பாடல் #1417: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
இல்லடைந் தாளுக்கு மில்லாத தொன்றில்லை
யில்லடைந் தானுக் கிறப்பது தானில்லை
யில்லடைந் தானுக் கிமையவர் தானொவ்வர்
ரில்லடைந் தானுக்கு மில்லாதில் லானையே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இலலடைந தாளுககு மிலலாத தொனறிலலை
யிலலடைந தானுக கிறபபது தானிலலை
யிலலடைந தானுக கிமையவர தானொவவர
ரிலலடைந தானுககு மிலலாதில லானையெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இல் அடைந்தாளுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இறப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தான் ஒவ்வர்
இல் அடைந்தானுக்கும் இல்லாது இல் ஆனையே.
பதப்பொருள்:
இல் (சாதகரின் உள்ளத்தையே கோயிலாக) அடைந்தாளுக்கும் (கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு) இல்லாதது (இல்லாதது என்ற எந்த) ஒன்று (ஒன்றுமே) இல்லை (இல்லை)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கு (உள்ளத்தை அடைந்த சாதகருக்கு) இறப்பது (இனி இறப்பது) தான் (என்கிற நிகழ்வு) இல்லை (இல்லை)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கு (உள்ளத்தை அடைந்த சாதகருக்கு) இமையவர் (கண்ணின் இமை போல் உலகத்தை காத்துக் கொண்டு இருக்கின்ற விண்ணவர்கள்) தான் (அனைவரும்) ஒவ்வர் (சரிசமம் ஆவார்கள்)
இல் (இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய) அடைந்தானுக்கும் (உள்ளத்தை அடைந்த சாதகருக்கும்) இல்லாது (இல்லாத) இல் (இடம் என்று எதுவும் இல்லை) ஆனையே (இறைவன் வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட ஆன்மாவுக்கு).
விளக்கம்:
பாடல் #1416 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்தையே கோயிலாக கொண்டு வீற்றிருக்கும் இறைவிக்கு இல்லாதது என்ற எந்த ஒன்றுமே இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு இனி இறப்பது என்கிற நிகழ்வு இல்லை. இறைவி வீற்றிருக்கும் கோயிலாகிய உள்ளத்தை அடைந்த சாதகருக்கு கண்ணின் இமை போல் உலகத்தை காத்துக் கொண்டு இருக்கின்ற விண்ணவர்கள் அனைவருக்கும் சரிசமம் ஆவார்கள். இறைவனே வீற்றிருப்பதால் இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவும் இறைவனைப் போலவே இல்லாத இடம் என்று எதுவும் இல்லை.