பாடல் #1339: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
பகையில்லைக் கௌமுத லைந்து மேலாகு
நகையில்லைச் சக்கர நன்றறி வார்க்குத்
தொகையில்லைச் சொல்லிய பல்லுயி ரெல்லாம்
வகையில்லை யாக வணங்கிடுந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பகையிலலைக கௌமுத லைநது மெலாகு
நகையிலலைச சககர நனறறி வாரககுத
தொகையிலலைச சொலலிய பலலுயி ரெலலாம
வகையிலலை யாக வணஙகிடுந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பகை இல்லை கௌ முதல் ஐந்தும் மேல் ஆகும்
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு
தொகை இல்லை சொல்லிய பல் உயிர் எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.
பதப்பொருள்:
பகை (இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற எதுவும்) இல்லை (சாதகருக்கு இல்லை) கௌ (நிலம்) முதல் (முதலாகிய) ஐந்தும் (ஐந்து பூதங்களால் ஆகிய அவரது உடலும்) மேல் (மேன்மை) ஆகும் (நிலை பெறும்)
நகை (இந்த உலகத்தில் இழிவானது என்று அறியப்படுகின்ற எதுவும்) இல்லை (இல்லாமல் போய்விடும்) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) நன்று (தமக்குள் மிகவும் நன்றாக) அறிவார்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
தொகை (ஒரு கூட்டமாகவும்) இல்லை (இல்லாமல்) சொல்லிய (சொல்லப்படுகின்ற) பல் (அனைத்து வகையான) உயிர் (உயிர்கள்) எல்லாம் (எல்லாவற்றையும்)
வகை (பல வகைகளாகப் பிரித்து பார்ப்பதும்) இல்லை (இல்லாமல் அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற சாதகரை) ஆக (இறைவியாகவே) வணங்கிடும் (அனைத்து உயிர்களும் வணங்கி) தானே (அன்பு செலுத்தும்).
விளக்கம்:
பாடல் #1338 இல் உள்ளபடி இந்த உலகத்தில் பகை என்று அறியப்படுகின்ற எதுவும் இல்லாத சாதகரின் நிலம் முதலாகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலும் மேன்மை நிலை பெறும். இந்த உலகத்தில் இழிவானது என்று அறியப்படுகின்ற எதுவும் நவாக்கிரி சக்கரத்தை தமக்குள் மிகவும் நன்றாக அறிந்து கொண்ட சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். உயிர்கள் என்று உலகத்தவர்களால் சொல்லப்படுகின்ற அனைத்து வகையான உயிர்களையும் ஒரு கூட்டமாகவும் இல்லாமல் பல வகைகளாகப் பிரித்து பார்ப்பதும் இல்லாமல் அனைத்தையும் இறைவனாகவே பார்க்கின்ற சாதகர்களை அனைத்து உயிர்களும் இறைவியாகவே போற்றி வணங்கி அன்பு செலுத்தும்.