பாடல் #1352: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெய்யக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
காணலு மாகுங கலநதுயிர செயவன
காணலு மாகுங கருதது ளிருநதிடிற
காணலு மாகுங கலநது வழிசெயயக
காணலு மாகுங கருததுற நிலலெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய்யக்
காணலும் ஆகும் கருத்து உற நில்லே.
பதப்பொருள்:
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (இறைவி ஒன்றாகக் கலந்து) உயிர் (உயிர்களோடு நின்று) செய்வன (செய்கின்ற அனைத்து செயல்களையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (உயிர்களின் எண்ணங்களுக்கு) உள் (உள்ளே) இருந்திடில் (இறைவி இருக்கின்ற தன்மையையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று) வழி (அவற்றுக்கு ஏற்ற நல் வழியில்) செய்யக் (செல்ல வைப்பதையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (ஆகவே உங்களது எண்ணங்களில்) உற (எப்போதும் இறைவியை வைத்து) நில்லே (தியானித்து இருங்கள்).
விளக்கம்:
பாடல் #1351 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் இறைவியானவள் உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று செய்கின்ற அனைத்து செயல்களையும் தரிசிக்க முடியும். அது மட்டுமின்றி உயிர்களின் எண்ணங்களுக்கு உள்ளே இறைவி இருக்கின்ற தன்மையையும் தரிசிக்க முடியும். அது போலவே உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று அவற்றுக்கு ஏற்ற நல் வழியில் இறைவி செல்ல வைப்பதையும் தரிசிக்க முடியும். ஆகவே உங்களது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருங்கள்.