பாடல் #1363: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
கலப்பறி யார்கடல் சூழுல கெல்லா
முலப்பறி யாருட லோடுயிர் தன்னை
சிலப்பறி யார்பல தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கலபபறி யாரகடல சூழுல கெலலா
முலபபறி யாருட லொடுயிர தனனை
சிலபபறி யாரபல தெவரை நாடித
தலைபபறி யாகச சமைநதவர தாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னை
சிலப்பு அறியார் பல தேவரை நாடி
தலைப்பு அறியாக சமைந்தவர் தாமே.
பதப்பொருள்:
கலப்பு (தமது உடலோடு இறைவியும் ஒன்றாகக் கலந்து இருப்பதை) அறியார் (அறியாதவர்கள்) கடல் (பெரும் கடல்களால்) சூழ் (சூழ்ந்து இருக்கின்ற) உலகு (உலகங்களில்) எல்லாம் (எல்லாம் சென்று இறைவியைத் தேடி அலைகிறார்கள்)
உலப்பு (தமது உடலுக்கு இறப்பு என்ற ஒன்று இருப்பதை) அறியார் (அறியாதவர்கள்) உடலோடு (தமது உடலோடு) உயிர் (உயிரும்) தன்னை (ஒன்றாகக் கலந்து இருப்பதைப் போலவே இறைவியும் கலந்து இருக்கின்றாள் என்கிற)
சிலப்பு (சிறப்பான உண்மையை) அறியார் (அறியாதவர்களாக) பல (பல விதமான) தேவரை (தெய்வங்களை) நாடி (தேடிச் சென்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்)
தலைப்பு (இவர்கள் தேடி அலையும் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவியாக இறைவியே இருக்கின்றாள் என்பதை) அறியாக (அறியாதவர்களாக) சமைந்தவர் (பல வித குழப்பங்களுக்கு) தாமே (ஆளாகிறார்கள்).
விளக்கம்:
பாடல் #1362 இல் உள்ளபடி இறைவி உடலோடு கலந்து இருக்கின்ற தன்மையை அறியாதவர்கள் பெரும் கடல்களால் சூழ்ந்து இருக்கின்ற உலகங்களில் எல்லாம் சென்று இறைவியைத் தேடி அலைகிறார்கள். தமது உடலுக்கு இறப்பு என்ற ஒன்று இருப்பதை அறியாதவர்கள் தமது உடலோடு உயிரும் ஒன்றாகக் கலந்து இருப்பதைப் போலவே இறைவியும் கலந்து இருக்கின்றாள் என்கிற சிறப்பான உண்மையை அறியாதவர்களாக பல விதமான தெய்வங்களை தேடிச் சென்று வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். இவர்கள் தேடி அலையும் அனைத்து தெய்வங்களுக்கும் தலைவியாக இறைவியே இருக்கின்றாள் என்பதை அறியாதவர்களாக பல வித குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.