பாடல் #1514

பாடல் #1514: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருட்டறை மூலை யிருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புணர்ந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருடடறை மூலை யிருநத குமரி
குருடடுக கிழவனைக கூடல குறிததுக
குருடடினை நீககிக குணமபல காடடி
மருடடி யவனை மணமபுணரந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருட்டு அறை மூலை இருந்த குமரி
குருட்டு கிழவனை கூடல் குறித்து
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புணர்ந்தாளே.

பதப்பொருள்:

இருட்டு (இருளில் இருக்கின்ற / மாயை எனும் இருளில் இருக்கின்ற) அறை (அறைக்குள் / உடம்பிற்குள்) மூலை (ஒரு மூலையில் / மூலாதாரத்தில்) இருந்த (வீற்றிருக்கின்ற) குமரி (ஒரு இளம் கன்னியானவள் / அருள் சக்தியானவள்)
குருட்டு (கண் தெரியாத குருடனாகிய / மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற) கிழவனை (கிழவனோடு / பல பிறவி எடுத்த ஆன்மாவோடு) கூடல் (ஒன்றாக சேருவது) குறித்து (எனும் குறிக்கோளுடன் / எனும் அருள் கருணையுடன்)
குருட்டினை (அவனது குருட்டை / அந்த ஆன்மாவின் மாயையை) நீங்கி (நீக்கி) குணம் (நல்ல அழகுகளை / நன்மையான உண்மைகளை) பல (பல விதங்களில்) காட்டி (காண்பித்து / உணர வைத்து)
மருட்டி (அவளுடைய அழகில் மயங்க வைத்து / பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து) அவனை (அந்த கிழவனோடு / பல பிறவி எடுத்த ஆன்மாவோடு) மணம் (திருமணம் புரிந்து / கலந்து நின்று) புணர்ந்தாளே (எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாளே / எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே).

உவமை விளக்கம்:

இருளில் இருக்கின்ற அறைக்குள் ஒரு மூலையில் வீற்றிருக்கின்ற ஒரு இளம் கன்னியானவள் கண் தெரியாத குருடனாகிய கிழவனோடு ஒன்றாக சேருவது எனும் குறிக்கோளுடன் அவனது குருட்டை நீக்கி நல்ல அழகுகளை பல விதங்களில் காண்பித்து அவளுடைய அழகில் மயங்க வைத்து அந்த கிழவனோடு திருமணம் புரிந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருந்தாளே.

கருத்து விளக்கம்:

மாயை எனும் இருளில் இருக்கின்ற உடம்பிற்குள் மூலாதாரத்தில் வீற்றிருக்கின்ற அருள் சக்தியானவள் மாயை மறைத்து இருப்பதால் உண்மை தெரியாமல் இருக்கின்ற பல பிறவி எடுத்த ஆன்மாவோடு ஒன்றாக சேருவது எனும் அருள் கருணையுடன் அந்த ஆன்மாவின் மாயையை நீக்கி நன்மையான உண்மைகளை பல விதங்களில் உணர வைத்து பேரின்பத்தில் ஆன்மாவை மயங்க வைத்து பல பிறவி எடுத்த ஆன்மாவோடு கலந்து நின்று எப்போதும் ஆன்மாவோடு சேர்ந்தே இருந்தாளே.

பாடல் #1515

பாடல் #1515: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

தீம்புன லான திகையது சிந்திக்கி
லாம்புன லாய்வறி வார்க்கமு தாய்நிற்குந்
தேம்புன லான தெளிவறி வார்கட்குக்
கோம்புன லாடிய கொல்லையு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தீமபுன லான திகையது சிநதிககி
லாமபுன லாயவறி வாரககமு தாயநிறகுந
தெமபுன லான தெளிவறி வாரகடகுக
கொமபுன லாடிய கொலலையு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தீம் புனல் ஆன திகை அது சிந்திக்கில்
ஆம் புனல் ஆய் அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புனல் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புனல் ஆடிய கொல்லையும் ஆமே.

பதப்பொருள்:

தீம் (நல்ல சுவையோடு இனிமையான / மூலாதார அக்னியில் இருக்கின்ற) புனல் (தண்ணீர் / அமிழ்தம்) ஆன (ஆனது) திகை (எந்த திசையில் இருக்கின்றது) அது (என்பதை) சிந்திக்கில் (சிந்தித்து பார்த்தால்)
ஆம் (மேலிருந்த வருகின்ற / சகஸ்ரதளத்தில் இருந்து வருகின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீர் / அமிழ்த நீர்) ஆய் (ஆகவே) அறிவார்க்கு (அதை அறிந்தவர்களுக்கு) அமுதாய் (நல்ல நீராக / நன்மை தரும் அமிழ்தமாக அதுவே) நிற்கும் (நிற்கும்)
தேம் (அப்போது சேர்ந்து இருக்கின்ற / சகஸ்ரதளத்திலிருந்து இறங்கி வந்து அன்னாக்கில் தங்கி இருக்கின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீர் / அமிழ்தம்) ஆன (ஆகிய) தெளிவு (கிணற்றில் / ஞானத்தை தெளிவாக)
அறிவார்கட்கு (சேமித்து வைக்கும் முறை அறிந்தவர்களுக்கு / அறிந்து உணர்ந்தவர்களுக்கு)
ஓம் (ஓடுகின்ற / அன்னாக்கிலிருந்து உடல் முழுவதும் பரவுகின்ற) புனல் (ஆற்றுத் தண்ணீரினால் / அமிழ்த நீரினால்) ஆடிய (பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து / உடலுக்கு சக்தியும் பேரின்பமும் கொடுத்து) கொல்லையும் (விவசாய நிலத்தில் பயிர்களை வளர்க்கும் முறை / ஞானத்தை வளர்க்கின்ற முறை) ஆமே (அது ஆகும்).

உவமை விளக்கம்:

நல்ல சுவையோடு இனிமையான தண்ணீரானது எந்த திசையில் இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்த்தால் மேலிருந்த வருகின்ற ஆற்றுத் தண்ணீராகவே அதை அறிந்தவர்களுக்கு நல்ல நீராக அதுவே நிற்கும். அப்போது சேர்ந்து இருக்கின்ற ஆற்றுத் தண்ணீராகிய கிணற்றில் சேமித்து வைக்கும் முறை அறிந்தவர்களுக்கு ஓடுகின்ற ஆற்றுத் தண்ணீரினால் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்து விவசாய நிலத்தில் பயிர்களை வளர்க்கும் முறை அதுவாகும்.

கருத்து விளக்கம்:

மூலாதார அக்னியில் இருக்கின்ற அமிழ்தமானது எந்த திசையில் இருக்கின்றது என்பதை சிந்தித்து பார்த்தால் சகஸ்ரதளத்தில் இருந்து வருகின்ற அமிழ்த நீராகவே அதை அறிந்தவர்களுக்கு நன்மை தரும் அமிழ்தமாக அதுவே நிற்கும். அப்போது சகஸ்ரதளத்திலிருந்து இறங்கி வந்து அன்னாக்கில் தங்கி இருக்கின்ற அமிழ்தமாகிய ஞானத்தை தெளிவாக அறிந்து உணர்ந்தவர்களுக்கு அன்னாக்கிலிருந்து உடல் முழுவதும் பரவுகின்ற அமிழ்த நீரினால் உடலுக்கு சக்தியும் பேரின்பமும் கொடுத்து ஞானத்தை வளர்க்கின்ற முறை அதுவாகும்.

பாடல் #1516

பாடல் #1516: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருணீக்கி யெண்ணில் பிறவி கடத்தி
யருணீங்கா வண்ணமே யாதி யருளு
மருணீங்கா வானவர் கோனோடுங் கூடிப்
பொருணீங்கா வின்பம் புலம்பயில் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருணீககி யெணணில பிறவி கடததி
யருணீஙகா வணணமெ யாதி யருளு
மருணீஙகா வானவர கொனொடுங கூடிப
பொருணீஙகா வினபம புலமபயில தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோனோடும் கூடி
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே.

பதப்பொருள்:

இருள் (மாயையை) நீக்கி (நீக்கி விட்டு) எண்ணில் (தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத) பிறவி (பிறவிகளை) கடத்தி (அந்தந்த பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும் படி செய்து)
அருள் (இறையருளானது) நீங்கா (எப்போதும் தம்மை விட்டு நீங்கி விடாத) வண்ணமே (படியே) ஆதி (ஆதிப் பரம்பொருள்) அருளும் (அருளி)
மருள் (தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம்) நீங்கா (நீங்காமல் இருக்கின்ற) வானவர் (வானவர்களின்) கோனோடும் (அரசனாக இருக்கின்ற இறைவனோடு) கூடி (எப்போதும் சேர்ந்தே இருக்கும் படி செய்து)
பொருள் (என்ன வேண்டுமென்றாலும் அதை பெற்றுக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருந்து) நீங்கா (நீங்கி விடாத படி) இன்பம் (பேரின்பத்திலேயே) புலம் (இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே) பயில் (தாம் செய்து கொண்டு இருக்கின்ற சாதகத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் படி செய்து) தானே (அருளுகின்றது இறை சக்தி).

விளக்கம்:

மாயையை நீக்கி விட்டு தாம் எடுக்க வேண்டிய எண்ண முடியாத பிறவிகளை அந்தந்த பிறவிகளை எடுக்காமலேயே கடந்து போகும் படி செய்து, இறையருளானது எப்போதும் தம்மை விட்டு நீங்கி விடாத படியே ஆதிப் பரம்பொருள் அருளி, தனக்கென்று ஒரு பெயருடன் அகங்காரம் நீங்காமல் இருக்கின்ற வானவர்களின் அரசனாக இருக்கின்ற இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் படி செய்து, என்ன வேண்டுமென்றாலும் அதை பெற்றுக் கொண்டே இருக்கின்ற நிலையில் இருந்து நீங்கி விடாத படி பேரின்பத்திலேயே இந்த உலகத்தில் தாம் இருக்கின்ற இடத்திலேயே தாம் செய்து கொண்டு இருக்கின்ற சாதகத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் படி செய்து அருளுகின்றது இறை சக்தி.

பாடல் #1517

பாடல் #1517: ஐந்தாம் தந்திரம் – 17. சத்தி நிபாதம் (அருள் சக்தி மேலிருந்து கீழ் இறங்கி வருகின்ற தன்மை)

இருள்சூ ழறையி லிருந்தது நாடில்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
யருள்சூ ழிறைவனு மம்மையு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருளசூ ழறையி லிருநதது நாடில
பொருளசூழ விளககது புககெரிந தாபபொல
மருளசூழ மயககதது மாமலர நநதி
யருளசூ ழிறைவனு மமமையு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போல்
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.

பதப்பொருள்:

இருள் (மாயையால்) சூழ் (சூழப் பட்டு இருக்கின்ற) அறையில் (அறையாகிய உடம்பிற்குள்) இருந்தது (மறைந்து இருக்கின்ற உண்மை பொருளை) நாடில் (தேடி அடைந்தால்)
பொருள் (இருண்ட அறையில் பொருள்கள்) சூழ் (சுற்றி இருப்பதை) விளக்கு (காண்பிக்கும் விளக்கு) அது (அது போலவே) புக்கு (மூலாதாரத்தில் இருக்கின்ற சோதியை) எரிந்தால் (சாதகத்தின் மூலம் விளக்கு ஏற்றி வைத்தது) போல் (போல எரிய செய்தால்)
மருள் (மாயை) சூழ் (சூழ்ந்த) மயக்கத்து (மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல்) மா (இதயத் தாமரையாகிய மாபெரும்) மலர் (மலரில் வீற்றிருக்கின்ற) நந்தி (குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு)
அருள் (அவரே அருள்) சூழ் (சூழ்ந்து இருக்கின்ற) இறைவனும் (தந்தையாகவும்) அம்மையும் (தாயாகவும்) ஆமே (இருப்பார்).

விளக்கம்:

மாயையால் சூழப் பட்டு இருக்கின்ற அறையாகிய உடம்பிற்குள் மறைந்து இருக்கின்ற உண்மை பொருளை தேடி அடைந்தால், இருண்ட அறையில் தம்மை சுற்றி இருக்கின்ற பொருள்களை காண்பிக்கும் விளக்கைப் போலவே மூலாதாரத்தில் இருக்கின்ற சோதியை சாதகத்தின் மூலம் ஏற்றி வைத்தால், மாயை சூழ்ந்த மயக்கத்தில் இதுவரை வெளிப்படாமல் இதயத் தாமரையாகிய மாபெரும் மலரில் வீற்றிருக்கின்ற குருநாதராகிய இறைவன் வெளிப்பட்டு அவரே அருள் சூழ்ந்து இருக்கின்ற தந்தையாகவும் தாயாகவும் இருப்பார்.