பாடல் #1329: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
நீர்தரு சக்கர நேர்தரு வண்ணங்கள்
பார்மதி யும்மிறீ மன்சிறீ யீரான
தாரணி யும்புகழ்த் தையல் நல்லாடன்னைக்
காரணி யும்பொழிற் கண்டு கொள்ளீரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நீரதரு சககர நெரதரு வணணஙகள
பாரமதி யுமமிறீ மனசிறீ யீரான
தாரணி யுமபுகழத தையல நலலாடனனைக
காரணி யுமபொழிற கணடு கொளளீரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நீர் தரு சக்கரம் நேர் தரு வண்ணங்கள்
பார் மதியும் இறீமன் சிறீம் ஈரான
தார் அணியும் புகழ்த் தையல் நல் ஆடன் தனைக்
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே.
பதப்பொருள்:
நீர் (சாதகர்) தரு (தாங்கள் சாதகம் செய்து பெற்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரமானது) நேர் (அவரது சாதகத்திற்கு சமமாக) தரு (தருகின்ற) வண்ணங்கள் (பல விதமான பலன்களில்)
பார் (உலகத்தில் உள்ள) மதியும் (மொத்த அறிவும்) இறீமன் (‘ஹ்ரீம்’ மற்றும்) சிறீம் (‘ஸ்ரீம்’ ஆகிய) ஈரான (இரண்டு விதமான பீஜ மந்திரங்களின் மூலமே பெறுவதும்)
தார் (அழகிய பூக்களை) அணியும் (மாலையாக அணிந்திருக்கும்) புகழ்த் (அனைத்து விதமான புகழ்களுக்கும் உரியவளான) தையல் (இறைவியோடு) நல் (சேர்ந்து உலக நன்மைக்காக) ஆடன் (திருக்கூத்து ஆடிக்கொண்டு இருக்கும்) தன்னைக் (இறைவனையும்)
கார் (மேகங்கள்) அணியும் (மூடியிருக்கும்) பொழில் (அழகிய பூக்கள் பூத்து விளங்கும் சோலையில்) கண்டு (சாதகர் தமது கண்களால்) கொள்ளீரே (தரிசனம் செய்து கொள்ளுங்கள்).
விளக்கம்:
பாடல் #1328 இல் உள்ளபடி சாதகர்கள் சாதகம் செய்து பெற்ற நவாக்கிரி சக்கரமானது அவரது சாதகத்திற்கு சமமாகத் தருகின்ற பல விதமான பலன்களில் முதலில் உலகத்தில் உள்ள மொத்த அறிவும் ‘ஹ்ரீம்’ மற்றும் ‘ஸ்ரீம்’ ஆகிய இரண்டு விதமான பீஜ மந்திரங்களின் மூலமே பெறுகின்றார். அதன் பிறகு அழகிய பூக்களை மாலையாக அணிந்திருக்கும் அனைத்து விதமான புகழ்களுக்கும் உரியவளான இறைவியோடு சேர்ந்து உலக நன்மைக்காக திருக்கூத்து ஆடிக்கொண்டு இருக்கும் இறைவனையும் மேகங்கள் மூடியிருக்கும் அழகிய பூக்கள் பூத்து விளங்கும் சோலையில் சாதகர்கள் தமது கண்களால் தரிசனம் செய்து கொள்வார்கள்.