பாடல் #1402: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
உண்டாம தோமுக முத்தம மானது
கண்டவிச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகமைந்து கூறுங் கரங்களு
மொன் றிரண்டாகவே மூன்றுநா லானதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உணடாம தொமுக முததம மானது
கணடவிச சததி சதாசிவ நாயகி
கொணட முகமைநது கூறுங கரஙகளு
மொன றிரணடாகவெ மூனறுநா லானதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உண்டு ஆம் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே.
பதப்பொருள்:
உண்டு (இறைவியின் பேரொளியோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற சாதகரின் ஆன்மாவிற்குள் இறைவியின் அருளால் உருவாகும்) ஆம் (சக்தியின் அம்சமே) அதோ (இறைவனின் ஆறாவது முகமான அதோ) முகம் (முகமாக) உத்தமம் (எப்போதும் நிலையாக இருக்கின்ற உன்னதமான இறை) ஆனது (நிலை ஆகின்றது)
கண்ட (சாதகர் தமக்குள் தரிசித்த) இச் (இந்த) சத்தி (இறைவியே) சதாசிவ (அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியோடு) நாயகி (அசையும் சக்தியாக எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பராசக்தி ஆவாள்)
கொண்ட (அவளுடைய அருளால் சாதகரும் இறை நிலைக்கு சரிசமமாகுவதற்கு எடுத்துக் கொண்ட) முகம் (முகங்கள்) ஐந்து (ஐந்து முகங்களாகவும்) கூறும் (அதனோடு சேர்ந்து இயங்குகின்ற) கரங்களும் (கரங்கள்)
ஒன்று (ஒன்றும்) இரண்டு (இரண்டும்) ஆகவே (கூட்டி அதோடு) மூன்று (மூன்றும்) நாலு (நான்கும் கூட்டி மொத்தம்) ஆனதே (பத்து கரங்களாக ஆகின்றது).
விளக்கம்:
பாடல் #1401 இல் உள்ளபடி இறைவியின் பேரொளியோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற சாதகரின் ஆன்மாவிற்குள் இறைவியின் அருளால் உருவாகும் சக்தியின் அம்சமே இறைவனின் ஆறாவது முகமான அதோ முகமாக எப்போதும் நிலையாக இருக்கின்ற உன்னதமான இறை நிலை ஆகின்றது. சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியே அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தியோடு அசையும் சக்தியாக எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பராசக்தி ஆவாள். அவளுடைய அருளால் சாதகரும் இறை நிலைக்கு சரிசமமாகுவதற்கு எடுத்துக் கொண்ட முகங்கள் ஐந்து முகங்களாகவும் அதனோடு சேர்ந்து இயங்குகின்ற பத்து கரங்களாகவும் ஆகின்றார்.
கருத்து:
அண்ட சராசரங்களை தனது ஆறாவது முகமான அதோமுகத்தால் தாங்கி இருக்கின்ற இறைவன் அதிலுள்ள அனைத்து உலகங்களிலும் ஐந்து விதமான தொழில்களைப் புரிவதற்கு ஐந்து விதமான முகங்களை கொண்டு இருக்கின்றார். இறைவனோடு ஒன்றாக கலப்பதற்கு சாதகரும் இதே நிலையை அடைய வேண்டும் என்று இறைவி சாதகருக்கு அதோமுகத்தில் உன்னதமான நிலையையும் ஐந்து முகங்களையும் பத்து கரங்களையும் கொடுத்து அருளுகின்றாள்.
ஐந்து முகங்களும் அதன் தொழில்களும்:
- சத்யோ சோதம் – படைத்தல்
- வாமதேவம் – காத்தல்
- அகோரம் – அழித்தல்
- தற்புருடம் – மறைத்தல்
- ஈசானம் – அருளல்