பாடல் #1380

பாடல் #1380: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற மூலத தெழுநத முழுமலர
பொகினற பெரொளி யாய மலரதாயப
பொகினற பூரண மாக நிறைநதபின
செரகினற செநதழல மணடல மானதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர்
போகின்ற பேர் ஒளி ஆய மலர் அது ஆய்
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே.

பதப்பொருள்:

ஆகின்ற (நவாக்கிரி சக்கரத்தின்) மூலத்து (சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரின் மூலாதாரத்திலிருந்து) எழுந்த (மேலே எழுந்து வருகின்ற) முழு (முழுமை பெற்ற) மலர் (ஜோதி வடிவான சக்தியானது)
போகின்ற (சாதகரிடமிருந்து வெளிப்பட்டு வரும் போது) பேர் (மிகப் பெரும்) ஒளி (ஒளியாக) ஆய (விரிந்து) மலர் (பேரொளியான மலராகவே) அது (நவாக்கிரி சக்கரத்தின் சக்தியானது) ஆய் (மாறுகின்றது)
போகின்ற (அப்போது அது சென்று பரவுகின்ற அனைத்து இடத்திலும்) பூரணம் (பரிபூரணம்) ஆக (பெற்றதாக) நிறைந்த (முழுவதுமாக நிறைகின்றது) பின் (அதன் பிறகு)
சேர்கின்ற (அனைத்து உயிர்களும் சென்று சேருகின்ற) செந்தழல் (செம்மையான நெருப்பு) மண்டலம் (மண்டலமாகவே) ஆனதே (அந்த பேரொளியான மலர் ஆகி விடுகின்றது).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தின் சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரின் மூலாதாரத்திலிருந்து மேலே எழுந்து வருகின்ற முழுமை பெற்ற ஜோதி வடிவான சக்தியானது சாதகரிடமிருந்து வெளிப்பட்டு வரும் போது மிகப் பெரும் ஒளியாக விரிந்து நவாக்கிரி சக்கரத்தின் சக்தியே பேரொளியான மலராக மாறுகின்றது. அப்போது அது சென்று பரவுகின்ற அனைத்து இடத்திலும் பரிபூரணமாக முழுவதுமாக நிறைகின்றது. அதன் பிறகு பேரொளியான மலரில் பரிபூரணமான இந்த சக்தியானது அனைத்து உயிர்களும் சென்று சேருகின்ற நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலமாகவே ஆகி விடுகின்றது.

கருத்து:

நவாக்கிரி சக்கர சாதகத்தில் முழுமை பெற்ற சாதகரிடமிருந்து வெளிவரும் ஜோதி வடிவமான சக்தியானது அண்ட சராசரங்களுக்கும் பரவுகின்ற பேரொளியான மலராக விரிகின்றது. அப்படி விரிந்த மலருக்குள் இருக்கும் சக்தியானது மகரந்தத்தால் வண்டுகளை ஈர்ப்பது போல தனக்குள் இருக்கும் சக்தியால் உயிர்களை ஈர்த்து நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலமாக இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.