பாடல் # 790

பாடல் # 790 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

விளக்கம் :

வெள்ளி திங்கள் புதன் கிழமைகளில் இட நாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளில் வல நாடி வழியே மூச்சு இயங்க வேண்டும். வளர்பிறை வியாழக் கிழமைகளில் இடநாடியிலும் தேய்பிறை வியாழக் கிழமைகளில் வலது நாடியிலும் மூச்சு இயங்க வேண்டும். இவ்வாறு இயங்குவது உடல் நலத்திற்கு ஏற்ற இயற்கையான பிராண இயக்கமாகும்.

பாடல் # 791

பாடல் # 791 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

விளக்கம் :

இயல்பாகவோ அல்லது பயிற்சியினாலோ திங்கள் புதன் வெள்ளிக் கிழமைகளில் மூச்சு இடைகலை வழியாக நடைபெற்றால் ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு எந்த ஒரு குறையும் அழிவும் உண்டாகாது என்று அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் அனைவருக்கும் மகிழ்ந்து அருளினார்.

280 Har Har Mahadev Full HD Photos 1080p Wallpapers Download Free Images (202

பாடல் # 792

பாடல் # 792 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

செவ்வாய் வியாழன் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

விளக்கம் :

செவ்வாய்க் கிழமை தேய்பிறை வியாழக்கிழமை சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்க நாடி வழியே அறிந்து கொள்ளும் யோகி இறைவன் ஆவான். இந்த நாட்களில் மூச்சு இட நாடியில் நடந்தால் அதை மாற்றி வல நாடியில் புரிய வேண்டும். அப்போது ஆனந்தம் கூடும்.

பாடல் # 793

பாடல் # 793 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

விளக்கம் :

சந்திரனும் சூரியனும், இடகலை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். இடகலை வழியே ஏறிப் பிங்கலை வழியே இறங்கும். பிங்கலை வழியே ஏறி இடகலை வழியே இறங்கும். நடு நாடியில் மூச்சு ஊர்ந்து போகும். நாசிகள் வழியே இயங்கும் மூச்சில் சிவம் உள்ளது என்பதை அறிந்து தெளியலாம்.

Om Namah Shivay — Shiva lingam

பாடல் # 794

பாடல் # 794 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக யோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.

விளக்கம் :

பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். இரு பக்கமும் கணமாகவும் மெல்லியதாகவும் மாறி மாறி பிராணன் ஒடுவது இயற்கையாக உள்ளது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ளலாம்.

பாடல் # 795

பாடல் # 795 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

விளக்கம் :

மூச்சுக்காற்று நடுநாடியாகிய சுழுமுனையில் நிற்காமல் இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் மாறி மாறி இயங்குகின்ற போது உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் கூடுகின்ற நடுநாடியின் சுழுமுனையில் குண்டலினியோடு சேர்க்க நடுநாடியின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.

பாடல் # 796

பாடல் # 796 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயுவு நாளும் முகுர்த்தமு மாமே.

விளக்கம் :

யோகிகள் உள் நோக்கி தியானம் செய்து ஆராயும் பொருள் முழுமுதற்சிவனாகும், ஆராய்ந்த சிவன் நம் அழகான கண் மலர்களுக்கு மேலே உள்ளான். பதினாறு மாத்திரை அளவு செய்யும் மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை மாற்றி அமைத்தால் அந்த சிவனை நன்கு உணரலாம். அவ்வாறு உணர்ந்தால் வாழ் நாட்களைக் கூறுபடுத்தி வழங்கும் நாள், கிழமை, மாதம், ஆண்டு முகூர்த்தம் ஆகியவை காரணப்பொருளாக இருந்து உயிரின் ஆயுளை அதிகரிக்கும்.