பாடல் #1331

பாடல் #1331: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பேறுடை யாடன் பெருமையை யெண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாயிடு
மாறுடை யார்களும் வாழ்வது தன்னிலைக்
கூறுடை யாளையுங் கூறுமின் னீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெறுடை யாடன பெருமையை யெணணிடில
நாடுடை யாரகளும நமவச மாயிடு
மாறுடை யாரகளும வாழவது தனனிலைக
கூறுடை யாளையுங கூறுமின னீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேறு உடையாள் தன் பெருமையை எண்ணிடில்
நாடு உடையார்களும் நம் வசம் ஆயிடும்
ஆறு உடையார்களும் வாழ்வது தன் நிலைக்
கூறு உடையாளையும் கூறுமின் நீரே.

பதப்பொருள்:

பேறு (வரங்கள் அனைத்தும்) உடையாள் (தன் வசத்தில் வைத்திருக்கும்) தன் (இறைவியின்) பெருமையை (அருமை பெருமைகளை) எண்ணிடில் (ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால்)
நாடு (இந்த உலகம் செயல்படுவதற்கான நன்மைகளை) உடையார்களும் (தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகளும்) நம் (சாதகர்களின் மேல்) வசம் (அன்பு கொண்டு) ஆயிடும் (அவரை நாடி வருவார்கள்)
ஆறு (இறையருளை அடைவதற்கான வழிகளைத்) உடையார்களும் (தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகள்) வாழ்வது (வாழுகின்ற நிலையை) தன் (சாதகர்கள் தாமும்) நிலைக் (கண்டு கொண்டு அதன் படியே வாழ்வார்கள்)
கூறு (இவ் வழியில் வாழுகின்ற அனைவரிலும் ஒரு பகுதியாகவும் இருந்து) உடையாளையும் (அவர்களைத் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் பெருமைகளை) கூறுமின் (போற்றி எடுத்துக் கூறுங்கள்) நீரே (நீங்களே).

விளக்கம்:

பாடல் #1330 இல் உள்ளபடி அருளுகின்ற அனைத்து வரங்களையும் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியின் அருமை பெருமைகளை ஆராய்ந்து எண்ணிப் பார்த்தால் கிடைப்பது என்னவென்றால் இந்த உலகம் செயல்படுவதற்கான நன்மைகளை தன் வசத்தில் வைத்திருக்கும் ஞானிகளும் சாதகர்களின் மேல் அன்பு கொண்டு அவரை நாடி வருவார்கள். இறையருளை அடைவதற்கான வழிகளைத் தன் வசத்தில் வைத்திருக்கும் அந்த ஞானிகள் வாழுகின்ற நிலையை சாதகர்கள் தாமும் கண்டு கொண்டு அதன் படியே வாழ்வார்கள். இந்த வழியில் வாழுகின்ற அனைவரிலும் ஒரு பகுதியாகவும் இருந்து அவர்களைத் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் பெருமைகளை சாதகர்களான நீங்களும் போற்றி எடுத்துக் கூறுங்கள்.