பாடல் #676

பாடல் #676: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.

விளக்கம்:

அணிமாவும் இலகிமாவும் கிடைத்தபின் உண்டான உண்மை ஞானமாகிய பேரறிவை உணர்த்தும் அருள் சக்தியுடன் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மாயை விலகி மறைந்திருந்த மகிமா எனும் சித்தி நமக்குக் கிடைக்கும்.

கருத்து:

உண்மை ஞானமாகிய பேரறிவும் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மகிமா எனும் சித்தி கிடைக்கும்.

பாடல் #675

பாடல் #675: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

விளக்கம்:

இலகிமா என்னும் சித்தி கிடைத்து இறைவனை தரிசித்தபின் தாமே ஒளி உடம்பாய் மாறி ஒளி உடம்போடு இருக்கப் பால் போன்ற வெண்மையான ஒளியாகி எங்கும் பரந்து இருக்கும் பேரொளியாய் உண்மைப் பொருளாகவும் உள்ள இறைவனை தரிசிக்கலாம்.

கருத்து:

இலகிமா சித்தியடைந்தபின் வெண்மையான ஒளி உடம்பாய் மாறி உண்மைப் பொருளான இறைவனை தரிசிக்கலாம்.

பாடல் #674

பாடல் #674: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற வையாண்டின் மாலகு வாகுமே.

விளக்கம்:

அணிமா என்கின்ற சக்தியானது கைவரப் பெற்ற பின்னும் விட்டுவிடாமல் யோகப் பயிற்சி செய்து முடிந்த ஐந்தாண்டு காலமும் தான் பயிற்சி செய்யும் யோகத்தின் வழியிலிருந்து மாறாது இருக்க இலகிமா என்கின்ற சித்தியும் கிடைக்கும்.

கருத்து:

அணிமா என்னும் சித்தி கிடைத்தபின் ஐந்தாண்டுகள் இடைவிடாமல் யோகப் பயிற்சி செய்தால் இலகிமா என்னும் சித்தி கிடைக்கும்.

பாடல் #673

பாடல் #673: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.

விளக்கம்:

அணிமா சக்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு யோகப் பயிற்சிகளை விடாமல் செய்து வந்தால் அணிமா சித்தியானது நிரந்தரமாகக் கைவரப் பெறும். அவ்வாறு பெற்றபின் யோகப் பயிற்சி செய்தவரின் உடல் பஞ்சைவிட மெலியதாகி இருந்தாலும் வலிமையானதாகவும் எவராலும் வெல்ல முடியாததாகவும் இருக்கும்.

கருத்து:

அணிமா சித்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு விடாமல் பயிற்சி செய்துவர நிரந்தரமாகி உடல் பஞ்சைவிட மெலியதாகி எவராலும் வெல்லமுடியாமல் இருக்கும்.

பாடல் #672

பாடல் #672: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்காமிய லோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலே ஏற்றிச் செல்வதால் கிடைக்கும் சக்தியானது நமது சிற்றறிவை மாற்றி பேரறிவைக் கொடுக்கும். அதன்பின் அந்நாக்கில் அமுதம் ஊறியவுடன் தீமைகளை அகற்றி யோகத்திலிருக்க வல்லவர்களுக்கு அவர்கள் எந்த உலகத்திற்குச் சென்றாலும் அதைச் சார்ந்திருக்கக்கூடிய நல்ல உடம்பு கிடைக்கும். அவ்வாறு வெவ்வேறு உலகங்களுக்கு ஏற்ப உடலை மாற்ற முடிவதே அணிமா என்னும் சித்தியாகும்.

கருத்து:

குண்டலினி சக்தியை சகஸ்ரதளத்திற்கு ஏற்றுபவர்களுக்கு எல்லா உலகத்தையும் சார்ந்திருக்கக்கூடிய உடல் என்னும் அணிமா சித்தி கிடைக்கும்.

பாடல் #671

பாடல் #671: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இருக்கல்பர காட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே.

விளக்கம்:

அட்டமா சித்திகளோடு அழகுமிகுந்த பரம்பொருளான இறைவனும் தனக்குள் வரப் பெற்றவரே சித்தர் ஆவார். இவர்கள் தாம் இருக்கும் இடத்திலிருந்தே பரலோகத்தோடு ஒன்றி தம் உள்ளத்துள் பரம்பொருளான இறைவனை தரிசிக்கக்கூடியவர்கள். இவ்வருள் பெற்றவர்கள் இருக்கும் இடம் தேடி அட்டமா சித்திகளைச் சார்ந்த பல சித்திகளும் தானே வந்து சேரும்.

கருத்து:

அட்டமா சித்திகளோடு இறைவனையும் தமக்குள் பெற்றவரே சித்தர் ஆவார்.

பாடல் #670

பாடல் #670: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

விளக்கம்:

அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்பவர்களுக்கு எட்டு சித்திகள் கிடைப்பது மட்டுமன்றி ஆத்ம அறிவு முதல் அண்டசராசரங்கள் வரை அறிந்துகொள்ள முடியும். நமக்குள் இருக்கும் இறைவனது அருளால் அந்த இறைவனின் சக்தியானது நமக்குள்ளே எட்டுவித சித்திகளையும் உணர்த்திவிடும்.

கருத்து:

அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்தால் இறைவனின் அருளால் எட்டுவித சித்திகளையும் பெற்று பேரறிவையும் அறியலாம்.

பாடல் #669

பாடல் #669: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.

விளக்கம்:

இயல்பாக எளிதில் அடங்காத மூச்சுக் காற்று அட்டாங்க யோகத்திலுள்ள பிராணாயாமத்தை முறைப்படி செய்வதன் மூலம் அடங்குவதோடு மட்டுமல்லாது எட்டுவிதமான சித்திகளும் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அதன் பின்னர் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தி அக்கினிப் பிழம்பாய் கிளம்பி நடு நாடியாகிய சுழுமுனை வழியே மேலே சென்று சகஸ்ரதளத்தை அடைந்து பேரறிவாகிய இறைவனை உணரலாம்.

கருத்து:

பேரறிவான இறைவனை உணர்வதற்கும் எட்டுவித சித்திகளை அடைவதற்கும் பிராணாயமம் உதவும்.

பாடல் #668

பாடல் #668: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.

விளக்கம்:

பாடல் #667 ல் உள்ளபடி உயிருக்குள் இறைவன் ஜோதியாய் விளங்கினால் அவ்வுயிருக்குக் கிடைக்கக் கூடிய எட்டுவித சித்திகளான, 1. அணிமா – அணுவைப் போல் உடலை சிறிதாக்கும் ஆற்றல். 2. மகிமா – மலையைப் போல் உடலை பெரிதாக்கும் ஆற்றல். 3. கரிமா – மலை போல எதனாலும் அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்கும் ஆற்றல். 4. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் உடலை மாற்றி எங்கும் செல்லும் ஆற்றல். 5. பிராப்தி – தூரத்திலிருப்பதையும் இருக்கும் இடத்திலேயே பார்க்கவும், மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல். 6. பிராகாமியம் – எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல். 7. ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல். 8. வசித்துவம் – ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கலந்து அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் ஆற்றல் ஆகியவனவாகும்.

கருத்து:

உயிருக்குள் இறைவன் ஜோதியாய் விளங்கினால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

பாடல் #667

பாடல் #667: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

விளக்கம்:

பாடல் #666 ல் உள்ளபடி உயிரைத் தேடி வந்த இறைவன் சுழுமுனை நாடியின் உள்ளே ஓம் எனும் நாதமாய் நின்று இறைவனை அடையத் தடையாயிருக்கின்ற மாயை, அகங்காரம், ஆணவம், காமம், குரோதம் ஆகிய ஐந்துவித பகைவர்களையும் அவன் அருளால் அடக்கிவிட்டு என்றும் அணையாமல் வெளிச்சம் கொடுக்கும் விளக்குபோல என்றும் ஜோதியாய் விளங்குவான்.

கருத்து:

உயிரோடு கலந்த இறைவன் அவனை அடையத் தடையாயிருக்கின்ற ஐந்துவித பகைவர்களை அடக்கி என்றும் அணையாத ஜோதியாய் இருப்பான்.