பாடல் #1413: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
பொற்கொடி யாளுடன் பூசனை செய்திட
வக்களி யாகிய வாங்காரம் போய்விடு
மற்கடி யாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பொறகொடி யாளுடன பூசனை செயதிட
வககளி யாகிய வாஙகாரம பொயவிடு
மறகடி யாகிய மணடலந தனனுளெ
பிறகொடி யாகிய பெதையைக காணுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பொற் கொடியாள் உடன் பூசனை செய்திட
அக் களி ஆகிய ஆங்காரம் போய்விடும்
மற் கடி ஆகிய மண்டலம் தன் உளே
பிற் கொடி ஆகிய பேதையை காணுமே.
பதப்பொருள்:
பொற் (தங்கம் போல் பிரகாசிக்கின்ற) கொடியாள் (கொடியாக இருக்கின்ற) உடன் (இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து) பூசனை (பூஜைகள்) செய்திட (செய்து கொண்டு இருக்கும் போது)
அக் (அங்கு) களி (கிடைத்த இன்ப) ஆகிய (எண்ணமாகிய) ஆங்காரம் (இறைவி என்னோடு இருக்கின்றாள் என்கிற அகங்காரத்தை) போய்விடும் (சாதகரை விட்டு போக வைத்துவிடும்)
மற் (அதன் பிறகு நிலைபெற்று) கடி (காவலாக) ஆகிய (தம்மைச் சுற்றி இருக்கின்ற) மண்டலம் (மண்டலத்தை) தன் (அதற்கு) உளே (உள்ளேயே)
பிற் (சாதகரோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கின்ற) கொடி (கொடி) ஆகிய (ஆக இருக்கின்ற) பேதையை (குழந்தை போன்ற இறைவியை) காணுமே (தமக்குள்ளே தரிசிக்க முடியும்).
விளக்கம்:
பாடல் #1412 இல் உள்ளபடி தங்கம் போல் பிரகாசிக்கின்ற கொடியாக இருக்கின்ற இறைவியோடு சாதகர் எப்போதும் சேர்ந்தே இருந்து பூஜைகள் செய்து கொண்டு இருக்கும் போது அதில் இறைவி என்னோடு இருக்கின்றாள் என்கிற இன்பமான எண்ணமாகிய அகங்காரம் சாதகரை விட்டு விலகி விடும். அதன் பிறகு சாதகரைச் சுற்றி காவலாக நிலைபெற்று நிற்கின்ற மண்டலத்திற்கு உள்ளேயே சாதகரோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து இருக்கின்ற கொடியாகவும் குழந்தை போலவும் இருக்கின்ற இறைவியை தமக்குள்ளே சாதகரால் தரிசிக்க முடியும்.