பாடல் #996: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
யம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாக வுணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.
விளக்கம்:
‘ந’ முதல் ‘ய’ வரை இருக்கும் ‘நமசிவாய’ ஐந்தெழுத்து மந்திரத்தை நாவினில் எப்பொழுதும் உச்சரிப்பவர்கள் பாடல் #995 இல் உள்ள உமாபதி சக்கரத்தின் நடு அறையை சுற்றியுள்ள எட்டு அறைகளிலும் இருக்கும் ‘சி’ எழுத்துக்கு முன்பு ‘ய’ எழுத்தைச் சேர்த்து ‘யசி’ என்று எழுதி அதை மூச்சுக்காற்றோடு சேர்ந்து தியானித்து உணர்பவர்களின் தலை உச்சியில் பிரணவத்தின் தலைவனாகிய இறைவன் சாதகரோடு வீற்றிருப்பான்.