பாடல் #930: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஆறெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறுஇட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
விளக்கம்:
திருவம்பலச் சக்கரத்தில் உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களில் நாற்பத்து எட்டாவதாக உள்ள ‘ஸ’ எழுத்துடன் ஆறாவதாக உள்ள ‘ஊ’ எழுத்தை சேர்த்து ‘ஸூம்’ என்ற பீஜ மந்திரமாகவும், ‘ஸ’ எழுத்துடன் பதினான்காவதாக உள்ள ‘ஒள’ எழுத்தையும் சேர்த்து ‘ஸெள’ என்ற பீஜ மந்திரமாகவும் சேர்த்துக் கொண்டு அதற்கு முன்பு ஒளியும் ஒலியுமாகிய ஓங்கார மந்திரத்தையும் அதற்கு பின்பு ‘சிவாயநம’ மந்திரத்தையும் சேர்த்து ‘ஓம் ஸூம் ஸெள சிவாயநம’ என்று உச்சரித்தால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் தனித்தனியாகப் பிரிந்து சென்றுவிடும்.