பாடல் #1527

பாடல் #1527: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இருவினை நேரொப்பி லின்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருவினை நெரொபபி லினனருட சததி
குருவென வநது குணமபல நீககித
தருமெனு ஞானததாற றனசெய லறறால
திரிமலந தீர்நது சிவனவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரு வினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.

பதப்பொருள்:

இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) நேர் (சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள்) ஒப்பு (தனக்கு ஒப்பானது என்று) இல் (ஒன்றும் இல்லாதவளாகிய) இன் (இனிமையான) அருள் (பேரருளைக் கொண்ட) சத்தி (இறைவியானவள்)
குரு (குரு) என (எனும் நிலையில்) வந்து (வந்து) குணம் (சாதகருக்குள் நன்மை தீமை ஆகிய தன்மைகள்) பல (பல விதமாக இருப்பவை அனைத்தையும்) நீக்கி (நீக்கி விட்டு)
தரும் (அவளது பெரும் கருணையினால் தரப்படுவது) எனும் (என்று அறியப்படுகின்ற) ஞானத்தால் (பேரறிவு ஞானத்தால்) தன் (சாதகர் தன்னுடைய) செயல் (செயல் என்று ஒன்றும்) அற்றால் (இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால்)
திரி (சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான) மலம் (மலங்களும்) தீர்ந்து (நீங்கப் பெற்று) சிவன் (சிவம் எனும் பரம் பொருளாகவே) அவன் (சாதகரும்) ஆமே (ஆகி விடுவார்).

விளக்கம்:

நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள் தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள் குரு எனும் நிலையில் வந்து சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற அனைத்து தன்மைகளையும் நீக்கி விட்டு, அவளது பெரும் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தை தந்து அருளுவாள். அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால் சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று சிவம் எனும் பரம் பொருளாகவே சாதகரும் ஆகி விடுவார்.

பாடல் #1528

பாடல் #1528: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இரவும் பகலு மிறந்த விடத்தே
குரவன் செய்கின்ற குழலியை யுன்ன
யரவஞ் செய்யாம லவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இரவும பகலு மிறநத விடததெ
குரவன செயகினற குழலியை யுனன
யரவஞ செயயாம லவளுடன செரப
பரிவொனறி லாளும பராபரை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவன் செய்கின்ற குழலியை உன்ன
அரவம் செய்யாமல் அவளுடன் சேர
பரிவு ஒன்றில் ஆளும் பரா பரை தானே.

பதப்பொருள்:

இரவும் (இரவு) பகலும் (பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும்) இறந்த (உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற) இடத்தே (சாதகரின் உள்ளத்தில்)
குரவன் (குரவம் எனும் மலரை) செய்கின்ற (பின்னியிருக்கின்ற) குழலியை (கூந்தலைக் கொண்ட இறைவியை) உன்ன (அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே)
அரவம் (எந்த விதமான ஆரவாரமும்) செய்யாமல் (செய்யாமல்) அவளுடன் (அவளோடு) சேர (சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால்)
பரிவு (தனது மாபெரும் கருணை எனும்) ஒன்றில் (அருளினால்) ஆளும் (சாதகரை ஆட்கொண்டு அருளுவாள்) பரா (பராவாகிய இறைவனும்) பரை (பரையாகிய இறைவியும்) தானே (சேர்ந்து இருக்கும் அருள் சக்தி).

விளக்கம்:

இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற சாதகரின் உள்ளத்தில் குரவம் எனும் மலரை பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால் தனது மாபெரும் கருணை எனும் அருளினால் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள் பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் அருள் சக்தி.

பாடல் #1529

பாடல் #1529: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்
சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்
தூனை விளக்கி யுடனிருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாலை விளககு மதியமு ஞாயிறுஞ
சால விளககுந தனிசசுட ரணணலும
ஞாலம விளககிய நாதனென னுளபுகுந
தூனை விளககி யுடனிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனி சுடர் அண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே.

பதப்பொருள்:

மாலை (அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற) விளக்கும் (விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும்) மதியமும் (இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும்) ஞாயிறும் (பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும்)
சால (இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற) விளக்கும் (தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும்) தனி (தனிப் பெரும்) சுடர் (சுடராக இருக்கின்ற) அண்ணலும் (இறைவனின் ஜோதி உருவமாகவே பார்த்து உணர்ந்தால்)
ஞாலம் (உலகத்தை) விளக்கிய (விளக்கி அருளுகின்ற) நாதன் (தலைவனாகிய இறைவன்) என் (எமது) உள் (உடலுக்குள்) புகுந்து (புகுந்து வந்து)
ஊனை (எமது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும்) விளக்கி (விளக்கி யாம் அறியும் படி செய்து) உடன் (எம்முடன் எப்போதும்) இருந்தானே (இருப்பான்).

விளக்கம்:

அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும், இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால், உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து, அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும் விளக்கி அவர் அறியும் படி செய்து அவருடன் எப்போதும் இருப்பான்.