பாடல் #1343

பாடல் #1343: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

புண்ணிய னாகிப் பொருந்தி யுலகெங்குங்
கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுந்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கு
மண்ணிய னாக வமர்ந்திருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புணணிய னாகிப பொருநதி யுலகெஙகுங
கணணிய னாகிக கலநதங கிருநதிடுந
தணணிய னாகித தரணி முழுதுககு
மணணிய னாக வமரநதிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புண் இயன் ஆகி பொருந்தி உலகு எங்கும்
கண் இயன் ஆகி கலந்து அங்கு இருந்திடும்
தண் இயன் ஆகி தரணி முழுதுக்கும்
அண் இயன் ஆக அமர்ந்து இருந்தானே.

பதப்பொருள்:

புண் (புண்ணியத்தின் பயனாக இருந்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) பொருந்தி (சேர்ந்து இருப்பவராகவும்) உலகு (உலகங்கள்) எங்கும் (அனைத்திலும்)
கண் (கண்ணின் பார்வையாக இருந்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) கலந்து (அனைத்திலும் ஒன்றாகக் கலந்து) அங்கு (அவற்றோடு சேர்ந்தே) இருந்திடும் (இருக்கின்றவராகவும்)
தண் (மழை போல் அருளைக் கொடுத்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) தரணி (உலகம்) முழுதுக்கும் (முழுவதிலும் இருக்கின்ற அனைத்து உயிர்களோடும்)
அண் (நெருங்கி இருந்து) இயன் (செயல் படுகின்றவனாக) ஆகி (சாதகர் ஆகி) அமர்ந்து (தாம் செய்யும் சாதகத்தை இடைவிடாது) இருந்தானே (செய்து கொண்டே இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1342 இல் உள்ளபடி தமது திருவடிகளை இறைவனின் திருவடிகளாகவே பாவித்து வணங்குகின்ற அடியவர்களையும் புண்ணியர்களாக ஆக்குகின்ற பேறு பெற்ற குருநாதராக இருக்கின்ற சாதகர் அனைத்து உலகங்களோடும் சேர்ந்தே இருந்து அதில் இருக்கின்ற அனைத்து உயிர்களும் செய்கின்ற புண்ணியத்தின் பயனாக அனைத்தையும் அதற்கு ஏற்றவாறு செயல் படுத்துகின்றவராக இருக்கின்றார். அது மட்டுமின்றி அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்திலும் கலந்தே இருந்து அவற்றைக் காணுகின்ற கண்களின் பார்வையாக அனைத்தையும் பார்க்க வைக்கின்றவராகவும் இருக்கின்றார். உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து உயிர்களோடும் நெருங்கி இருந்து அவற்றின் பக்குவத்திற்கு ஏற்றபடி மழை போல் அருளுகின்றவராகவும் அவரே இருக்கின்றார். இப்படி தமது சாதகத்தை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதன் மூலம் அனைத்தையும் செயல் படுத்துகின்றவராக சாதகர் இருக்கின்றார்.

பாடல் #1342

பாடல் #1342: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆமே யனைத்துயி ராகிய வம்மையுந்
தானே சகலமு மீன்றவத் தையலு
மாமே யவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளாம் புண்ணிய னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ யனைததுயி ராகிய வமமையுந
தானெ சகலமு மீனறவத தையலு
மாமெ யவனடி பொறறி வணஙகிடிற
பொமெ வினைகளாம புணணிய னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தானே சகலமும் ஈன்ற அத் தையலும்
ஆமே அவனடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகள் ஆம் புண்ணியன் ஆகுமே.

பதப்பொருள்:

ஆமே (தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர்) அனைத்து (அனைத்து உலகங்களிலும்) உயிர் (இருக்கின்ற அனைத்து உயிர்கள்) ஆகிய (ஆகவே இருக்கின்ற) அம்மையும் (இறைவியாகவும்)
தானே (அவரே) சகலமும் (அனைத்து பொருள்களையும்) ஈன்ற (உருவாக்கிய) அத் (அந்த) தையலும் (இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்தே இருக்கின்ற சக்தியாகவும்)
ஆமே (இப்படி சக்தியாகவே ஆகிவிட்ட சாதகர்) அவனடி (அவரது திருவடியை) போற்றி (இறைவனாகவே போற்றி) வணங்கிடிற் (வணங்கி வழிபடும் அடியவர்களை விட்டு)
போமே (விலகிப் போகுமே) வினைகள் (அனைத்து வினைகளும்) ஆம் (வணங்கிய அடியவர்களும்) புண்ணியன் (புண்ணியனாகவே) ஆகுமே (ஆகி விடுவார்கள்).

விளக்கம்:

பாடல் #1341 இல் உள்ளபடி மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவே ஆகிவிட்ட சாதகர் அனைத்து உயிர்களாகவே இருக்கின்ற இறைவியாகவும் ஆகி விடுவார். இறைவனோடு எப்போதும் ஒன்றாக இணைந்தே இருந்து அனைத்து உயிர்களுக்கும் வேண்டிய அனைத்து பொருள்களையும் உருவாக்கிய சக்தியாகவும் அவரே ஆகி விடுவார். இப்படி அனைத்தையும் உருவாக்குகின்ற சக்தியாகவே ஆகிவிட்ட சாதகரின் திருவடியை இறைவனாகவே போற்றி வணங்கி வழிபடும் அடியவர்களை விட்டு அனைத்து வினைகளும் விலகிப் போய் அவர்களும் புண்ணியனாகவே ஆகி விடுவார்கள்.

பாடல் #1341

பாடல் #1341: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானே கழறித் தறியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்
தானே வணங்கித் தலைவனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ கழறித தறியவும வலலனாயத
தானெ நினைததவை சொலலவும வலலனாயத
தானெ தனிநடங கணடவள தனனையுந
தானெ வணஙகித தலைவனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தானே கழறித்து அறியவும் வல்லன் ஆய்
தானே நினைத்த அவை சொல்லவும் வல்லன் ஆய்
தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.

பதப்பொருள்:

தானே (சாதகர் தமக்குள்) கழறித்து (இருக்கின்ற அனைத்து தீமைகளையும் நீக்கி விட்டு) அறியவும் (தாம் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்ள) வல்லன் (முடிந்தவர்) ஆய் (ஆகவும்)
தானே (சாதகர் தமக்குள்) நினைத்த (எண்ணிப் பார்த்து அறிந்து கொண்ட) அவை (இறை தன்மைகள் அனைத்தையும்) சொல்லவும் (குருவாக இருந்து பிறருக்கு எடுத்துக் கூற) வல்லன் (முடிந்தவர்) ஆய் (ஆகவும்)
தானே (சாதகர் தமக்குள்) தனி (இறைவன் தமக்காக தனியாக) நடம் (ஆடிய திருநடனத்தை) கண்டவள் (கண்டு ரசித்த) தன்னையும் (இறைவியையும்)
தானே (சாதகர் தமக்குள்) வணங்கித் (தரிசித்து வணங்கி) தலைவனும் (மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றார்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர் அதன் மூலம் தமக்குள் இருக்கின்ற அனைத்து தீமைகளையும் நீக்கி விட்டு தாம் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தவராக இருக்கின்றார். அதன் பயனால் சாதகர் தமக்குள் எண்ணிப் பார்த்து அறிந்து கொண்ட இறை தன்மைகள் அனைத்தையும் குருவாக வீற்றிருந்து பிறருக்கு எடுத்துக் கூற முடிந்தவராகவும் இருக்கின்றார். அதன் பயனால் இறைவன் தமக்காக தனியாக ஆடிய திருநடனத்தை கண்டு ரசித்த இறைவியையும் சாதகர் தமக்குள் தரிசித்து வணங்கவும் மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவும் இருக்கின்றார்.

திருமூலர் அபிசேகம் ஆராதனை

2022 வருட பிறப்பை முன்னிட்டு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள திருமூலர் சந்நிதியில் நடைபெற்ற அபிசேகம் மற்றும் ஆராதனை.

பாடல் #1340

பாடல் #1340: நான்காம் தந்திரம் – 15. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்
கலந்திடுங் காம வெகுளி மயக்கந்
துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வணஙகிடுந தததுவ நாயகி தனனை
நலஙகிடு நல்லுயி ரானவை யெலலாங
கலநதிடுங காம வெகுளி மயககந
துலங்கிடுஞ சொலலிய சூழவினை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடும் நல் உயிர் ஆனவை எல்லாம்
கலந்திடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ் வினை தானே.

பதப்பொருள்:

வணங்கிடும் (உயிர்கள் வணங்கிடும்) தத்துவ (நவாக்கிரி சக்கரத்தி்ல் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்கு) நாயகி (தலைவியாகவே) தன்னை (தாமும் ஆகிவிட்ட சாதகர்களுக்கு)
நலங்கிடும் (வாசனை முதலிய திரவியங்களை பூசி பூஜிக்கும்) நல் (நல்ல) உயிர் (உயிர்களாக) ஆனவை (பக்குவப்பட்ட) எல்லாம் (அனைத்து உயிர்களும்)
கலந்திடும் (தங்களோடு கலந்து இருக்கும்) காம (ஆசை) வெகுளி (கோபம்) மயக்கம் (மாயையினால் இருக்கும் மயக்கம்)
துலங்கிடும் (ஆகிய குற்றங்களும் நீங்கி விடும்) சொல்லிய (உயிர்களின் பிறவிக்கு காரணம் என்று வேதங்கள் சொல்லுகின்ற) சூழ் (உயிர்களைச் சூழ்ந்து இருக்கின்ற) வினை (வினைகளும்) தானே (நீங்கி விடும்).

விளக்கம்:

பாடல் #1339 இல் உள்ளபடி உயிர்களால் வணங்கப்படும் நிலைக்கு வந்து நவாக்கிரி சக்கரத்தி்ல் இருக்கும் சக்தியின் இயக்கத் தத்துவங்களுக்கு தலைவியாகவே தாமும் ஆகிவிட்ட சாதகர்களின் மேல் கொண்ட பக்தியினாலும் அன்பினாலும் வாசனை முதலிய திரவியங்களை பூசி பூஜிக்கும் நல்ல உயிர்களாக பக்குவப்பட்ட அனைத்து உயிர்களோடும் கலந்து இருக்கும் ஆசை, கோபம், மாயையினால் இருக்கும் மயக்கம் ஆகிய குற்றங்கள் அனைத்தும் நீங்கி விடும். அதன் பிறகு உயிர்களின் பிறவிக்கு காரணம் என்று வேதங்கள் சொல்லுகின்ற உயிர்களைச் சூழ்ந்து இருக்கின்ற வினைகளும் உயிர்களை விட்டு நீங்கி விடும்.