பாடல் #1383: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைந்திடு மும்முளே
நாசம தெல்லா நடந்திடு மையாண்டிற்
காசினி மேலமர் கண்ணுத லாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பாசம தாகிய வெரை யறுததிடடு
நெசம தாக நினைநதிடு முமமுளெ
நாசம தெலலா நடநதிடு மையாணடிற
காசினி மெலமர கணணுத லாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பாசம் அது ஆகிய வேரை அறுத்து இட்டு
நேசம் அது ஆக நினைத்து இடும் உம் உள்ளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண் நுதல் ஆகுமே.
பதப்பொருள்:
பாசம் (பாசம் என்கிற) அது (உலகப் பற்றுக்கள்) ஆகிய (ஆக இருக்கின்ற ஆசையை) வேரை (வேரோடு) அறுத்து (அறுத்து) இட்டு (எறிந்து விட்டு)
நேசம் (உண்மையான அன்பையே) அது (சிவம்) ஆக (என்று) நினைத்து (நினைத்துக் கொண்டு) இடும் (வைத்து) உம் (சாதகர் தமக்கு) உள்ளே (உள்ளேயே தியானித்து இருந்தால்)
நாசம் (தீமையானது) அது (என்று உலகத்தில் இருக்கின்ற) எல்லாம் (அனைத்தும்) நடந்திடும் (சாதகரை விட்டு விலகி விடும்) ஐ (ஐந்து) ஆண்டில் (ஆண்டுகளில்)
காசினி (பூமிக்கு) மேல் (மேலாக) அமர் (அமர்ந்திருக்கின்ற சாதகர்) கண் (ஞானக் கண்ணை) நுதல் (நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே) ஆகுமே (ஆகிவிடுவார்).
விளக்கம்:
பாடல் #1382 இல் உள்ளபடி இறைவியானவள் தனது திருக்கரங்களில் ஏந்தி இருக்கும் பாசம் என்கிற கயிறாக இருக்கின்ற உலகப் பற்றுக்கள் எனும் ஆசையை வேரோடு அறுத்து எறிந்து விட்டு உண்மையான அன்பையே சிவமாக நினைத்துக் கொண்டு சாதகர் தமக்கு உள்ளே சிவமான அன்பையே வைத்து தியானித்து இருக்க வேண்டும். அப்படி தியானித்து இருந்தால் ஐந்து ஆண்டுகளில் தீமையானது என்று உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் சாதகரை விட்டு விலகி விடும். அதன் பிறகு பூமிக்கு மேலாக அமர்ந்திருக்கின்ற சாதகர் ஞானக் கண்ணை நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே ஆகிவிடுவார்.