பாடல் #1389: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
காரணி சத்திக ளைம்பத் திரண்டெனக்
காரணி கன்னிக ளைம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
காரணி சததிக ளைமபத திரணடெனக
காரணி கனனிக ளைமபத திருவராயக
காரணி சககரத துளளெ கரநதெஙகுங
காரணி தனனரு ளாகிநின றாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
காரணி சத்திகள் ஐம் பத்து இரண்டு என
காரணி கன்னிகள் ஐம் பத்து இருவராய்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே.
பதப்பொருள்:
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) சத்திகள் (சக்திகளானது) ஐம் (ஐந்தும்) பத்து (பத்தும்) இரண்டு (இரண்டும் கூட்டி மொத்தம் ஐம்பத்து இரண்டு) என (பேர்களாக பிரிந்து இருக்கின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) கன்னிகள் (என்றும் இளமையுடன் சிறிதும் அருளில் குறைவின்றி இருக்கின்ற சக்திகள்) ஐம் (ஐந்தும்) பத்து (பத்தும்) இருவராய் (இரண்டும் கூட்டி மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) சக்கரத்து (நவாக்கிரி சக்கரத்திற்கு) உள்ளே (உள்ளேயே நின்று) கரந்து (சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும் இனி வரும் பிறவிகளுக்கு காரணமாக இருக்கின்ற கர்மங்களையும்) எங்கும் (முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்து விடுகின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) தன் (இறைவியே தனது) அருள் (பேரருளால்) ஆகி (ஐம்பத்து இருவரும் ஒன்றாக ஆகி) நின்றாளே (நிற்கின்றாள்).
விளக்கம்:
பாடல் #1388 இல் உள்ளபடி சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற சக்திகளானது மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்த சக்திகள் என்றும் இளமையுடன் சிறிதும் அருளில் குறைவின்றி ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளேயே நின்று சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும் இனி வரும் பிறவிகளுக்கு காரணமாக இருக்கின்ற கர்மங்களையும் முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்து விடுகின்றனர். சாதகர் இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற இறைவியே தனது பேரருளால் இந்த ஐம்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக ஆகி நிற்கின்றாள்.