பாடல் #1387: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
நாவுக்கு நாயகி நன்மணிப் பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாள்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்த
ளாவுக்கு நாயகி யங்கமர்ந் தாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நாவுககு நாயகி நனமணிப பூணாரம
பூவுககு நாயகி பொனமுடி யாடையாள
பாவுககு நாயகி பாலொதத வணணதத
ளாவுககு நாயகி யஙகமரந தாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆள்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே.
பதப்பொருள்:
நாவுக்கு (நாக்கிற்கு / நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற பீஜ மந்திரங்களை சொல்லும் சாதகரின் வாக்கிற்கு) நாயகி (தலைவியான இறைவி) நல் (நல்ல / நன்மையைக் கொடுக்கும்) மணி (நவரத்தினங்களை / பிரகாசத்தினால் ஈர்க்கின்ற) பூண் (பதித்து இருக்கும் / தேஜஸை) ஆரம் (மாலையை அணிந்து இருக்கின்றாள் / கொண்டு விளங்குகின்றாள்)
பூவுக்கு (மலர் வடிவான / போல மென்மையான சக்கரத்திற்கு) நாயகி (தலைவியான இறைவி) பொன் (தங்கம் போல் தகதகக்கும் / சாதகருக்கு உள்ளிருந்து பிரகாசமாக) முடி (தலை முடியிலிருந்து கீழ் வரை) ஆடை (ஆடையை / சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக) ஆள் (அணிந்து இருக்கின்றாள் / வெளிப்பட்டு வருவாள்)
பாவுக்கு (பாடல்களுக்கு / நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற மந்திரத்தின்) நாயகி (தலைவியான இறைவி) பால் (பாலைப் / சாதகரின் சாதகத் தன்மைக்கு) ஒத்த (போன்ற / ஏற்ற) வண்ணத்தள் (வெண்மையான நிறம் கொண்டு இருக்கின்றாள் / விதத்தில் அருளுபவளாக இருக்கின்றாள்)
ஆவுக்கு (ஆன்மாவிற்கு) நாயகி (தலைவியான அவளே) அங்கு (சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே) அமர்ந்தாளே (வீற்றிருக்கின்றாள்).
விளக்கம்:
நாக்கிற்கு தலைவியான இறைவி நல்ல நவரத்தினங்களை பதித்து இருக்கும் மாலையை அணிந்து இருக்கின்றாள். மலர் வடிவான சக்கரத்திற்கு தலைவியான இறைவி தலை முடியிலிருந்து கீழ் வரை தங்கம் போல் தகதகக்கும் ஆடையை அணிந்து இருக்கின்றாள். பாடல்களுக்கு தலைவியான இறைவி பாலைப் போன்ற வெண்மையான நிறம் கொண்டு இருக்கின்றாள். ஆன்மாவிற்கு தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கின்றாள்.
உட் கருத்து:
நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற பீஜ மந்திரங்களை சொல்லும் சாதகரின் வாக்கிற்கு தலைவியான இறைவி நன்மையைக் கொடுக்கும் பிரகாசத்தினால் ஈர்க்கின்ற தேஜஸை கொண்டு விளங்குகின்றாள். மலர் போல மென்மையான சக்கரத்திற்கு தலைவியான இறைவி சாதகருக்கு உள்ளிருந்து பிரகாசமாக தலை முடியிலிருந்து கீழ் வரை சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக வெளிப்பட்டு வருவாள். நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற மந்திரத்தின் தலைவியான இறைவி சாதகரின் சாதகத் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அருளுபவளாக இருக்கின்றாள். ஆன்மாவிற்கு தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கின்றாள்.