பாடல் #1336: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
கண்டவிச் சக்கர நாவிலெ ழுந்திடிற்
கொண்டவிம் மந்திரங் கூத்தன் குறியதா
மன்றினுள் வித்தையு மானிடர் கையதாம்
வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கணடவிச சககர நாவிலெ ழுநதிடிற
கொணடவிம மநதிரங கூததன குறியதா
மனறினுள விததையு மானிடர கையதாம
வெனறிடும வையக மெலலியல மெவியெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கண்ட இச் சக்கரம் நாவில் எழுந்திடில்
கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறி அதாம்
மன்றின் உள் வித்தையும் மானிடர் கை அதாம்
வென்றிடும் வையகம் மெல் இயல் மேவியே.
பதப்பொருள்:
கண்ட (சாதகர்கள் தரிசித்த இறைவியானவள் வீற்றிருக்கும்) இச் (இந்த) சக்கரம் (நவாக்கிரி சக்கரம்) நாவில் (சாதகர்களின் நாக்குக்குள்ளும்) எழுந்திடில் (எழுந்து விட்டால்)
கொண்ட (சாதகர்கள் எடுத்துக் கொண்ட) இம் (இந்த) மந்திரம் (மந்திரங்களே) கூத்தன் (திருநடனம் புரிகின்ற இறைவனின்) குறி (திருவுருவத்தைக் குறிக்கின்ற) அதாம் (குறியாகவே இருக்கும்)
மன்றின் (குருகுலங்களில்) உள் (இருந்து கற்றுக் கொண்ட) வித்தையும் (வித்தைகளாக) மானிடர் (மானிடர்களின்) கை (கைகளில்) அதாம் (இருக்கின்ற அனைத்து விதமான வித்தைகளையும்)
வென்றிடும் (வென்று) வையகம் (உலகத்திலுள்ள அனைத்தையுமே) மெல் (மென்மையான) இயல் (இயல்பைக் கொண்ட இறைவியோடு) மேவியே (ஒன்றாகச் சேர்ந்திருந்து வெற்றி பெறலாம்).
விளக்கம்:
பாடல் #1335 இல் உள்ளபடி சாதகர்கள் தரிசித்த இறைவியானவள் வீற்றிருக்கும் இந்த நவாக்கிரி சக்கரம் சாதகர்களின் நாக்குக்குள்ளும் எழுந்து விட்டால் சாதகர்கள் எடுத்துக் கொண்ட இந்த நவாக்கிரி சக்கரத்திலுள்ள மந்திரங்களே திருநடனம் புரிகின்ற இறைவனின் திருவுருவத்தைக் குறிக்கின்ற குறியாகவே இருக்கும். அதன் பிறகு உலகத்திலுள்ள மனிதர்களெல்லாம் தங்களின் குருகுலங்களில் இருந்து கற்றுக் கொண்டு கைகளில் வைத்திருக்கும் அனைத்து விதமான வித்தைகளையும் மென்மையான இயல்பைக் கொண்ட இறைவியோடு ஒன்றாகச் சேர்ந்திருந்தே சாதகர்கள் வெற்றி கொள்ள முடியும்.
கருத்து:
நவாக்கிரி சக்கரத்திலுள்ள மந்திங்களை சாதகர் கைவரப்பெற்றால் உலகத்திலுள்ள எந்த வித்தைகளையும் இறைவியின் துணைகொண்டு வெற்றி பெறலாம்.