பாடல் #1399: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
எண்ணமர் சத்திகள் நாற்பத்தி னாலுட
னெண்ணமர் சத்திகள் நாற்பத்தி னால்வரா
மெண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவ
ளெண்ணிய வெண்ணங் கடந்துநின் றாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
எணணமர சகதிகள நாறபததி னாலுட
னெணணமர சததிகள நாறபததி னாலவரா
மெணணிய பூவித ளுளளெ யிருநதவ
ளெணணிய வெணணங கடநதுநின றாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
எண் அமர் சத்திகள் நால் பத்து நால் உடன்
எண் அமர் சத்திகள் நால் பத்து நால்வர் ஆம்
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே.
பதப்பொருள்:
எண் (சாதகரின் எண்ணத்தில்) அமர் (அமர்ந்து இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) நால் (நான்கும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் சேர்த்து மொத்தம் நாற்பத்து நான்கு சக்திகளாக இருக்கின்றன) உடன் (அவற்றோடு)
எண் (சாதகரின் எண்ணத்தில்) அமர் (அமர்ந்து இருக்கின்ற) சத்திகள் (சக்திகள்) நால் (நான்கும்) பத்து (பத்தும்) நால்வர் (நான்கும் சேர்த்து மொத்தம் நாற்பத்து நான்கு) ஆம் (பேர்களாகவே இருக்கின்றனர்)
எண்ணிய (சாதகரும் எண்ணிக் கொண்டு இருக்கின்ற) பூ (கழுத்திலிருந்து அடிவயிறு வரை உள்ள விசுக்தி [பதினாறு இதழ்கள்], அநாகதம் [பன்னிரண்டு இதழ்கள்], மணிப்பூரகம் [பத்து இதழ்கள்], சுவாதிட்டானம் [ஆறு இதழ்கள்] ஆகிய நான்கு சக்கரங்களில் இருக்கின்ற) இதழ் (மொத்தம் நாற்பத்து நான்கு இதழ்களுக்கு) உள்ளே (உள்ளே) இருந்தவள் (இருக்கின்ற சக்திகளாக இறைவியே இருக்கின்றாள்)
எண்ணிய (சாதகரும் அந்த சக்திகள் அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கின்ற) எண்ணம் (தியானத்தின் எண்ணங்களையும்) கடந்து (தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியாக) நின்றாளே (இறைவி நிற்கின்றாள்).
விளக்கம்:
பாடல் #1398 இல் உள்ளபடி தன்னைச் சுற்றி பாதுகாப்பாக இருக்கின்ற இறைவியையே எண்ணி தியானத்தில் இருக்கின்ற சாதகரின் எண்ணத்தில் அமர்ந்து இருக்கின்ற சக்திகள் மொத்தம் நாற்பத்து நான்கு பேர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நாற்பத்து நான்கு பேரும் சாதகரின் கழுத்திலிருந்து அடிவயிறு வரை உள்ள விசுக்தி [பதினாறு இதழ்கள்], அநாகதம் [பன்னிரண்டு இதழ்கள்], மணிப்பூரகம் [பத்து இதழ்கள்], சுவாதிட்டானம் [ஆறு இதழ்கள்] ஆகிய நான்கு சக்கரங்களில் இருக்கின்ற மொத்தம் நாற்பத்து நான்கு இதழ்களுக்கு உள்ளே இருக்கின்றார்கள். இந்த நாற்பத்து நான்கு பேர்களின் சக்திகளாகவும் இறைவியே இருக்கின்றாள். சாதகரும் இந்த நாற்பத்து நான்கு சக்திகளும் எண்ணிக் கொண்டு இருக்கின்ற தியானத்தின் எண்ணங்கள் அனைத்தையும் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியாக இறைவி நிற்கின்றாள்.