பாடல் #994: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஆறெழுத் தாவது வாறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.
விளக்கம்:
‘ஓம் நமசிவாய’ என்னும் ஆறு எழுத்து இறைவனை அடையும் ஆறுவித வழிகளின் விரிவாகும். சமஸ்கிருத எழுத்தில் காயத்திரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை (புள்ளி வைத்த மூன்று எழுத்துக்கள் தவிர்த்து) நான்கு முறை செபிப்பது ‘ஓம் நமசிவாய’ எனும் ஆறு எழுத்துக்களை ஒரு முறை செபிப்பதற்கு சமமாகும். காயத்ரி மந்திரத்திலுள்ள முதல் எழுத்தாகிய ‘ஓம்’ எனும் மூல மந்திரத்தையும் காயத்ரி மந்திரத்தையும் பிரித்து அறிந்து உணர வல்லவர்கள் பிறவி இல்லாத நிலையை அடைவார்கள்.
குறிப்பு: சமயங்கள் என்பதன் பொருள் இறைவனை அடைவதற்கு முறைப்படி கடைபிடித்து செல்லும் வழிகளாகும்.
இறைவனை அடையும் ஆறுவித வழிகள்:
- தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
- செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
- பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
- சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
- ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
- புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்