பாடல் #1155: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
நாலித ழாறில் விரிந்தது தொண்ணூறு
தானித ழானவை நாற்பத்து நாலுள
பாலித ழானவள் பங்கய மூலமாய்த்
தானித ழாகித் தரித்திருந் தாளே.
விளக்கம்:
நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியானவள் அதற்கு மேலுள்ள ஆறு சக்கரங்களுக்கும் விரிந்து சென்று உடலில் இருக்கும் 96 தத்துவங்களில் 5 சுத்த தத்துவமும் புருடனும் (ஆன்மா) தவிர மீதி உள்ள 90 தத்துவங்களாக இருக்கின்றாள். மூலாதாரத்திற்கும் புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் இடைப்பட்ட நான்கு சக்கரங்களில் உள்ள மொத்தம் நாற்பத்து நான்கு இதழ்களாகவும் குண்டலினி சக்தியே வீற்றிருந்து அங்கிருந்து ஆக்ஞா சக்கரம் சென்று அதையும் தாண்டி தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் இறைவனுடன் சேர்ந்து பூரண சக்தியாகி அங்கிருந்து கீழே இருக்கும் ஆறு சக்கரங்களையும் தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.
கருத்து: உயிர்களுக்குள் ஆதாரமாக இருக்கும் குண்டலினி சக்தியை இறைவி இறைவனுடன் சேர்ந்து பூரண சக்தியாக தாங்கிக் கொண்டு உடலிலுள்ள 90 தத்துவங்களை இயங்கிக் கொண்டு இருக்கின்றாள்.
குறிப்பு: ஆதாரம் (தாங்கி இருக்கும் பொருள்) = பூரண சக்தி. ஆதேயம் (தாங்கப் படும் பொருள்) = ஆறு ஆதார சக்கரங்கள். பயன் = உடலிலுள்ள 90 தத்துவங்களை இயக்குவது.