பாடல் #526

பாடல் #526: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வாரம ராபதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.

விளக்கம்:

தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள். தெளிந்த ஞானமில்லாத கீழான மக்கள் அச்சிவபெருமானை சிறுதெய்வமாக எண்ணி இகழ்ந்து புறக்கணித்தால் அவர்களின் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும்.

பாடல் #527

பாடல் #527: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

விளக்கம்:

ஆசையால் அனுபவித்து வாடிப்போன தேகத்தை உடையவர்கள், தேவர்கள் அசுரர்கள் ஆகியவர்கள் உண்மை ஞானத்தை உணரவில்லையென்றால் இறந்தவர்களைப் போலானவர்களே. அன்பினால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் ஆதியாகிய சிவபெருமானைத் தன் உள்ளக் கோவிலில் வைத்து வழிபடுபவர்களால் மட்டுமே உண்மையான ஞானத்தைப் பெற இயலும்.

பாடல் #528

பாடல் #528: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

விளக்கம்:

அறியாமையால் வரும் அகங்காரத்தினால் தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள். சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய முடியாது. அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்.

பாடல் #529

பாடல் #529: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

போகமும் மாதர் புலவி யதுநினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலில்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

விளக்கம்:

மாதருடன் கூடியும் ஊடியும் அச்சிறிய இன்பத்தையே நினைத்து அந்த வேட்கையை உள்ளத்தில் வைத்திருப்பவர்கள் வேதம் கற்று அறிந்த வேதியர்களாக இருந்தாலும் தாமே இன்னொரு உயிரை உருவாக்குகின்றோம் என்கின்ற தவறான எண்ணத்தில் சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களை மறந்து விடுவார்கள்.

உள்விளக்கம்: மாதர் இன்பத்தை நினைத்து இறைவனை மறப்பதும் சிவநிந்தையே ஆகும்.