பாடல் #1333: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
சேவடி சேரச் செறிய விருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய விருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
செவடி செரச செறிய விருநதவர
நாவடி யுளளெ நவினறுநின றெததுவர
பூவடி யிடடுப பொலிய விருநதவர
மாவடி காணும வகையறி வாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர்
பூவடி இட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகை அறிவாரே.
பதப்பொருள்:
சேவடி (இறைவியின் வணங்கத் தக்க திருவடிகளை) சேரச் (சேர்ந்தே இருந்து) செறிய (அதை இடைவிடாமல் நினைத்து பக்குவம் பெற்று) இருந்தவர் (இருக்கின்ற சாதகர்கள்)
நாவடி (தமது அடி நாக்கின்) உள்ளே (உள்ளுக்குள் வைத்து) நவின்று (மந்திரங்களை ஓதி) நின்று (தியானத்தில் இருந்து) ஏத்துவர் (போற்றி வணங்குபவர்களாகவும்)
பூவடி (இறைவியின் பூப்போன்ற திருவடிகளை) இட்டுப் (தமது மனதில் பதிய வைத்து) பொலிய (பிரகாசம் பெற்று) இருந்தவர் (இருக்கின்றவர்களாகவும்)
மாவடி (இறைவியின் மாபெரும் திருவடிகளை) காணும் (கண்டு தரிசிக்கும்) வகை (முறைகளை முழுவதும்) அறிவாரே (அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்).
விளக்கம்:
பாடல் #1332 இல் உள்ளபடி இறைவியின் வணங்கத் தக்க திருவடிகளை சேர்ந்தே இருந்து அதை இடைவிடாமல் நினைத்து பக்குவம் பெற்று இருக்கின்ற சாதகர்கள் தமது அடி நாக்கின் உள்ளுக்குள் வைத்து உதடு அசையாமல் நாக்கை லேசாக அசைத்து மந்திரங்களை ஓதி தியானத்தில் இருந்து போற்றி வணங்குபவர்களாகவும், இறைவியின் பூப்போன்ற திருவடிகளை தமது மனதில் பதிய வைத்து பிரகாசம் பெற்று இருக்கின்றவர்களாகவும், இறைவியின் மாபெரும் திருவடிகளை கண்டு தரிசிக்கும் முறைகளை முழுவதும் அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.