பாடல் #1409: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரு
நாடிலி கன்னிக ணாலொன் பதிமரும்
பூவிலி பூவித ழுள்ளே யிருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின்றார் களே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கெடிலி சததிகள முபபத தறுவரு
நாடிலி கனனிக ணாலொன பதிமரும
பூவிலி பூவித ளுளளெ யிருநதவர
நாளிலி தனனை நணுகிநினறார களெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும்
நாடு இலி கன்னிகள் நால் ஒன்பதிமரும்
பூ இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள் இலி தன்னை நணுகி நின்றார்களே.
பதப்பொருள்:
கேடு (எந்தவிதமான தீங்கும்) இலி (இல்லாமல்) சத்திகள் (சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள்) முப்பத்து (முப்பதும்) அறுவரும் (ஆறும் கூட்டி வரும் மொத்தம் முப்பத்தாறு பேரும்)
நாடு (சாதகர் தேடி அடைய வேண்டியது) இலி (இல்லாமல்) கன்னிகள் (தாமாகவே இறைவியோடு சேர்ந்து வருகின்ற என்றும் இளமையுடன் இருக்கும் சக்திகள்) நால் (நான்கும்) ஒன்பதிமரும் (ஒன்பதும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு பேரும்)
பூ (தமக்கென்று எந்த இடமும்) இலி (இல்லாதவர்களாக) பூ (சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின்) இதழ் (இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு) உள்ளே (அதற்கு உள்ளே வந்து) இருந்தவர் (வீற்றிருக்கின்றார்கள்)
நாள் (காலம் என்கிற ஒன்று) இலி (இல்லாதவளாகிய) தன்னை (இறைவியை) நணுகி (நெருங்கியே) நின்றார்களே (இவர்கள் நிற்கின்றார்கள்).
விளக்கம்:
பாடல் #1408 இல் உள்ளபடி எந்தவிதமான தீங்கும் இல்லாமல் சாதகருக்குள் இருக்கின்ற சக்திகள் மொத்தம் முப்பத்தாறு பேர் இருக்கின்றார்கள். சாதகர் தேடி அடைய வேண்டியது இல்லாமல் தாமாகவே இறைவியோடு சேர்ந்து வருகின்ற என்றும் இளமையுடன் இருக்கும் இந்த முப்பத்தாறு சக்திகளும் தமக்கென்று எந்த இடமும் இல்லாதவர்களாக சாதகருக்குள் இருக்கும் சக்கரங்களின் இதழ்களையே தமக்கு இடமாகக் கொண்டு அதன் உள்ளே வீற்றிருக்கின்றார்கள். இவர்கள் முப்பத்தாறு பேரும் காலம் என்கிற ஒன்று இல்லாதவளாகிய இறைவியை நெருங்கியே நிற்கின்றார்கள்.
