பாடல் #1356: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
கேடில்லைக் காணுங் கிளரொளி கண்டபி
னாடில்லைக் காணும் நாமுத லற்றபின்
மாடில்லைக் காணும் வரும்வழி கண்டபின்
காடில்லைக் காணுங் கருத்துற் றிடத்துக்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கெடிலலைக காணுங கிளரொளி கணடபி
னாடிலலைக காணும நாமுத லறறபின
மாடில்லைக காணும வருமவழி கணடபின
காடிலலைக காணுங கருததுற றிடததுககெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின்
மாடு இல்லை காணும் வரும் வழி கண்ட பின்
காடு இல்லை காணும் கருத்து உற்ற இடத்துக்கே.
பதப்பொருள்:
கேடு (சாதகர் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய இடங்களில் எந்தவிதமான கெடுதல்களும்) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) கிளர் (தமக்குள்ளிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்து வருகின்ற) ஒளி (பேரொளியை) கண்ட (தரிசித்த) பின் (பிறகு)
நாடு (சாதகர்கள் தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இந்த உலகத்தில்) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) நாள் (நாள் திதி) முதல் (முதலாகிய) அற்ற (காலக் குறிப்புகள் அனைத்தும் இல்லாமல் போகும்) பின் (அதன் பிறகு)
மாடு (உடலைச் சார்ந்து இருக்க வேண்டிய எந்த தேவையும் சாதகருக்கு) இல்லை (இல்லாமல் இருப்பதைக்) காணும் (காண்பார்கள்) வரும் (இறைவனை அடைய வேண்டும் என்று அவரை நாடி வருகின்ற உயிர்களுக்கு) வழி (இறைவனை அடையும் வழிகளை) கண்ட (தமக்குள் கண்டு கொண்ட) பின் (பிறகு தகுதியானவர்களுக்கு கொடுப்பார்கள்)
காடு (இறைவனை அடைய தடையாக இருக்கின்ற கொடிய வினைகள் சூழ்ந்து இருக்கின்ற காடுகளும்) இல்லை (தம்மை நாடி வருகின்ற உயிர்களுக்கு இல்லாமல் போவதை) காணும் (காண்பார்கள்) கருத்து (சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை) உற்ற (அனுப்பிய) இடத்துக்கே (இடத்தில் எல்லாம்).
விளக்கம்:
பாடல் #1355 இல் உள்ளபடி சாதகர்கள் அனுப்பிய மந்திர அதிர்வலைகளைப் பெற்றவர்களின் உடலுக்கு எந்தவிதமான கெடுதல்களும் இல்லாமல் நன்றாக இருப்பதை சாதகர்களால் காண முடியும். சாதகர்கள் தமக்குள்ளிருக்கும் நவாக்கிரி சக்கரத்திலிருந்து உத்வேகமாக எழுந்து வருகின்ற பேரொளியை தரிசித்த பிறகு தமது உடலுக்குத் தேவையான இடம் என்ற ஒன்றும் இந்த உலகத்தில் இல்லாமல் போவதைக் காண்பார்கள். அதன் பிறகு வருடம் மாதம் நாள் மணி நிமிஷம் வினாடி நொடி ஆகிய காலத்தைக் குறிக்கின்ற அனைத்தும் இல்லாமல் போகும். சாதகர்களும் தமது உடலைச் சார்ந்து இருக்க வேண்டிய எந்த தேவையும் இல்லாமல் இருப்பதைக் காண்பார்கள். அதன் பிறகு இறைவனை அடைய வேண்டும் என்று சாதகரை நாடி வருகின்ற உயிர்களுக்கு இறைவனை அடையும் வழிகள் எது எது என்று தமக்குள் கண்டு அறிந்து கொண்டு அவற்றை தகுதியானவர்களுக்கு கொடுப்பார்கள். சாதகரின் எண்ணங்களின் மூலம் தம்மைச் சுற்றி மந்திர அதிர்வலைகளை அனுப்பிய எல்லா இடத்திலும் இறைவனை அடைய வேண்டும் என்று அவரை நாடி வருகின்ற உயிர்களைச் சுற்றி காடு போல சூழ்ந்து இருக்கின்ற கொடிய வினைகள் இல்லாமல் போவதையும் காண்பார்கள்.