பாடல் #1414: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
பேதை யிவளுக்குப் பெண்மை யழகாகுந்
தாதை யிவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை யிவளுக்கு மண்ணுந் திலதமாய்க்
கோதையர் சூழக் குவிந்திடுங் காணுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பெதை யிவளுககுப பெணமை யழகாகுந
தாதை யிவளுககுத தாணுவுமாய நிறகும
மாதை யிவளுககு மணணுந திலதமாயக
கொதையர சூழக குவிநதிடுங காணுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்கு தாணுவும் ஆய் நிற்கும்
மாதை இவளுக்கு மண்ணும் திலதம் ஆய்
கோதையர் சூழ குவிந்திடும் காணுமே.
பதப்பொருள்:
பேதை (குழந்தை போல இருக்கின்ற) இவளுக்கு (இறைவிக்கு) பெண்மை (சக்தியின் பரிபூரணமே) அழகு (பேரழகாக) ஆகும் (இருக்கின்றது)
தாதை (அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும்) இவளுக்கு (இறைவிக்கு) தாணுவும் (உறுதுணை) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்கின்றார்)
மாதை (இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும்) இவளுக்கு (இறைவிக்கு) மண்ணும் (அழகாக பூசிய) திலதம் (குங்குமத் திலகம்) ஆய் (போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க)
கோதையர் (மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும்) சூழ (அவளைச் சுற்றி) குவிந்திடும் (ஒன்றாக கூடி இருப்பதை) காணுமே (சாதகரால் தரிசிக்க முடியும்).
விளக்கம்:
பாடல் #1413 இல் உள்ளபடி குழந்தை போல இருக்கின்ற இறைவிக்கு சக்தியின் பரிபூரணமே பேரழகாக இருக்கின்றது. அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவனும் இறைவிக்கு உறுதுணையாக நிற்கின்றார். இறைவனோடு சரிபாதியான பெண் பாகமாய் இருக்கும் இறைவிக்கு அழகாக பூசிய குங்குமத் திலகம் போலவே நடுவில் அரசி போல் வீற்றிருக்க மலர்களைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய சக்திகள் அனைவரும் அவளைச் சுற்றி ஒன்றாக கூடி இருப்பதை சாதகரால் தரிசிக்க முடியும்.
மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது