மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #83

23-9-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சிறியவன் சிறியவனாக இருக்க பெரும் அருள் உண்டு. சிறியது பின்பு பெரியதாகும் திறன் உண்டு. நாம் சின்னவன் (நாம் கீழான இடத்தில் இருக்கின்றோம் மற்றவர்கள் மேலான இடத்தில் இருக்கின்றார்கள்) என்ற எண்ணத்தை தவிர்ப்பீர்களாக. இன்று சின்னது என்பது நாளை பெரிதாகும். குறுகிய மனப்பான்மை இங்கு பலருக்கும் உண்டு. பயத்தை மனதிலிருந்து நீக்கி விடுங்கள். பின்பு அனைத்தும் சீராகும். பூஜைகளில் இறைவனிடம் மனம் விட்டு கூறியும் மனம் விட்டு கேட்கவும் வேண்டும் இவ்விதம் செய்திட நல்முடிவுகள் உண்டு.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #82

26-8-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆனமீக நிலையை வைத்து இன்றைய இளைஞர்களிடம் குழப்பங்கள் அதிகமாக உள்ளது ஏன்?

குழப்பத்திற்கு அடிப்படையே முதல் காரணமாகும் முதலில் இறைவன் வெளியே இல்லாதவன் என்று உணர வேண்டும். இரண்டாவதாக அவன் நமக்குள் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். மூன்றாவதாக அவன் நம்மை விட்டு பிரியாமல் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். நான்காவதாக அவன் தேவையற்றவன் என்பதை உணர வேண்டும். அன்புடன் அவனை பார்த்தால் அன்பு அது பக்தியாய் மாறி பக்தியது பெரும் வெள்ளமாய் பெருகி அந்த பரவசத்தில் நாமும் அமர இறைவனை உறுதியாக காண முடியும். அடிப்படையில் இறைவனை வெளியில் பார்ப்பதை விட வேண்டும் என்பது விதியாகும். ஏனெனில் இறைவன் நம்மை விட்டு பிரிந்ததில்லை இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை நாம் உணர்வதில்லை. இதனை அப்அப்பொழுது சிந்தனையில் வைக்க வேண்டும். ரூபம் இல்லாத இறைவன் நம்முடைய இயலாமையால் ரூபத்தை கொடுக்கின்றான். ரூபமாய் இருக்கும் இறைவனை சிறிது தூரத்தில் பார்த்து நாம் வேறு இறைவன் வேறு என தவறாகப் புரிந்து நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரத்தை அதிகரித்ததால் இக்காலத்தில் வேதனை காண்கின்றோம் என்பதே உண்மையான நிலை இதை தவிர்க்க வேண்டும் என்றால் எமக்குள் இருக்கும் இறைவா என்கின்ற வாக்கியத்தை எப்பொழுதும் உங்கள் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டால் இது நாளடைவில் பெருகி உண்மையாக மாறி அந்த உண்மையை உணரச்செய்யும். இன்று முழுமையாக தவம் செய்தோம் இறைவனை காணவில்லை என எண்ண வேண்டாம். ஏனெனில் நீங்கள் தியானம் செய்தது வெளியில் இருக்கும் இறைவனை உள்ளிருக்கும் இறைவனை அல்ல. உள் சென்று ஹிருதய ஸ்தானத்தில் இறைவன் இருப்பதாக எண்ணி அந்த இடத்தை சுத்தமாக வைத்து இறைனுக்கு பாத நமஸ்காரங்கள் செய்வது ஒன்றே போதுமானது. இங்கு இறைவனுக்கு ரூபம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஜோதி ஸ்வருபனை ஜோதி ஸ்வருபமாக காண்பீர்களாக இவ்விதம் செய்திட குறையின்றி இறையருள் கைகூடும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #81

30-7-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மன சக்தியால் எதையும் சாதிக்க இயலுமா? பின்பு ஏன் பல காரியங்கள் தோல்வி அடைகின்றது?

உறுதியாக மன சக்தியால் அனைத்தையும் சாதிக்க இயலும். பின்பு காரியங்கள் நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் மனஉறுதி குறைவாக உள்ளதை ஆகும். மனதில் ஒன்றை வைத்து ஒன்று என்றால் ஒன்றை மட்டும் வைத்து மாற்றாமல் அசைக்காமல் அது நடைபெறும் என எண்ணம் கொண்டால் உறுதியாக நடைபெறும் என அனுபவரீதியாகவும் யாம் கண்டதும் அனைவரும் கண்டதாகும். தவறு எங்கிருக்கிறது என்றால் என்ன வேண்டும் என்பதில் முதலில் உறுதியில்லை. இரண்டாவதாக அப்படம்தனை மனதில் வைத்து மாற்றி மாற்றி கலர் கலராகவும் பல விதங்களாகவும் மாற்றிக் காண ஓர் புதுமையான படம் மனதில் காணும் நிலை உண்டாகும். பின்பு வெற்றி எவ்வாறு உண்டாகும். இதன் அடைப்படை என்னவென்றால் முதலில் என்ன வேண்டும் என்பதை முழுமையாக அறிய வேண்டும். இரண்டு அது எவ்விதம் வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இதற்கு பின்பே மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக நான்கு சக்கர வாகனம் ஒன்று வேண்டும் என்றால் அது எந்த வாகனம்? அதன் பெயர் என்ன? அதன் கலர் என்ன? அதை எங்கு வைக்க வேண்டும்? என்பதில் முதலில் தெளிவு வேண்டும். இது தான் விதி மாறாக இன்று ஓர் விதமான வாகனமும் நாளை வேறு வாகனம் கலர் வேறு நிறுத்தும் இடம் வேறு என மாற்றிக் கொண்டிருந்தால் உறுதியாக அக்காரியம் நடைபெறாது. ஆங்கிலத்தில் POWER OF THOUGHT (எண்ணகளின் சக்தி) என்பதை கடைபிடித்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #80

5-6-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஒன்று செய் அதை நன்றாக செய் என்பது இக்கலியுகத்தில் குறையாக உள்ளது. பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யும் முயற்சியில் அனைத்து காரியங்களும் முக்கால்வாசி பலனே தருகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு காரியம் முடிந்தபின் மற்றொரு காரியத்திற்குச் செல்வதே சிறந்ததாகும். முயற்சித்தால் இதுவும் கைகூடும். ஒரு வேளை செய்யும் பணி இன்று முடியாமல் அதற்குள் வேறொரு முக்கியமான பணி வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். அப்பணியை மறுநாள் முழுமையாகத் தொடருதல் வேண்டும். அப்பணியை முடித்தப் பிறகே புதிதாக வரும் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்தையும் தொடர்கதையாகச் செய்வது சரியாகாது. இதைக் கூறுவதற்குக் காரணமும் உண்டு. பலர் இங்கு இஷ்ட தெய்வத்தை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இது பலன் அளிக்காது. இஷ்ட தெய்வம் என்பது ஓர் ஆடையல்ல அடிக்கடி மாற்றிக்கொள்வதற்கு. முழுமையான பலன் வேண்டுமெனில் ஒன்றில் நிற்கக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அந்த ஒன்றிலிருந்து விலக விலக மன சஞ்சலங்களே மிஞ்சும். ஒன்றில் நின்று வெல்வாய் என்பதே எமது அறிவுரையாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #79

9-5-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நமக்கு பிற உயிர்களிடம் அன்பு இல்லாமல் இருந்தாலும் அன்பாக இருப்பது போல் நடித்தல் வேண்டும். ஏனென்றால் இந்த நடிப்பு செல்ல செல்ல நாளடைவில் நிஜமான அன்பாக மாறிவிடும். ஒருவர்க்கு தானம் செய்யும் எண்ணம் இல்லையென்றால் தானம் செய்தால் புகழ் கிடைக்கும் என்ற எண்ணம் கொண்டு தானம் செய்தல் வேண்டும். இத்தானம் செய்வது பழக்கமாகி விடும் பின்பு அதன் வழியாக அகங்காரம் தோணாது. நல் குணங்கள் ஒன்றும் இல்லா போதிலும் அது இருப்பது போல் பாவனை செய்து காரியங்கள் நடத்தி விட நாட்கள் செல்ல செல்ல அத்தகைய அன்பு பாசம் தானதர்ம சீலனாக மாறி பெருமளவிற்கு முன்னேற்றம் அடைய இயலும். தானம் என்பது வெறும் பணத்தால் அன்னத்தால் மட்டுமல்ல நல்வார்த்தைகளும் நம் அறிவை பங்கிடுவதும் தானமே ஆகும். இயன்றளவிற்கு நம் கையில் வசதிகள் இல்லா போதிலும் நம் அறிவை பகிர்ந்து கொள்வதும் ஓர் பெரும் தானமாகின்றது. இதனையும் மனதில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #78

12-4-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பலர் தமக்குள் இருக்கும் குறைகள் தெரியாத நிலையில் இருக்கின்றனர் இத்தகைய குறைகளை மூடி மறைப்பதற்க்காக பெருமளவில் கோபம் கொண்டு சீறி எழுகின்றனர் இது அவர்களுடைய கீழ் நிலையை மறைப்பதற்க்கான ஓர் முயற்சியாகும் இத்தகைய நபர்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது?

முதலில் தம் குறைகளை உணர வேண்டும். குறைகளை உணர்ந்த பின் அக்குறைகளை நீக்கி குறையின்றி வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திட கோபங்கள் குறைவதோடு உண்மையான நிலையை உணர்ந்து பெருமளவில் அமைதி கிடைக்கும். ஆன்மீக பாதையில் செல்கின்ற பலருக்கும் குறிப்பாக சக்தி உபாசனையில் (அம்மனை வழிபடுபவர்கள்) ஈடுபடுகின்றவர்க்கும் தன்னை விட சிறந்த பக்தர் இல்லை என்கின்ற ஆணவம் அதிகமாக வரும். இது அகங்காரத்தை வளர்க்கும் தன் குறைகளை மறைத்து கோபப்படுவார்கள். ஆத்திரம் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவார்கள். சம்பந்தப்படாத மற்றவர்களையும் வார்த்தையால் தாக்கி பேசுவார்கள் இதனை தவிர்த்திடவே முதலில் நாம் நமக்குள் இருக்கும் குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் செய்தால் மட்டுமே முன்னேற்றங்கள் கிடைக்கும். குறைகளை கண்டால் என்ன செய்வது? அதை வளர விடக்கூடாது. அதை நீக்கும் வழியை தேட வேண்டும். இது ஒரு நாளில் முடியாத செயல் பல காலங்கள் செல்ல வேண்டும் என்ற விதி இருந்த போதிலும் படிப்படியாக குறைகளை நீக்குதல் வேண்டும். இல்லை என்றால் ஓர் விஷக் கொடியாக இது வளர்ந்து பின்பு இறைவனை நெருங்கும் தகுதியற்றவனாக மாற்றி விடும். ஏனெனில் அகங்காரத்திற்கும் கோபத்திற்கும் அப்பாற்பட்டவனாக நிற்கின்றான் அத்தெய்வம். பாசம் அன்பு இரண்டும் இரண்டு கால்களாக வைத்து நடமாடும் அந்த இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் பாசம் அன்பு என்ற இரண்டு தன்மைகளை நாம் வளர்த்தல் வேண்டும். அத்தன்மைகளை வளக்க வேண்டுமென்றால் அகங்காரமும் கோபமும் ஆகாது என்பதை நன்கு உணர வேண்டும். இது எவரையும் சுட்டிக்காட்டாமல் பொதுவாக ஆன்மீக பாதையில் செல்வோர்க்கு நேரிடக்கூடிய ஓர் கடினம் ஆகும். இது ஆன்மீக பருவத்தில் ஏற்படக்கூடிய ஓர் நிலை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #77

15-3-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மகான்களின் சமாதிகளுக்கு செல்வதின் பயன் என்ன?

மகான்களின் சமாதிக்கும் சென்று அமர்ந்து வருவதில் எவ்வித லாபமும் இல்லை. லாபம் என கணக்கிட்டால் ஆத்ம ஞானம் பெருகுதல் வேண்டுமென்றால் அங்கு அமர்ந்து செய்ய வேண்டியதை செய்தல் வேண்டும். இதற்கு தேவையானது 1.விசுவாசம் (நம்பிக்கை) 2.ஆன்மீக விருப்பம் 3.பெரும் தெய்வ சிந்தனை 4.மனஉறுதி 5.மனஒருமைப்பாடு இவை இல்லையென்றால் அங்கு அமர்ந்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்து என்ன எதிர்பார்க்கிறிர்கள்? பொதுவாக இக்காலத்தில் பௌர்ணமி நேரங்களில் சமாதிகளுக்கு சென்று வட்டமிட்டு அங்கு தின்பண்டங்கள் உண்டு மகிழ்வதும் கொண்டாடுவதும் இப்போது உள்ளது. இதில் ஆன்மீக ரீதியாக எவ்வித வளர்ச்சியும் இல்லை. உடல் ஆரோக்யம் சிறிது காணலாம். இறை நாட்டத்தில் எவ்வித வளர்ச்சியும் இருக்காது. இதற்கு சமாதிக்கு ஏன் செல்ல வேண்டும். வீட்டிலேயை இருந்து செய்யலாமே? அங்கு அமர்ந்து அங்கு உள்ள மகான்களை நினைத்து தியானம் செய்தல் வேண்டும். அவரிடம் அருளைக் கேட்டு பெறுதல் வேண்டும், இக்காலத்தில் பலர் மகான்களின் சமாதிக்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்ற ஓர் மூடநம்பிக்கை வைத்துள்ளனர், உங்களை காப்பது அந்த மகான்கள் அல்ல, உமது விசுவாசமே என மனதில் உணர வேண்டும், மகான்கள் அனைவரும் கூறுவது உன் விசுவாசம் உன்னை காக்கும் என்பது தான், நான் உன்னை காக்கின்றேன் என்று யாரும் கூறியதில்லை, இதனை முழுமையாக மனதில் வைத்து முறையாக செயல்பட்டால் நன்மைகள் உண்டாகும் இல்லையேல் வெறும் பொழுது போக்காகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #76

17-2-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கலியுகத்தில் சிறு சிறு பொய்கள் கூற வேண்டிய ஓர் நிலை உள்ளது இதிலிருந்து நாம் எவ்விதம் மீள்வது?

வார்த்தை என்பது நம்முடையதாகும். இது மற்றவர்களுடையது அல்ல இவ்வார்த்தையை நாமே கூறி அதனை நாமே பொய்யாக்கி வாழ்வதன் அவசியம் என்ன? இருப்பதை இருக்கும்படி கூறினால் துவக்கத்தில் சிறிது கஷ்டமாக இருக்கும் என்ற போதிலும் அனைவர்களிடமும் இது ஒரு பெரும் விசுவாசத்தை (நம்பிக்கை) ஏற்படுத்தும் அல்லவா? இதனை சிந்தித்து ஆரம்ப காலத்தில் பொய்மையை தவிர்த்தல் வேண்டும். பொய்யானது ஒன்று கூறிட அதனை மூடி மறைக்க பல பொய்களை கூற வேண்டிய நிலையும் காண்பீர்கள். இத்தகைய நிலையில் வாழ்க்கை பொய்யாகி விடும் என்பதை மனதில் வைத்து திருத்தங்கள் செய்வீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #75

21-1-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வெளிச்சத்தின் தன்மை என்ன? அதன் நிலை என்ன?

இரவு நேரங்களில் நாம் எதையும் காண்பதில்லை சூரியனின் வெளிச்சம் வந்த பிறகே அனைத்தும் தெளிவாகின்றது அல்லவா? இதனை வைத்து ஒன்றை உணர வேண்டும். வெளிச்சம் தெளிவாக்குகின்றது என்பதே பொருள். காயத்ரியின் தன்மையும் இதுவே. காயத்திரி மந்திர ஜெபத்தின் முக்கியமான அம்சம் எனக்கு வெளிச்சத்தை கொடு என்பதாகும். வெளிச்சம் என்பது இக்காலத்தில் எவ்விதமான மின்சார உபகரணங்கள் இருந்த போதிலும் சூரியனின் வெளிச்சத்திற்கு ஈடாகாது என்பது போல் சத்தியத்தின் வெளிச்சத்திற்கு எதுவும் ஈடாகாது. சத்தியம் என்பது இறைவன் ஒருவனே என்பதாகும். மற்ற சத்தியங்கள் அனைத்தும் நிலையற்றவை என்று அறிய வேண்டும். சத்தியத்தின் வெளிச்சத்தை நோக்கி நாம் செல்ல தெளிவு பெறுகின்றோம். தேவையற்ற எண்ணங்கள் சிந்தனைகள் தேவையற்ற மனநிலைகள் மாறுகின்றதை உணருதல் வேண்டும். இதுவே உண்மையான வெளிச்ச நிலை. இறைவனை தேடுதல் இறைவனை நாடுதல் இது ஒன்றே நம்மை வெளிச்சமாக்க முடியும் என்பதை நாம் அறிய வேண்டும். அந்த வெளிச்சத்தை நாம் அடையும் காலத்தில் கண்களை மூடிக்கொள்கிறோம். அந்த இருட்டிலிருந்து வெளிச்சம் தானாக தென்படுகிறது என்றால் அவ்வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என உணர்தல் வேண்டும் சிந்தித்தல் வேண்டும். சிந்தித்தால் வெளிச்சம் நமக்கு உள்ளிருந்து வருகிறது என்பதை உணர முடியும். அப்போது சத்தியம் எங்கு வசிக்கின்றது என நாம் சிந்தித்தால் நமக்குள்ளே இறைவன் இருக்கின்றான் என்பதை உணர முடியும். இதனை மூடி மறைத்துள்ளது நமது மானசீக அவஸ்தைகள் ஆகும். காமகுரோத ரோகங்கள் தேவையற்ற எண்ணங்கள் தேவையற்ற அகங்காரங்கள் அனைத்தும் இருட்டைப் போல் சூழ்ந்து கொண்டு சத்தியத்தை மறைக்கும். தேவையற்ற அனைத்தையும் நீக்கிக்கொள்ள அழகான சத்தியம் வெளியாகி முழு தெளிவோடு வாழ்ந்திட இயலும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #74

24-12-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சனீஸ்வரன் அவரின் தன்மைகள் என்ன?

அனைவரும் அவ் ஈஸ்வரனைக் கண்டு பெருமளவிற்கு பீதி (பயம்) காண்கின்றனர். வந்தவுடன் கொடுமைப்படுத்துவார் என்ற தவறான எண்ணம் பலருக்கும் உண்டு. சனீஸ்வரரின் காலமாகிய பத்தொன்பது வருடங்களிலும் பின்பு வரும் 7 1/2 வருடங்களிலும் நமது அளவற்ற கர்மவினைகளை தீர்க்க வாய்ப்பு அளிக்கின்றான். அவருக்கு மட்டும் ஈஸ்வரன் என்ற பட்டம் உண்டு. இதில் நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல எம்பிரானை குகையில் 7 1/2 வருடங்கள் இருக்க வைத்தாரே இது பெரும் காரியமல்லவா? இந்நிலையில் நாம் சனீஸ்வரனைக் கண்டு பயப்பட வேண்டாம் என்பது எமது வேண்டுகோளாகும். ஏனெனில் நாம் கொண்டு வந்த கர்ம மூட்டைகள் பெருமளவு அதை படிப்படியாக தீர்த்து வைக்க இச்சனீஸ்வரரே உதவுகின்றார். அவருக்கு ஞானகாரகன் என்ற பெயரும் உண்டு ஏனெனில் கடினங்கள் (கஷ்டங்கள்) வழியாக விரக்திகளும் தோன்றி நாம் ஞானம் பெறுகின்றோம். இதனை நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஓர் விதித்திரமான செயலாகின்றது. இதுமட்டுமல்லாது சில கோவில்களில் இருந்து சனீஸ்வரன் பெரும் நலன்களையும் அளிக்கின்றான். இக்காலத்திலும் கோவில்களில் இருந்து யோகம் அளிக்கும் நிலையிலையே காண்கின்றான் என்பதை உணர வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் பயப்படுவதோ கிலி (அதிர்ச்சி) காண்பதோ வேண்டாம். இதற்கு பதிலாக அவன் திருவடியை பணிந்து அவன் அருள் பெறுவீர்களாக சர்வ நலன்களும் உண்டாகும்,

வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் என்ன வித்யாசம்?

வாழ்த்து என்பது நாம் செய்யும் காரியத்தை தொட்டோ நம் முன்னேற்றத்தை தொட்டோ ஓர் புகழ்ச்சி அளிப்பது என்பதே அர்த்தமாகும். இதுவே வாழ்த்து என்பதின் முழுமையான பொருள். இக்காலம் வரை இவ்விதம் செய்திருக்கிறாய் உன்னை வாழ்த்துகிறேன் என்பது இதற்கு பொருளாகும்.

ஆசி என்பது முழுமையான ஆசிர்வாதமாகும். இது கிடைக்கும் வழியாக பல கர்மங்கள் தீர்ந்து விடுகிறது என்றும் நாம் ஆன்மீக பாதையில் உறுதியாக மேன்மைகள் காணக் கூடும். ஏனென்றால் நீ வருங்காலத்தில் நன்றாய் இருத்தல் வேண்டும் என்கின்ற அந்த ஆசிர்வாதம் மாகான்கள் வழியாக கிடைக்க அது இறைவனின் ஆசிர்வாதமாக கண்டு கொள்ளல் வேண்டும். இது தான் இரண்டுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசங்களாகும்.